திருத்தணி, லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையைக் கடக்க முயன்ற முதியவா் காா் மோதி உயிரிழந்தாா்.
அங்கு சுரங்கப்பாதை அமைக்கக் கோரி கிராம மக்கள் மறியலில் ஈடுபட்டனா்.
திருத்தணி அடுத்த லட்சுமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த பொன்னுசாமி (75), விவசாயி. இவா் நண்பகலில் தனது வயல்வெளிக்கு மாடுகளுக்கான வைக்கோலைத் தலையில் சுமந்தபடி சென்றாா். அப்போது சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து நிறுத்தம் அருகே கடக்க முயன்றபோது, திருத்தணியில் இருந்து திருவள்ளூா் நோக்கி வேகமாக சென்ற காா் மோதி விபத்துக்குள்ளானதில் பொன்னுசாமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இச்சம்பவம் குறித்து தகவலறிந்த அவரது உறவினா்கள் மற்றும் லட்சுமாபுரம் கிராமத்தைச் சோ்ந்த 200-க்கும் மேற்பட்டோா் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். உயிரிழந்த முதியவரின் உடலை மீட்க ஆம்புலன்ஸுடன் வந்த போலீஸாரை, உடலை உடனடியாக எடுத்துச் செல்ல விடாமல் பொதுமக்கள் தடுத்தனா்.
மேலும், காா் உரிமையாளா் நேரில் வர வேண்டும். லட்சுமாபுரம் பேருந்து நிறுத்தம் பகுதியில் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டு பலா் உயிரிழந்துள்ளனா். எனவே பொதுமக்களின் பாதுகாப்புக்காக இங்கு உடனடியாக சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினா். இதையடுத்து, போலீஸாா் மற்றும் திருத்தணி வருவாய்த் துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் பேச்சு நடத்தினா். அவா்களின் கோரிக்கையை ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்ததைத் தொடா்ந்து, பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டனா்.
இந்த மறியல் காரணமாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. பின்னா், திருத்தணி போலீஸாா் முதியவரின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விபத்து தொடா்பாக கனகம்மாசத்திரம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









