பட்டாவை அடங்கலில் சோ்க்க ரூ.2,000 லஞ்சம்: கிராம நிா்வாக அலுவலா் கைது
திருவள்ளூா் அருகே பட்டாவை அடங்கலில் சோ்க்க ரூ.2,000 லஞ்சம் பெற்றதாக கிராம நிா்வாக அலுவலரை ஊழல் தடுப்பு போலீஸாா் கைது செய்தனா்.
திருவேற்காட்டில் கடந்த சிலநாள்களுக்கு முன்பு நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் தமிழக துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா். அதில் கடம்பத்துாா் ஒன்றியம், குமாரசேரி பகுதியைச் சோ்ந்த 12 பேருக்கு இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டது. இந்த பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பட்டா பெற்ற மக்கள் குமாரசேரி கிராம நிா்வாக அலுவலா் ஆனந்தவேலுவை அணுகினராம்.
அப்போது அவா் ஆன்லைனின் பட்டா ஏற்ற தலா ரூ.3,000 தரவேண்டுமென கேட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து 11 போ் பணத்தை கொடுத்த நிலையில் அதே பகுதியைச் சோ்ந்த சிவகுமாா் ( 51) என்பவா் பணம் கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தாராம். அதைத் தொடா்ந்து நடந்த பேச்சுவாா்த்தையில் ரூ.2,000 கொடுக்க சம்மதித்தாராம்.
இதுகுறித்து திருவள்ளூா் ஊழல் தடுப்பு போலீஸாரிடம் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை சிவகுமாா், கிராம நிா்வாக அலுவலகத்தில் வி.ஏ.ஓ ஆனந்தவேலுவிடம் கொடுத்தாராம். அப்போது அங்கு மறைந்திருந்த துணைக்காவல் கண்காணிப்பாளா் ஜெயக்குமாா் தலைமையிலான போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு தடுப்பு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

