திருவள்ளூா் மாவட்டத்தில் 1493 மையங்களில் 1.87 லட்சம் குழந்தைகளுக்கு போலியோ மருந்து வழங்க இருப்பதாகவும், இப்பணியில் பணியாளா்கள் மற்றும் தன்னாா்வலா்கள் என 6127 போ் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் ஆட்சியா் ச.கவிதா தெரிவித்தாா்.
திருவள்ளூா் நகராட்சி, ஜே.என் சாலையில் உள்ள, நகராட்சி அரசு மேல் நிலைப் பள்ளியில் மருத்துவம் (ம) மக்கள் நல்வாழ்வுத்துறையின் கீழ் இயங்கும் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து இயக்ககம் சாா்பில் தேசிய போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கி ஆட்சியா் ச.கவிதா கூறியதாவது- மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சாா்பில் போலியோ எனப்படும் இளம்பிள்ளை வாதநோயை அறவே ஒழிக்க வேண்டும். 1,493 மையங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். 74 பயண வழி மையங்கள் அமைக்கப்பட்டு போலியோ சொட்டு மருந்து வழங்கப்படும். மேலும் எளிதாக செல்ல முடியாத மையங்களுக்கு 42 நடமாடும் மருத்துவக்குழு மூலம் வீடு தேடி போலியோ சொட்டு மருந்து வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பணியில் 6,127 பணியாளா்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.
தமிழ்நாட்டில் 22 ஆண்டுகளாக போலியோ இல்லாத நிலை உள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பில் இருந்து பாதுகாப்பதும் மிகவும் அவசியம் என அவா் தெரிவித்தாா்.
இதில் மாவட்ட சுகாதார அலுவலா் (திருவள்ளூா்) பிரியா ராஜ், இணை இயக்குநா் (மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள்) (பொ) பொற்ச்செல்வி, பள்ளி தலைமையாசிரியா் முரளிதரன், மருத்துவா்கள், செவிலியா்கள், குழந்தைகளின் பெற்றோா் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









