Enable Javscript for better performance
திருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) – உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்)- Dinamani

சுடச்சுட

  

  திருவுறைமார்பன் (ஸ்ரீவத்சம்) - உமாசகிதமூர்த்தி (தாய் தெய்வங்கள்)

  By ச. செல்வராஜ்.  |   Published on : 08th December 2017 02:21 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  சமணமும், பௌத்தமும் தமிழகத்தில் பெருவழக்குற்றதைத் தொடர்ந்து சைவ, வைணவ வைதீக சமயங்கள் வலுவடையத் தொடங்கின. இதனையொட்டி, பக்தி மார்க்கமும் தனிப்பெரு நற்தெய்வங்களும் தோன்றத் துவங்கின. காரைக்கால் அம்மையாரை அம்பிகையோடு ஒப்பிட்டுக் கூறும் அளவுக்குப் பக்தி இலக்கியத்தின் உட்பொருட்கள் அடங்கியிருந்தன. இப்பொருள் குறித்து முந்தைய அத்தியாயங்களில் விளக்கப்பட்டது.

  சைவ, வைணவ வளர்ச்சியில் அவற்றின் தனிப்பெரும் நற்தெய்வங்களாக சிவனும் விஷ்ணுவும் இருந்தனர். இருப்பினும், இவர்கள் இருவரும் தங்களது துணைவியராக ஏற்றுக்கொண்ட அன்னை பார்வதியையும், மகாலட்சுமியையும் மிகவும் போற்றி மரியாதைக்குரிய இடங்கள் வழங்கப்பட்டுள்ளது அனைவரும் அறிந்த ஒன்று. சிவனும் பார்வதியும், விஷ்ணுவும் திருமகளும் எவ்வாறு போற்றப்பட்டு உலக மக்களுக்கும் அவர்களது வாழ்க்கைக்கும் பயனளித்தனர்; அரச மரபின் வழிவந்த மன்னர்களும் மக்களும் வணங்கிய தெய்வங்களில் இவர்கள் பெற்ற சிறப்பிடம்; கல்வெட்டுகள், செப்புப் படிமங்கள், சிற்பங்கள் ஆகியவற்றில் இவர்களுக்கு அளிக்கப்பட்ட சிறப்பிடம் ஆகியவற்றைப் பற்றி அறிய முற்படுவதே இப்பகுதியின் நோக்கமாகும். அதில் குறிப்பாக, அர்த்தநாரீஸ்வரர் எனும் உமையொருபாகனும், ஸ்ரீவத்சமும் இங்கு விவரிக்கப்படுகிறது.

  பௌத்தமும், சமணமும் போற்றி வழிபட்ட இயக்கி அம்மன் வழிபாடுகள், இந்தியாவின் பண்பாட்டு, கலாசாரத்தின் ஆதி வடிவங்களாகவும், கிராம மக்களின் மிகப்பழமையான வழிபாடாகவும் திகழ்ந்தவை என்பதில் சிறிதும் ஐயப்பாடில்லை. தொல்லியல் சான்றுகள் இதனை நமக்குத் தெரிவிக்கின்றன. பௌத்த, சமண சமயங்களுக்கு அடுத்து வைதீகச் சமயங்கள் தலைதூக்க ஆரம்பித்த காலகட்டத்தில், அரசுமுறை ஆட்சியும் அதன் வழித்தோன்றல்களும் உருவாகி வளர்ந்துகொண்டிருந்தன. இக்காலங்களில், தாய் தெய்வ வழிபாடு என்ற போக்கு, பெண் சமுதாயத்தையும் பெண் ஆதிக்க சமுதாயத்தையும் நிலைநாட்டுபவையாகவே திகழ்ந்தன எனலாம்.

  இந்தியாவின் பழமையான பண்பாட்டின் வெளிப்பாடான சிந்துச் சமவெளி நாகரிகத்தில் வெளிப்படுத்தப்பட்ட தொல்லியல் சான்றுகளின் அடிப்படையில், தாய் தெய்வ வழிபாடு போலவே மர வழிபாடும் நமது மூதாதையருக்கு உரித்தானதாகவே இருந்திருக்கிறது என்பது தெள்ளத் தெளிவாகிறது. தொன்மையான மர வழிபாடு உலகளவிலும் பரவியிருந்தது என்பதை மெசபடோமிய நாகரிகத்துக்குரிய முத்திரைச் சின்னங்களும் சான்றுகளாகின்றன.

  மர வழிபாட்டைச் சித்தரிக்கும் மெசபடோமியப் பகுதி முத்திரை

  சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஓர் இலச்சினையில், இரு அரச மரக் கிளைகளுக்கு இடையில் ஆடையின்றி ஒரு பெண் தெய்வம் காணப்படுகிறது. நீண்ட கூந்தலும், கைகளில் காப்புகளும் காணப்படுகின்றன. அருகில், மக்கள் உருவங்களும் விலங்கு உருவங்களும் அப்பெண்ணை அடிபணிந்து வணங்கி நிற்கின்றன. அரச மரமும், தாய் தெய்வ வழிபாடும் இந்தியாவில் மிகவும் பழங்காலத்திலிருந்தே வழிபாட்டில் இருந்து வந்துள்ளது என்பதை கூறுவதற்கு, இதுவே சான்றாக அமைகிறது.*1

  மர வழிபாடு – ஒரு பெண்ணை மரத்தோடு ஒப்பிட்டு வணங்குதல் – வளமைச் சடங்கு - மிருகங்களும் அதனை வழிபாடு செய்தல்

  சிந்துச் சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட முத்திரைகளில் காணப்படும் மர வழிபாட்டுக் காட்சிகள் - பெண்கள் வழிபாடு செய்தல்

  வேத காலத்துக்குப் பிற்பட்ட இந்துச் சமய வளர்ச்சியில் வேத காலத்தைச் சார்ந்த தெய்வங்கள் தங்களது முக்கியத்துவத்தை இழக்கத் தொடங்கின. பின்னர்,  சிவன், விஷ்ணு, பிரம்மா, சக்தி போன்ற தெய்வங்களும், அவற்றின் மதிப்பும் மக்களின் கவனத்தை ஈர்த்தன. தமிழகத்தில் தந்தை வழி நாகரிகம் கலந்தபொழுதுதான், தமிழகத்தில் கலாசார பிணைப்பு ஏற்பட்டது என்பர். கொற்றவை, முருகன் ஆகிய இரண்டு தெய்வங்களும் தாய்வழிச் சமுதாயம் என்ற உணர்வைப் பிரதிபலிக்கிற தெய்வங்களாகும். “வெற்றிவெல்போர்க் கொற்றவை சிறுவ” என்று திருமுருகாற்றுப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளது.*2 அடுத்து, பெரும்பாணாற்றுப்படையில் “பைம்பூட்சேஎய் பயந்தமா மோட்டுத் துணங்கையஞ் செல்வி” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.*3 கொற்றவைச் சிறுவன் என்று முருகனைக் குறிப்பிடும்பொழுது, அங்கு தாய்வழிச் சமுதாய உரிமை முறை செழித்தோங்கியுள்ளது என்பதை அறியமுடிகிறது. அவ்வாறே, பழம்பெரும் பெண் தெய்வத்தின் தோற்றமும் அதன் சிறப்பும் தோன்றுகிறது. இவ்வாறு, தமிழ்கூறும் நல்லுலகமான தென்னிந்தியாவில் சைவம் வளர்ந்து செழித்தது எனலாம்.

  சிவன் பரம்பொருளாகவும் முழுமுதற் தெய்வமாகவும் வளர்ச்சி அடைந்ததைத் தொடர்ந்தே, சைவசித்தாந்தம் தத்துவ வடிவில் உருப்பெற்றது என்பதை அறியலாம். பின்னர், சைவம் சித்தாந்தமாக வடிவம் பெற்றபொழுது, மறைமுகமாகப் பெண் தெய்வம் (சக்தி) குறிப்பிட்ட சிறப்பான இடத்தைப் பெற்றுவிடுகிறாள். சிவனே முழுமுதற் பொருளாகக் கொண்டாலும், “இறைவன் சித்சக்தியைக் கொண்டே மாயைத் தொழிற்படுத்துவான்’’ என்பதே சைவ சித்தாந்தத்தின் கொள்கை எனக் கொள்வர். இறைவன் வேறு அவரது சக்தி வேறு என்பதை பிரித்தறிய முடியாததாகிறது. இங்குதான், சிவனும் சக்தியும் ஒன்றானவர்கள்; உருவில் இரண்டானவர்கள் என்பதும், சக்திக்கு சிவன் தனது உடலில் சரிபாதி வழங்கி உமையொருபாகனாக விளங்குகிறார் என்றும் கூறப்பட்டது.*4

  தாய்வழிச் சமுதாயமும், தந்தைவழிச் சமுதாயமும் மாறிமாறி வந்தாலும், தாய் தெய்வத்தின் பங்கு மிகுந்தே காணப்படுகிறது என்பதே உண்மை. குலங்களாகவும், (தனித்தனிக் குழுக்களே குலங்களாகும்), கூட்டங்களாகவும் வாழ்ந்த மக்கள், தங்களுக்குத் தேவையான வருணனையும், கொற்றவையையும் சிறப்புடைய தெய்வங்களாகப் போற்றினர். வரலாற்றில், மக்களுடைய தனித்தன்மையும், ஆட்சி நிலைமையும் தோன்றியபோது, தனிப்பட்ட இஷ்டதெய்வங்களும், தங்களது குழுக்களுக்கான தெய்வங்களும் உருப்பெற்றன எனலாம்.

  இந்தக் காலகட்டத்தில்தான் சிவன், விஷ்ணு போன்ற தெய்வங்கள் சிறப்புறத் தொடங்கின. குறிப்பாக, வேத கால முடிவில்தான் சிவனும், விஷ்ணுவும், வருணனும் சிறப்படைந்தனர் எனலாம். சிவனைப் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியங்களில் பலவாறாக சித்திரித்துக் கூறப்பட்டன. முப்புரம் எரித்தல், கண்டத்தில் நீல நிறம் பெற்றிருத்தல், திங்களைத் தனது சடாமகுடத்தில் தரித்திருத்தல், நெற்றிக்கண் உள்ளமை, இடபக்கொடியை உடையவாராயிருத்தல், உமையொருபாகனாயிருத்தல், ஐம்பூதங்களைப் படைத்தவனாயிருத்தல் போன்ற பல செய்திகள் சிவனைப் பற்றி வழங்குகின்றன.

  சிவனும், விஷ்ணுவும் சிறப்புற்றிருந்த காலத்தில், இவர்களுக்கு முன்பிருந்த சமய நம்பிக்கைகளையும், வழிபாட்டு முறைகளையும், பிற தெய்வங்களையும் தம்முடன் தொடர்புபடுத்தி, அவற்றுடன் இணைந்து இத்தெய்வங்களும் ஈடு இணையற்ற தெய்வங்களாக பரிணமித்தன. சிந்துவெளி நாகரிகத்தில் காணப்படுகின்ற சிவன், மிருகங்கள் புடைசூழப் பசுபதியாகி, கூட்டு வாழ்க்கையில் பூதகணங்கள் அனைத்துக்கும் தலைவனாகி, பழைய பெண் தெய்வத்தை, அதாவது தாய் தெய்வமெனப் போற்றப்படும் தெய்வத்தை மணந்து, மலைமகள் மணாளனாகி, மாதொருபாகனாகி, பழமையும் புதுமையும் தன்னுள்ளடக்குவதை இங்கு காணமுடிகிறது.

  சிந்துவெளி முத்திரை - சிவனின் தோற்றம்

  காலப்போக்கில் சிவனும் விஷ்ணுவும், நிலக்கிழார்கள், கைவினைப் பொருட்கள் உற்பத்தியாளர்கள், விவசாயிகள், வணிகர்கள், பின்னர் வந்த அரசுகளும், அதனை ஆண்ட மன்னர்களும் வழிபடும் தெய்வங்களாயினர். சமணமும், பௌத்தமும் தழைத்தோங்கியிருந்த காலத்தில், சிறிது சிறிதாக ஏற்பட்ட மாற்றம், பின்னர் சைவமும், வைணவமும் செழித்தோங்க அடிகோலியது என்றால் அது மிகையல்ல.

  தமிழகத்தில் அரசு ஆட்சி முறை நடைமுறைக்கு வந்த பிறகு, சைவமும், வைணவமும் வளர்ச்சி அடைந்ததைப்போல சமணமும், பௌத்தமும் வளர்ச்சி அடையவில்லை என்றே கூறலாம். தமிழகத்தை ஆட்சிபுரிந்த மன்னர்கள், சைவத்துக்கும் வைணவத்துக்கும் முதலிடம் வழங்கினர். இருந்தாலும், அவர்கள் சமணத்துக்கும் பௌத்தத்துக்கும் சிறிதளவேனும் தேவையான கொடைகளை வழங்கிச் சிறப்பு செய்து, அச்சமயங்களையும் ஆதரித்தமையை அவர்கள் எழுப்பிய கோயில்களில் உள்ள கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. இந்தச் சமயங்களையும் காத்துவந்ததில் மன்னர்களின் பெரும்பங்கு உள்ளது என்பது மிகையாகாது.

  தமிழக மன்னர்களாக பல்லவ, பாண்டிய, சோழ, போசளச, விஜயநகரப் நாயக்கர்களும், அவர்களைத் தொடர்ந்து வந்த மராட்டிய மன்னர்கள், சேதுபதி வம்சத்தார்கள் எனப் பட்டியலிட்டுக்கொண்டே போகலாம். இத்தகைய நீண்ட வரிசையில், அனைத்து மன்னர்களும் சைவத்தையும் வைணவத்தையும் போற்றும் வகையில் பல பெரிய, பெரிய ஆலயங்களையும், சிற்றாலயங்களையும், கற்றளிகளையும் கட்டி பெருந்தொண்டாற்றியுள்ளனர். இதனை கோயில்களும், அக்கோயில்களில் காணப்படும் கல்வெட்டுகளும், சிற்பங்களும், செப்புப் படிமங்களும் நமக்கு தெளிவாக உணர்த்துகின்றன. இவ்வாலயங்களில் அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்களும், ஸ்ரீவத்சத்தடன் காணப்படும் விஷ்ணுவின் திருவுருவங்களையும் காணமுடிகிறது. அவை, சைவமும் வைணவமும் தாய் தெய்வங்களுக்கு வழங்கிய சிறப்பிடத்தையே நமக்கு உணர்த்துகின்றன.

  மாதொருபாகன் எனும் அம்மையப்பன்

  சைவமும், வைணவமும் தழைத்தோங்க முற்பட்டபின், ஒருபுறம் சமண, பௌத்த சமயத்தாரிடம் சைவம் தனது வலிமையைக் காட்டுவதும், மற்றொரு பக்கத்தில் வைணவம் தன்வலிமையைக் காட்டுவதுமாக இருந்தன. இதன் நிகழ்வுகள், அதன் வெளிப்பாடுகள் அனைத்தையும் சைவத்தையும் வைணவத்தையும் தழுவிய மன்னர்கள் தாங்கள் எழுப்பிய கோயில்களில் வடித்த சிற்பங்களில் காட்ட முனைந்தனர். அதன் அடிப்படையில்தான், சைவர்கள் தம் கடவுளான சிவனை ஒவ்வொரு புதிய கோணத்தில் உருவகப்படுத்தி, வெவ்வேறு புதிய புதிய அவதாரங்களைப் படைத்து, மக்களை இறைவன் காப்பதாகக் கூறி பல கதைகளையும், அதற்கேற்ப புராணங்களையும் உருவாக்கி மகிழ்ந்தனர். வைணவர்களும் தங்களுக்கு ஏற்ப வைணவக் கடவுளான விஷ்ணுவைக் கொண்டு பல அவதாரங்களைப் போட்டியாக உருவாக்கி, மக்களைக் காக்க இறைவனின் அவதாரங்கள் என்று பல கதைகளையும் புனைந்து, அதற்கு உருவமும் வழங்கி வழிபடத் துவங்கினர். இதனை அடிப்படையாகக் கொண்டு எழுந்ததே விஷ்ணுவின் பத்து அவதாரங்களும், சிவனின் 64 மூர்த்தங்களும் ஆகும். இதை அடிப்படையாகக் கொண்டு, இனிவரும் உமையொருபாகனையும் ஸ்ரீவத்சத்தையும் கவனித்தால் அதன் உண்மை நன்றாக விளங்கும்.

  அர்த்தநாரீஸ்வரர் - காலம் பொ.ஆ. 9-10-ம் நூற்றாண்டு

  சோழர்கள் காலத்திய சிற்பங்களின் அழகு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. மேலே காணப்படும் இச்சோழர்களின் கலைப்பாணியிலான அர்த்தநாரீஸ்வரர் சிற்பம், முற்காலச் சோழர்கள் காலத்தில் வடிக்கப்பட்ட தேவகோட்டச் சிற்பமாகும். அதன் கலையழகும், நேர்த்தியும் சொற்களால் வர்ணிக்க இயலாதது. ஆண்பாதி பெண்பாதி என்பதை ஆடை அணிகலன்களில் காட்டினாலும், முகத்தோற்றத்திலும் வலப்புறம் கண் அமைப்பும் உதடுகளும் அதன் பொழிவும் கம்பீரமும் தெளிவாகக் காட்டப்பட்டள்ளதையும், இடப்பக்கம் புன்முறுவலுடன் உதடுகளில் எற்படும் சிறிய வித்தியாசங்களையும் தெளிவாக காட்டியுள்ள சிற்பியை வியப்பதா? அவனைச் செய்யத் தூண்டிய பேரரசனை எண்ணி வியப்பதா என்ற அளவில் அதன் அமைப்பு காண்போரை வியக்கச்செய்கிறது.

  கஜுராஹோ போன்ற வட இந்திய இடங்களில் அர்த்தநாரீஸ்வரர் தோற்றம்

  சோழர் காலம்

  (தொடரும்)

  சான்றெண் விளக்கம்

  1. D.D. Kosambi, An Introduction to the styudy of Indian History. PP.60.
  2. திருமுருகாற்றுப்படை 258.
  3. பெரும்பாணாற்றுப்படை 458-59.
  4. சு. லட்சுமணன், இந்தியத் தத்துவஞானம் பக். 363.
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai