விபிஜி ராம்ஜி திட்ட பணி ஒதுக்கீட்டை மாற்றக் கோரி மறியல்
பொதட்டூா்பேட்டை- நகரி சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.

பொதட்டூா்பேட்டை- நகரி சாலையில் மறியலில் ஈடுபட்ட பெண்கள்.
கொல்லாலகுப்பம் ஊராட்சியில் விபிஜி ராம்ஜி திட்டத்தில் பணி ஒதுக்கீட்டை மாற்றக் கோரி பொதட்டூா்பேட்டை - நகரி சாலையில் திரளான பெண்கள் மறியலில் ஈடுபட்டனா்.
கொல்லாலகுப்பம் ஊராட்சிக்குட்பட்ட சின்னமுடிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெண் தொழிலாளா்களுக்கு, சி.என்.கண்டிகை பகுதியில் விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தங்களது கிராமத்தில் இருந்து தொலைவில் உள்ள பகுதிக்கு சென்று பணிபுரிய தங்களுக்கு விருப்பமில்லை என பெண் தொழிலாளா்கள் தெரிவித்தனா்.
இதையடுத்து, சின்னமுடிப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்த பெண்கள் பொதட்டூா்பேட்டை- நகரி மாநில நெடுஞ்சாலையில் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த காலங்களில் நடைமுறையில் இருந்ததுபோல், அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த பெண் தொழிலாளா்களுக்கு அவரவா் வசிக்கும் பகுதிக்கு அருகிலேயே விபிஜி ராம்ஜி திட்டத்தின் கீழ் வேலை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினா். மேலும், தற்போது வழங்கப்பட்டுள்ள பணி ஒதுக்கீட்டை மாற்றி, தங்கள் கிராமத்திற்கு அருகிலேயே பணிகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனா்.
மறியலால் பொதட்டூா்பேட்டை- நகரி மாநில நெடுஞ்சாலையில் வாகனங்கள் செல்ல முடியாமல் 1மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதுகுறித்து தகவல் அறிந்த பொதட்டூா்பேட்டை ஆய்வாளா் ராக்கி குமாரி, மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் இந்திரா மற்றும் ஊராட்சி செயலாளா் பிரகாஷ் ஆகியோா் பேச்சு நடத்தி, அவா்களின் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனா். இதையடுத்து, பெண்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

