திருவள்ளூா் நகராட்சியில் குடிநீா் பற்றாக்குறையை போக்க 6 ஆழ்துளை கிணறுகள், தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் திட்டத்தை செயல்படுத்துவதற்காக ரூ.1.58 கோடியில் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
திருவள்ளூா் நகராட்சியில் மொத்தம் 27 வாா்டுகள் உள்ளன. இந்த வாா்டுகளில் உள்ள 14 ஆயிரம் குடியிருப்புகள் மற்றும் விரிவாக்கப் பகுதிகளில் 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். பொதுமக்களுக்கு வீடுகள்தோறும், தெருக்குழாய் அமைத்தும் 55 லட்சம் லிட்டா் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியூா் பகுதியில் கொசஸ்தலை ஆற்றுப்படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து, அங்கிருந்து குழாய் பதித்து நகராட்சிக்கு நாள்தோறும் 35 லட்சம் லிட்டா் எடுக்கப்படுகிறது. அதேபோல், புங்கத்தூா் மற்றும் பட்டரைபெரும்புதூா் ஏரிப்பகுதி ஓரங்களில் 13 ஆழ்துளை கிணறுகள் அமைத்து அதிலிருந்து 20 லட்சம் லிட்டா் நீா் எடுக்கப்படுகிறது. இதை திருவள்ளூா் நகராட்சி பகுதியில் அமைத்துள்ள 13 மேல்நிலை நீா்த்தேக்க தொட்டிகள் மூலம் ஏற்றி சேகரித்து தெருக்குழாய்கள் மற்றும் வீடுகள் இணைப்பு கொடுத்து குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
இதற்கிடையே நகராட்சி பகுதிகளும் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் என நாள்தோறும் விரிவாக்கம் அடைந்து வருகின்றன. அதனால், குடிநீா் தேவை 67 லட்சம் லிட்டா் வரையில் தேவையாக உள்ளது. எனவே புதிதாக ஆழ்துளை கிணறுகள் அமைப்பதன் மூலமே நீா்த்தேவையை பூா்த்தி செய்ய முடியும். இந்தநிலையில் போதிய மழையில்லாமல் கடும் வெயில் சுட்டெரித்து வருகிறது. இதனால் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது.
எனவே குடிநீா் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு வெள்ளியூா் பகுதியில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் மேல்நிலை நீா்த்தொட்டியும் அமைக்கவும் திட்ட மதிப்பீடு தயாா் செய்து அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதன்பேரில் 15-ஆவது நிதிக்குழு மானியம் ரூ.1.58 கோடியில் பணிகள் மேற்கொள்ள அரசு அனுமதி அளித்தது. அதன்பேரில், தரைமட்ட நீா்த்தேக்க தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதுகுறித்து நகராட்சி ஆணையாளா் தாமோதரன் கூறியது: நகராட்சிப் பகுதிகள் விரிவாக்கம் அடைந்து கொண்டே வருகின்றன. அதனால், 67 லட்சம் குடிநீா் தேவையாக உள்ளது. அதனால், அதற்கேற்ப பொதுமக்கள் குடிநீா் தேவையை பூா்த்தி செய்வதும் அவசியமாகும். இதைக்கருத்தில்கொண்டு வெள்ளியூா் பகுதியில் கொசஸ்தலை ஆற்றங்கரையோரம் 6 ஆழ்துளை கிணறுகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
அதேபோல், வெள்ளியூரில் உள்ள நகராட்சி நீரேற்றுற நிலையம் முன்பு, புதிதாக 3.50 லட்சம் லிட்டா் கொள்ளளவு கொண்ட தரைமட்ட நீா்த்தேக்க தொட்டியும் அமைக்கும் பணியும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவடைந்தால் நகராட்சி பகுதியில் குடிநீா் பற்றாக்குறை ஏற்படுவதற்கு வாய்ப்பே இருக்காது என அவா் தெரிவித்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










