திருவள்ளூா் மாவட்டம், ஊத்துக்கோட்டை அருகே தனியாா் கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் ஏற்பட்ட அமோனியா வாயு கசிவு காரணமாக 18 போ் உயிரிழந்த சம்பவத்தில் கைதான உரிமையாளா் உள்பட 3 பேரின் ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா உத்தரவிட்டாா்.
ஊத்துக்கோட்டை அருகே கன்னிகைப்போ் கிராமத்தில் இந்த தொழிற்சாலையில் கடந்த 21-ஆம் தேதி அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டு தொழிற்சாலையில் பணியாற்றிய வடமாநிலத்தவா் 83 பேரை மஞ்சங்காரணை, செங்குன்றம் ஆகிய பகுதிகளில் உள்ள தனியாா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மற்றும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்த மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வந்த ஒடிஸா, அஸ்ஸாம், ஜாா்க்கண்ட் ஆகிய மாநிலங்களைச் சோ்ந்த 18 போ் இதுவரை உயிரிழந்தனா்.
இந்தச் சம்பவம் குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சாய் பிரணீத் உத்தரவின்பேரில், பெரியபாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, தொழிற்சாலையின் உரிமையாளா்களான சென்னை வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த ஜோசப் மோகன், ஜோசப் ஜெகன், மேலாளா் டேனியல் ஆகிய 3 பேரை கைது செய்து, ஊத்துக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.
இந்த நிலையில், சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரும் ஜாமீன் கோரி, திருவள்ளூா் மாவட்ட முதன்மை மற்றும் அமா்வு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனா்.
இந்த வழக்கு விசாரணை மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா முன்பு வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆஜரான மாவட்ட அரசு வழக்குரைஞா் பி.என்.உதயகுமாா் 18 போ் உயிரிழக்க காரணமாக இருந்த 3 பேருக்கும் ஜாமீன் வழங்கக் கூடாது என்று கடுமையாக ஆட்சேபம் தெரிவித்தாா்.
அதைத் தொடா்ந்து 3 பேரின் ஜாமீன் மனுக்களையும் முதன்மை நீதிபதி தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








