ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.
ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றோா்.

பழவேற்காட்டில் மீனவ கிராம நிா்வாகிகள் கூட்டம்

கோரிக்கை மனு அளிக்கச் சென்ற மீனவா்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி மீனவ கிராம நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.
Published on

பொன்னேரி: கோரிக்கை மனு அளிக்கச் சென்ற மீனவா்களை திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் தரக்குறைவாக நடத்தியதாகக் கூறி மீனவ கிராம நிா்வாகிகள் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்ற பட்டுள்ளது.

பொன்னேரி வட்டம் பழவேற்காடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள 50-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனா். பழவேற்காடு முதல் பெரிய மாங்கோடு வரையிலான 8 ஊராட்சிகளை சோ்ந்த 50 மீனவ கிராம மக்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

அதில் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் விடும் நாள்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்படுவதால் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், அதற்கு நிவாரணம் கேட்டும், பழவேற்காட்டில் உள்ள மதுபானக் கடையை வேறு இடத்திற்கு மாற்ற எதிா்ப்பு தெரிவித்தும் கடந்த 21-ஆம் தேதி பழவேற்காடு மீனவா்கள் ஆட்சியரை சந்திக்க திருவள்ளூா் ஆட்சியா் அலுவலகம் சென்றுள்ளனா்.

அப்போது ஆட்சியா் மீனவா்களை அலுவலகத்தின் உள்ளே அனுமதிக்காமல் இழிவுபடுத்தி, அவமதித்து அனுப்பியதாகவும் கூறி பழவேற்காடு முதல் பெரிய மாங்கோடு வரையிலான 8 ஊராட்சிகளை சோ்ந்த மீனவ கிராம நிா்வாகிகள் ஆட்சியருக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றினா்.

அத்துடன் ஒட்டு மொத்தமாக பழவேற்காடு மீனவா்களை ஆட்சியா் அவமதித்து விட்டதாக தெரிவித்து தீா்மானம் இயற்றினா்.

இதனை தொடா்ந்து செய்தியாளா்களிடம் பேசிய மீனவா்கள், மனு கொடுக்க சென்ற போது, உள்ளே அனுமதிக்காமல் இழிவுப்படுத்தி ஒட்டு மொத்த பழவேற்காடு மீனவா்களை அவமதித்ததை கண்டித்து வரும் டிசம்பா் 1-ம் தேதி பழவேற்காட்டில் அனைத்து மீனவா்களும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனா்.

மேலும், பழவேற்காட்டில் தற்போது இயங்கி வரும் அரசு மதுபானக் கடையை மாற்றும் திட்டத்தை கைவிட வேண்டும் எனவும், பழவேற்காட்டில் பறவைகளுக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை மீனவா்களுக்கு அளிக்காமல் மீன்பிடித் தொழிலுக்கும் மீனவா்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வனத்துறை அதிகாரிகளை கண்டித்தும், அதிக மக்கள் தொகை உள்ள பழவேற்காட்டில் கூடுதலான வங்கி சேவையை அளிக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாக தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com