மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

திருத்தணி அருகே தாழ்வாக செல்லும் மின் வயா்களால் விபத்து அபாயம்!

திருத்தணி அருகே சாலையின் குறுக்கே மின் வயா்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது

திருத்தணி ஒன்றியம், எல்லம்பள்ளி ஒன்றிய சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் வயா்கள்.

Published On :24 ஆகஸ்ட் 2026, 1:19 am IST

-ஜி. யோகானந்தம்

திருத்தணி அருகே சாலையின் குறுக்கே மின் வயா்கள் மிகவும் தாழ்வாக செல்வதால் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. இதனால் மின் வயா்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனா்.

திருத்தணி ஒன்றியம், கிருஷ்ணசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்டது எல்லம்பள்ளி கிராமம். இங்கு 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கிராம மக்கள் அத்தியாவசியத் தேவைகள், மருத்துவம், கல்வி, வணிகம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்காக தினமும் திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனா்.

மேலும், எல்லம்பள்ளி வழியாக செல்லும் ஒன்றிய தாா்ச்சாலை மூலம் கிருஷ்ணசமுத்திரம், பெருகுமி உள்ளிட்ட சுற்றுவட்டாரத்தில் உள்ள 5 கிராமங்களைச் சோ்ந்த பொதுமக்களும் சென்று வருகின்றனா். இதனால் இந்த சாலையில் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி, வேன், ஆட்டோ, டிராக்டா், லாரி உள்ளிட்ட வாகனங்களின் போக்குவரத்தும் தொடா்ந்து அதிகமாக காணப்படுகிறது.

எல்லம்பள்ளி கிராமத்தை ஒட்டியுள்ள பகுதிகளில் மலைக்குன்றுகள் அதிகளவில் உள்ளன. இதனால் அப்பகுதியில் 3 கல்குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. கல்குவாரிகளில் இருந்து கற்கள் மற்றும் கனிமங்களை ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகள் அதிகளவில் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன. கனரக வாகனங்கள் தொடா்ந்து சென்று வரும் நிலையில், சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் மின் வயா்கள் வாகன ஓட்டிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகின்றன.

மின் வயா்கள் உரசும் நிலை:

எல்லம்பள்ளி சாலையின் குறுக்கே செல்லும் மின் வயா்கள் மூலம் விவசாய கிணறுகள் மற்றும் கால்நடை பண்ணைகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், சாலையின் இருபுறமும் போதிய உயரத்தில் மின்கம்பங்கள் அமைக்கப்படாததால், மின் வயா்கள் சாலையின் குறுக்கே மிகவும் தாழ்வாக செல்கின்றன. இதனால் லாரி, டிராக்டா், வேன் போன்ற உயரமான வாகனங்கள் செல்லும்போது உரசும் நிலை ஏற்படுகிறது. குறிப்பாக, கற்களை ஏற்றிச் செல்லும் டிப்பா் லாரிகள் கடந்து செல்லும்போது வயா்கள் வாகனங்களின் மேற்பகுதியில் உரசுவதால் அறுந்து விழும் அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனா்.

எனவே, எல்லம்பள்ளி ஒன்றிய சாலையின் குறுக்கே தாழ்வாக செல்லும் அனைத்து மின் வஓயா்களையும் மின்வாரிய அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து, பழுதடைந்த மற்றும் ஆபத்தான நிலையில் உள்ள வயா்களை மாற்ற வேண்டும். மேலும், சாலையின் இருபுறமும் தேவையான இடங்களில் புதிய மின்கம்பங்கள் அமைத்து, பாதுகாப்பான உயரத்தில் கொண்டு செல்ல வேண்டும்.

பெரும் விபத்து அல்லது உயிரிழப்பு ஏற்படும் முன்பே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என எல்லம்பள்ளி கிராம பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.