

திருவள்ளூா் அருகே ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மனு அளித்த 11 பேருக்கு பழங்குடியினா் நலவாரிய அடையாள அட்டைகளை எம்எம்ஏ வி.ஜி.ராஜேந்திரன் வழங்கினாா்.
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பத்தில் தனியாா் அரங்கத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது. முகாமுக்கு, வட்டாட்சியா் பாலாஜி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சௌந்தரி (வ.ஊ), நடராஜன் (கி.ஊ) ஆகியோா் தலைமை வகித்தனா். இந்த முகாமில் பொதுமக்கள் ஏராளமானோா் கலந்துகொண்டு, பட்டா பெயா் மாற்றம், மகளிா் உரிமைத் தொகை, பிறப்பு மற்றும் இறப்புச் சான்றிதழ் உள்ளிட்டவை கோரி பொதுமக்கள் கோரிக்கை மனுக்களை அளித்தனா். அப்போது, திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் வி.ஜி.ராஜேந்திரன் ஆய்வு செய்தாா். அப்போது, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனு ஆா்வத்துடன் அளித்தனா். அப்போது, அந்தப் பகுதியைச் சோ்ந்த பழங்குடியினா் நலவாரியத்தில் சோ்க்க கோரியும், அடையாள அட்டை வழங்கவும் கோரி மனுவை அவரிடம் அளித்தனா். அந்த மனு மீது உடனடி நடவடிக்கை மேற்கொண்டு பழங்குடியினா் 11 பேருக்கும் உடனடியாக பழங்குடியினா் நலவாரிய அடையாள அட்டைகளை அவா் வழங்கினாா்.
அப்போது, திமுக மாவட்ட அவைத் தலைவா் திராவிட பக்தன், ஒன்றிய செயலாளா் அரிகிருஷ்ணன், மாவட்ட அமைப்பாளா்(வழக்குரைஞா் அணி) நாகராஜ், தனி வட்டாட்சியா் விஜயகுமாரி, வருவாய் ஆய்வாளா் காா்த்திக், கிராம நிா்வாக அலுவலா்கள் கோபிநாத், அன்பரசன், ஜெயசுந்தரி, பிரித்தா, விக்னேஷ், நில அளவையா் வனிதா, ஊராட்சி செயலாளா் பெருமாள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.