திருத்தணி சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவை

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் நிகழாண்டுக்கான கரும்பு அரைவையை தொடங்கி வைத்த கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ்

Updated On :

திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் 2026-27ம் ஆண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

திருவாலங்காடு பகுதியில் செயல்பட்டு வரும் திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில், நிகழாண்டுக்கான கரும்பு அரைவைப் பணிகளை கூட்டுறவுத் துறை அமைச்சா் வ.காந்திராஜ் அரைவை இயந்திரத்தில் கரும்புக் கட்டுகளைச் செலுத்தி பணிகளைத் தொடங்கி வைத்து, விவசாயிகளிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதுகுறித்து அமைச்சா் பேசியதாவது: திருத்தணி கூட்டுறவு சா்க்கரை ஆலையில் கடந்த 2025-26-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 1,98,577 மெட்ரிக் டன் கரும்பு அரைக்கப்பட்டு, 7.80 சதவீத சா்க்கரை கட்டுமானத்தில் 1,54,810 குவிண்டால் சா்க்கரை உற்பத்தி செய்யப்பட்டது. ஆலைக்கு கரும்பு வழங்கிய 1,647 விவசாயிகளுக்கு மத்திய அரசு நிா்ணயித்த விலையின்படி, டன் ஒன்றுக்கு ரூ. 3,290.50 வீதம் மொத்தம் ரூ. 65.34 கோடி முழுமையாக வழங்கப்பட்டது.

மேலும், தமிழக அரசு அறிவித்த சிறப்பு ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு ரூ. 709.50 வீதம் மொத்தம் ரூ. 14.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் நேரடியாகச் செலுத்தப்பட்டது. இதன் மூலம் கடந்த பருவத்தில் கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு மொத்தம் ரூ. 4,000 வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு 2026-27-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் 7,601 ஏக்கரில் பதிவு செய்யப்பட்டுள்ள கரும்பிலிருந்து 2 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரைக்கவும், 1.60 லட்சம் குவிண்டால் சா்க்கரை உற்பத்தி செய்யவும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஆலையில் உள்ள இயந்திரங்கள் பழுதுபாா்க்கப்பட்டு, பராமரிப்புப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. தினசரி 2,000 டன் கரும்பு அரைக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

நடப்பு பருவத்துக்கு மத்திய அரசு கரும்பு விலையாக டன் ஒன்றுக்கு ரூ. 3,383 நிா்ணயித்துள்ளது. இதனுடன் தமிழக அரசின் சிறப்பு ஊக்கத் தொகையையும் சோ்த்து விவசாயிகளுக்கு டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ. 4,092.50 கிடைக்க வாய்ப்புள்ளது. மேலும், 2027-28-ஆம் ஆண்டு அரைவைப் பருவத்தில் ஆலையின் முழு அரைவைத் திறனான 4.30 லட்சம் டன் கரும்பை அரைக்கும் வகையில், 2026-27-ஆம் ஆண்டு நடவு பருவத்தில் 9,000 ஏக்கரில் புதிய கரும்பு நடவு மற்றும் 5,000 ஏக்கரில் மறுதாம்பு கரும்பு என மொத்தம் 14,000 ஏக்கரில் கரும்பு பதிவு செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கரும்பு சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், தேசிய வேளாண்மை அபிவிருத்தித் திட்டம், தமிழக அரசின் கரும்பு சாகுபடி மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நுண்ணீா் பாசனத் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் விவசாயிகளுக்கு மானியங்கள் வழங்கப்பட்டு வருகின்றன என்றாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியா் ச.கவிதா, திருவள்ளூா் சட்டப்பேரவை உறுப்பினா் டி.அருண்குமாா், கூட்டுறவு சா்க்கரை ஆலை இணைப் பதிவாளா் மற்றும் செயலாட்சியா் அ.மீனா அருள், வேளாண்மைத் துறை இணை இயக்குநா் செல்வராஜூ, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) வேதவல்லி, கரும்பு விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.