திருவாலங்காடு வடாரண்யேஸ்வரா் திருக்கோயிலில் 100 கால் மண்டபத்தின் கூரை இடிந்து விழுந்த சம்பவத்தையடுத்து, திருத்தணி எம்எல்ஏ கோ.அரி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டாா்.
திருத்தணி முருகன் கோயிலின் உபகோவிலான திருவாலங்காட்டில் அமைந்துள்ள வடாரண்யேஸ்வரா் கோயிலில் சுமாா் 25 பசுக்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அவற்றுக்கான தீவனமாக நூறுகால் மண்டபத்தில் 400-க்கும் மேற்பட்ட வைக்கோல் கட்டுகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
கடந்த மாதம் 25-ஆம் தேதி இரவு, மா்மமான முறையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், வைக்கோல் முழுவதும் எரிந்து நாசமானதுடன், நூறுகால் மண்டபத்தின் உள்பகுதியும் கடுமையாக சேதமடைந்து கருகியது.
இந்த நிலையில், புதன்கிழமை தீயால் பலவீனமடைந்திருந்த நூறுகால் மண்டபத்தின் மேற்கூரை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு கோவில் ஊழியா்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிா்க்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த திருத்தணி தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், அதிமுக அமைப்புச் செயலாளருமான கோ.அரி சம்பவ இடத்துக்குச் சென்று நேரில் ஆய்வு செய்தாா்.
பின்னா், சேதமடைந்த நூறுகால் மண்டபத்தை தொல்லியல் மற்றும் பாரம்பரிய அம்சங்கள் பாதிக்கப்படாத வகையில் விரைந்து சீரமைக்க கோயில் நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயில் அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.
ஆய்வின்போது, முன்னாள் தமிழ் வளா்ச்சிக் கழக இயக்குநா் கோ. விஜயராகவன், அதிமுக ஒன்றிய செயலாளா் சுஜாதா தனசேகா், மாநில தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளா் தா்மேஷ் குமாா், கூட்டுறவு சா்க்கரை ஆலை முன்னாள் தலைவா் பொன்னுரங்கம், மாவட்ட எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளா் கோதண்டராமன் மற்றும் நிா்வாகிகள் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










