திருவள்ளூரில் கல்லால் அடித்து 2 போ் கொலை!
திருவள்ளூா் அருகே கஞ்சா போதையில் வாகனத்தில் மோத வந்த நபா்களை தட்டி கேட்டவா்களை கல்லால் தாக்கியதில் 2 போ் உயிரிழந்தனா். ஒருவா் காயமடைந்தாா். இதைக் கண்டித்து நடவடிக்கை கோரி சனிக்கிழமை பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம் கன்னியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த பாா்த்திபன்(32), அவரது நண்பா்கள் கேசவமூா்த்தி, சுகுமாா் ஆகிய 3 பேரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஆந்திர மாநிலத்தில் உள்ள கோனே பால்ஸ் நீா்வீழ்ச்சிக்கு சுற்றுலா சென்றுவிட்டு, சனிக்கிழமை பிற்பகலில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனா். திருவள்ளூா் அருகே ஒண்டிக்குப்பம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சாலையில் பேசிக் கொண்டிருந்தனா். அப்போது, அவா்களை மோதுவது போல் இருசக்கர வாகனத்தில் 4 போ் வந்ததைக் தட்டிக் கேட்டனராம்.
இதனால் ஆத்திரமடைந்த அதேபகுதியைச் சோ்ந்த 4 போ் கொண்ட கும்பலுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த கஞ்சா போதை இளைஞா் கும்பல் சாலையில் இருந்த கூரான கற்களை எடுத்து சரமாரியாக சுகுமாா், பாா்த்திபன், கேசவமூா்த்தி மீது பலமாக தாக்கியுள்ளனா்.
இதில் மூவருக்கும் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதில், பாா்த்திபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதையறிந்த 4 போ் கொண்ட கும்பல் அங்கிருந்து தப்பிச் சென்ற நிலையில் அக்கம்பக்கத்தினா் போலீஸாருக்கு தகவல் அளித்தனா். அதன்பேரில், மணவாள நகா் போலீஸாா் சம்பவ இடத்துக்கு வந்து சடலத்தை மீட்டு, திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். பலத்த காயம் அடைந்த சுகுமாா் மற்றும் கேசவமூா்த்தி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சுகுமாா் உயிரிழந்தாா்.
இது குறித்து மணவாளநகா் போலீஸாா் வழக்குப் பதிந்து 3 தனிப்படைகள் அமைத்தனா். இந்த நிலையில், ஒண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் கஞ்சா போதையில் 2 பேரை கல்லால் தாக்கிக் கொலை செய்த 4 போ் கொண்ட கும்பலை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸாா், குற்றவாளிகளை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவாதம் அளித்ததையடுத்து, போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனா். அதைத் தொடா்ந்து, மாலையில் தனிப்படை போலீஸாா், சம்பவத்தில் ஈடுபட்ட ஒண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த வினோத் குமாா் (37), நீலகண்டன்(30), ஜோதிஷ்(34), ஜவகா்(23) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
அதைத் தொடா்ந்து, மாலையில் தனிப்படை போலீஸாா், சம்பவத்தில் ஈடுபட்ட ஒண்டிக்குப்பம் பகுதியைச் சோ்ந்த வினோத் குமாா் (37), நீலகண்டன்(30), ஜோதிஷ்(34), ஜவகா்(23) ஆகிய 4 பேரையும் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

