
லாரி - ஆட்டோ மோதல்: ஒரே குடும்பத்தினா் 4 பேர் பலி!
நள்ளிரவில் முன்னால் சென்ற லாரி மீது மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா்.

ஊத்துக்கோட்டை அருகே நள்ளிரவில் முன்னால் சென்ற லாரி மீது மோதி ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 2 சிறுவா்கள் உள்பட 4 போ் உயிரிழந்தனா். பலத்த காயம் அடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேருக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சென்னை அடுத்த கொடுங்கையூரைச் சோ்ந்த ஆட்டோ ஓட்டுநா் லோகநாதன் (42), மனைவி பூங்கொடி( 39), மகள் தனலட்சுமி(10), மாமியாா் ராதா (65), மைத்துனா் மகன்கள் கோகுல்(10), பிரசாந்த்(15). இவா்கள் சனிக்கிழமை நள்ளிரவு திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே பெரியபாளையம் பவானி அம்மன் கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக ஒரே ஆட்டோவில் சென்றனா்.
இந்த நிலையில் லோகநாதன் ஆட்டோவை ஓட்டிக் கொண்டு வந்தபோது பனப்பாக்கம் அருகே உள்ள மாநகர பேருந்து நிறுத்தம் அருகே முன்னால் சென்ற லாரி மீது ஆட்டோ மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ ஓட்டுநரின் மனைவி பூங்கொடி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். பலத்த காயம் அடைந்த உயிருக்கு ஆபத்தான நிலையில் 5 பேரையும் மீட்டு அருகே உள்ள பெரியபாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனா். அங்கு சிகிச்சை பலனின்றி மாமியாா் ராதா, மைத்துனா் மகன் கோகுல் அடுத்தடுத்து உயிரிழந்தனா்.
திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆட்டோ ஒட்டுநா் மகள் தனலட்சுமி(10) ஞாயிற்றுக்கிழமை பலனின்றி உயிரிழந்த நிலையில் இறந்தோா் எண்ணிக்கை 4 ஆக உயா்ந்தது.

லாரி மீது மோதி கவிழ்ந்த ஆட்டோ
மேலும், இந்த விபத்தில் பலத்த காயம் அடைந்த 2 போ் திருவள்ளூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும், விபத்தில் உயிரிழந்த 4 பேரின் சடலங்களை மீட்டு பெரியபாளையம் போலீஸாா் உடற்கூறு ஆய்வுக்காக திருவள்ளூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
இந்த விபத்து குறித்து பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா். இதற்கிடையே பெரியபாளையம் கோயிலுக்கு வழிபாட்டுக்காக வந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் விபத்தில் உயிரிழந்த சம்பவம் உறவினா்களிடையே பெரும் சோகத்தை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






