Enable Javscript for better performance
அகழாய்வுகள் காட்டும் சங்க காலச் சமயங்களும், தாய் தெய்வ வழிபாடுகளும்!- Dinamani

சுடச்சுட

  

  அகழாய்வுகள் காட்டும் சங்க காலச் சமயங்களும், தாய் தெய்வ வழிபாடுகளும்!

  By ச. செல்வராஜ்.  |   Published on : 16th June 2017 09:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  சைவத் தத்துவமானது தமிழர்கள் போற்றும் ஒரு சித்தாந்தமாகும். தென்னிந்தியாவிலேயே வரலாற்றுக் காலத்துக்கு முற்பட்ட பழம்பெரும் சமயம் என்றால் அது சைவம்தான். ஆரியர் வருகைக்கு முற்பட்ட இச்சமயம், தமிழ் மக்கள் நெஞ்சத்தில் நிறைந்து விளங்குகிறது என டாக்டர் ஜி.யூ. போப்பையர் தெரிவித்துள்ளார்*1.

  தமிழக மக்கள் இயற்கையை வழிபட்டனர் என்பதற்கு, சங்க இலக்கியங்களில் தலைசிறந்த காப்பியமான சிலப்பதிகாரத்தில், இளங்கோவடிகள் தனது காப்பியத்தை துவங்கும்பொழுது, இயற்கைக் கடவுளான “ஞாயிறு போற்றுதும், ஞாயிறு போற்றுதும்” என்றும் அடுத்து “திங்களைப் போற்றுதும், திங்களைப் போற்றுதும்” என சூரிய சந்திரர்களை வணங்கி வழிபட்டுத்தான் துவங்குகின்றார்*2.

  “தென்னாடுடைய சிவனே போற்றி” என்று திருவாசகம் போற்றுகின்றது. “சிவனொடொக்கும் தெய்வம் தேடினுமில்லை” என்று திருமந்திரம் கூறுகின்றது. சைவ சமய வரலாற்றில், அதன் சிறப்பை அறிய சிந்து நதிப் பள்ளத்தாக்கில் சிறப்புற்றிருந்த நகரங்களில் காணப்பட்ட சான்றுகளை நாம் காண வேண்டியதாக உள்ளது. இன்றைய சைவ சமயத்தில் காணப்படும் லிங்க வழிபாடு, சக்தி வழிபாடு, சிவ வழிபாடு (பசுபதி) போன்ற வழிபாடுகள், சிந்துவெளி நாகரிகத்தின் முக்கியமான சமயப் பண்டிகைகளாக விளங்கியுள்ளன என்பது பல ஆய்வாளர்களின் கருத்தாகும்.

  சிந்துவெளி நாகரிகத்தில் கிடைத்த முத்திரைகள் களிமண் படிவங்கள் பற்றி சர் ஜான் மார்ஷல் குறிப்பிடும்பொழுது, “யோகிகளுக்கெல்லாம் தலையாய யோகி சிவன். அதனாலேயே அவருக்கு மகாதபவர், மகாயோகி எனும் பெயர்கள் அமைந்தன. சிவன் தலையாய யோகி மட்டுமல்ல; விலங்குகளுக்கெல்லாம் தலைவர் (பசுபதி). சிவனின் இந்தப் பண்பினையே சிவனைச் சுற்றி யானை, புலி, காண்டாமிருகம், எருது என நான்கு மிருகங்கள் நிற்பதுபோல் காட்டப்படுகின்றது. சிந்துவெளிக் கடவுளின் தலையில் அமைந்துள்ள கொம்புகள், பிற்காலத்தில் சிவனின் ஆயுதமான சிறப்புக்குரிய திரிசூலமாக மாறியது. இவற்றையெல்லாம் நோக்கும்பொழுது, சிவனுக்கு அமைந்த பல அம்சங்கள், தோற்ற நிலையிலே சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுகின்றன என நாம் கருதலாம்*3 என்று குறிப்பிடுகின்றார்.

  சிந்துவெளி முத்திரை

  சிந்து சமவெளிப் பகுதி அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தாய் தெய்வ சுடுமண் உருவங்கள்

  சிவ வழிபாட்டை சிந்துவெளி நாகரிகம் குறிப்பிட்டாலும், சிந்துவெளி நாகரிகத்தில் முதலிடம் பெற்று விளங்குவது பெண் தெய்வ வழிபாடே ஆகும். சிந்துவெளி மக்கள் வழிபட்ட தெய்வங்களை வரிசைப்படுத்திய சர் ஜான் மார்ஷல், அதன் முக்கியத்துவத்தின் அடிப்படையில் தாய் தெய்வத்தை (அன்னை) முதன்மைக் கடவுளாகவும், அதற்கடுத்து பிற கடவுள்களையும், லிங்கத்தையும் சுட்டுகின்றார்*4. ஹரப்பா, மொகன்ஜதாரோ, லோதால், காலிபங்கன் போன்ற அகழாய்வுகளில் காணப்பட்ட பெண் தெய்வ சுடுமண் உருவங்கள், தாய் தெய்வ வழிபாட்டை அம்மக்கள் எவ்வாறு போற்றி வழிபட்டனர் என்பதையே சுட்டுகின்றன. பெண் உருவத்தை பல்வேறு வடிவங்களில் அமைத்துப் போற்றியதையும், வழிபட்டதையும் ஒப்பு நோக்கும்பொழுது, அதன் சிறப்பு தெளிவாக விளங்கும். அதன் அடிப்படையில், சிந்து வெளியில் காணப்பட்ட நடனமாதர் சிற்பமும், அதனை அழகுற வடிவமைத்துள்ளதையும் சான்றாகக் காட்டலாம். மேலும், பெண் வடிவத்தை ஹரப்பா போன்ற இடங்களில் வளமைச் சடங்குகளின் தலைவியாகவும், வளமைக்காக ஏற்படுத்தப்பட்ட பெண் தெய்வமாகவும் வணங்குகின்றனர் என்று அகழாய்வு மேற்கொண்டவர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

  வளமைத் தெய்வம்

  நடனமாது (Dancing Girl)

  ஹரப்பா (Headdress)       

  சிந்துவெளி நாகரிகத்தில் மட்டுமின்றி எகிப்திய நாகரிகம், சிரிய, சின்னாசிய நாகரிகங்களிலும் பெண் தெய்வங்களே முக்கியமான சிறப்பிடத்தைப் பெற்றுத் திகழ்ந்துள்ளன. சர் ஜான் மார்ஷல், அகழாய்வுச் சான்றுகளின் அடிப்படையில் இக்கருத்தைத் தெரிவிக்கும்  முன்பே, சந்தா என்பவர் இக்கருத்தை தெரிவித்துள்ளார். “சிரியாவில் அசுத்தாத் என்னும் தத்துவமும், சின்னாசியாவில் சிபெலேயும், எகிப்தில் இசிங் கோட்பாடும் தோன்றிய அதே சமுதாய நிலையில்தான், இந்தியாவில் சக்தி வழிபாடு தோன்றியிருத்தல் வேண்டும்” என அவர் தெளிவுபடுத்துகின்றார்*5.

  இதைப்போலவே, பண்டைய திராவிட மக்களில் பெரும்பகுதியினர், தாய் தெய்வ உரிமை, தாய்முறை போன்றவற்றைக் கடைப்பிடித்தனர். இதன் காரணமாக, திராவிட மக்களிடையே பெண் தெய்வ வழிபாடு பெருவழக்காக இருந்தது என சமூகவியல் அறிஞர்கள் கூறுவர்.

  பெண் தெய்வ வழிபாடும், சிவ வழிபாடும் தொடர்ந்து காணப்படுவதைப்போல், மொகஞ்சதாரோ, ஹரப்பா போன்ற இடங்களிலும், அகழாய்வில் முக்கோண வடிவ கற்களும், களிமண் பொருட்களும் கண்டெடுக்கப்பட்டன. அவற்றை சர் ஜான் மார்ஷல் சிவலிங்கமாகவே குறிப்பிடுகின்றார்*6. பெண் தெய்வ வழிபாடு போலவே மர வழிபாடும் பூர்விக மனிதனுக்குப் பொதுவான ஒன்றாக இருந்துள்ளது. மெசபடோமியாவிலும் மரக்கன்றுகள் தெய்வப் பண்புடன் விளங்கியதால்தான், அவை முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

  இந்து சமயத்தினரால் இன்றும் போற்றப்பட்டும், வழிபாட்டுக்கு உரியதாகவும் குறிப்பிடப்படும் அரச மரம், சிந்துவெளி முத்திரைகளில் காணப்படுவதால், இது 5000 ஆண்டுகளாக மக்களின் நெஞ்சில் பதிந்துள்ளது என்பதை அறியமுடிகிறது*7. சிந்துவெளியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு இலச்சினையில், இரு அரச மரக் கிளைகளுக்கு இடையில், பெண் தெய்வம் ஒன்று ஆடை இன்றி காணப்படுகிறது. நீண்ட கூந்தலும் கைகளில் காப்புகளும் உள்ளன. மக்கள் உருவங்களும், விலங்குகளும், அன்னை தெய்வத்துக்கு அடிபணிந்து அஞ்சலி செலுத்துவதுபோல் காட்டப்பட்டுள்ளன. எனவே, அரச மரமும், அன்னை வழிபாடும், அதாவது தாய் தெய்வ வழிபாடும் காலத்தால் முற்பட்டது என்பது தெள்ளத்தெளிவாகப் புலனாகிறது.

  தமிழகத்தில், ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் என்ற இடத்தில் நடைபெற்ற அகழாய்வில், ரோமானிய பானை ஓட்டில் அரச மரமும், அதன் அருகே யானை இருப்பதுபோலவும் காட்டப்பட்டுள்ளதை காணும்பொழுது, இதுவும் மர வழிபாடு தொடர்புடையதாகவும், மரத்தின் இன்றியமையாமையை உணர்த்துவதாகவும் கொள்ளலாம். திருக்காம்புலியூர் அகழாய்விலும் மர வழிபாடு குறித்த சுடுமண் உருவம் கிடைத்துள்ளது. அதில், ஒரு மரத்தை பெண் வழிபடுவதுபோல் சித்தரிக்கப்பட்டுள்ளதை காணமுடிகிறது. அது குறித்து பின்னர் விரிவாகக் காணலாம். பல அகழாய்வுகளில் கிடைத்த மட்கலன் ஓடுகளில் மரம், செடி இவற்றின் கீறல் குறியீடுகள் கிடைத்துள்ளதையும் இங்கு ஒப்பு நோக்கலாம்.

  அழகன்குளம் - மரம், யானை

  குழந்தையை ஈன்றெடுக்கும் பெண் உருவம் பதித்த முத்திரை ஒன்று சிந்துவெளி நாகரிகத்தின் எச்சமாக, ஹரப்பா அகழாய்வில் கிடைத்துள்ளது. இது, அக்கால பெண்களின் சிறப்பையும், அவர்கள் செடி, கொடிகளையும் மரத்தையும் பேணிக்காப்பதில் பெரும்பங்கு ஆற்றியுள்ளதையும் தெளிவுபடுத்திக்கொள்ள உதவுகிறது. சிலர், செடியை ஈன்றெடுப்பதாகக் கூறுவர். அது ஏற்புடையதன்று. செடி, கொடிகளைப் பாதுகாப்பதில் வல்லவர்களாகத் திகழ்ந்தமையால், செடியையும் குழந்தையாகப் பாவித்ததுபோல் கூறப்பட்டதாகக் கொள்ளலாம். ஆனால், குழந்தை ஒன்று கை, கால், தலையுடன் வெளிவந்துள்ளதும், தொப்புள் கொடியின் உதவியால் தொங்கிக்கொண்டு இருப்பதையும் காணமுடிகிறது. தொப்புள் கொடி உறவு என்பது வேர் போன்றது என்பதையும் இந்த முத்திரை நமக்கு தெளிவுபடுத்துகிறது என்றே கொள்ளலாம். எனவேதான், சில ஆய்வாளர்கள், செடியை ஈன்றெடுக்கும் காட்சி எனக் குறிப்பிட்டுள்ளனர் போலும்.

  குழந்தையை (செடியை) பிரசவிப்பதைப் போன்ற முத்திரை அச்சு – ஹரப்பா

  திருக்காம்புலியூர் – மர வழிபாடு – தாய் தெய்வம் (விருக்ஷ தேவதை)

  சிந்துவெளி நாகரிகத்துக்குப் பின், இந்தியாவில் குறிப்பாக தென்னிந்தியாவில் மக்கள் சிறந்த நாகரிகத்தைப் பெற்றுத் திகழ்ந்தனர் எனலாம். தமிழகத்திலும், ஆரம்ப காலகட்டத்தில் இயற்கையை வழிபட்ட மக்கள், காலப்போக்கில் சமயக் கடவுளர்களையும் வணங்கத் துவங்கினர். பெருங் கற்காலம் முதல் வரலாற்றின் துவக்க காலமான சங்க காலத்திலும், இறந்தவர்கள் இவ்வுலக வாழ்வைத் துறப்பினும் அதன்பின்னரும் இங்கேயே உயிர்வாழ்வர் என்ற நம்பிக்கைகள் தொடர்ந்தன. அதன் அடிப்படையிலேதான், ஈமச்சின்னங்களில் இடுதுளைகளை அமைத்து, அதனுள்ளே சடங்குகளையும் வழிபாடுகளையும் மக்கள் தொடர்ந்து செய்துவந்தனர். இடுதுளைகளை பெரும்பாலும் கிழக்கே அமைத்ததற்கு, சூரிய வழிபாட்டின் மீது அம்மக்கள் கொண்ட நம்பிக்கையை சுட்டுவதாகும்.

  சக்தி வழிபாடு

  தாய் தெய்வ வழிபாடு (Mother Goddess), மர தேவதைகள் வழிபாடு, இயக்கன் - இயக்கி வழிபாடு போன்ற அனைத்தும், சக்தி வழிபாட்டின் (Sakthi Cult) தாக்கமே எனலாம். தமிழக அகழாய்வுகளில், குறிப்பாக திருக்காம்புலியூர், பேரூர், போளுவாம்பட்டி போன்ற அகழாய்வுகளில் கிடைத்த சுடுமண் உருவங்கள் இதற்குச் சான்றுகளாக அமைகின்றன. திருக்காம்புலியூர் அகழாய்வில் கிடைத்த மர தேவதை (விருக்ஷ தேவதை) சுடுமண் உருவம் மிகவும் சிறப்பானதாகும். ஒரு மரத்துக்கு மிக நெருக்கமாக சாய்ந்தவாறு ஒரு பெண் இருப்பதுபோல் இந்த உருவம் அமைந்துள்ளது. மரத்துடன் பெண் சேர்ந்து இருப்பது போன்ற உருவங்கள், ஆரம்ப கால பௌத்த மத சிற்பக் கலை அமைதியில் அதிகம் காணப்பட்டன அதனைப் போன்றே இங்கும் தொடர்வதைக் காணமுடிகிறது.

  திருக்காம்புலியூரில் சுடுமண்ணால் ஆன நாகலிங்கம், பாலகிருஷ்ணர் போன்ற உருவங்களும், அழகரையில் கிடைத்த விநாயகர் உருவமும் குறிப்பிடத்தக்கவை. இவை காலத்தால் பொ.ஆ. 5-ம் நூற்றாண்டு என மண்ணடுக்குகளின் ஆய்வுப்படி கணித்துள்ளனர்*8. இதன் தொடர்ச்சியாக, வரலாற்றுக் காலத்தில் திருக்காம்புலியூர் என்னும் இடத்தில் மேற்கொண்ட அகழாய்வில், விநாயகர் உருவமும், மூஷிக வாகன உருவமும் சுடுமண்ணால் செய்தது  (பொ.ஆ.மு. 3 – 4-ம் நாற்றாண்டு) மண்ணடுக்கில் கிடைத்துள்ளதை குறிப்பிட்டுச் சொல்லலாம். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து, சங்க காலம் மற்றும் வரலாற்றுக் காலத்திலும் சைவ, சமய வழிபாடுகளும், சடங்குகளும், பூசைகளும் தொடர்கின்றன எனலாம். உருவ வழிபாட்டில் மாற்றம் பெற்று பல வளர்ச்சிகளைப் பெற்றாலும், பழைய சமயங்களைப் போற்றும்வண்ணமாகவே அவை அமைகின்றன.

  எனவே, மர தேவதைகள் வழிபாடு தமிழகத்தில் சங்ககாலம் தொட்டே பழக்கத்தில் இருந்து வந்துள்ளன என்பது, தமிழகத்தில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைத்த தொல்பொருள்களின் சான்றுகளின் அடிப்படையில் உறுதி செய்யப்பட்டுள்ளது*9.

  சான்றெண் விளக்கம்

  1. Dr. G.U. போப்பையர்

  2. சிலப்பதிகாரம், சைவசித்தாந்தப் பல்கலைக் கழகம் வெளியீடு, திருநெல்வேலி.

  3. கலாநிதி. க, கைலாசபதி. பண்டைத் தமிழர் வாழ்வும் வழிபாடும்.

  4. மேலது.

  5. R.P. Chanda, Indo-Aryan races, pp.150.

  6. மறைமலையடிகள், சைவசித்தாந்த ஞானபேதம், பக்.217.

  7. D.D. Kosambi, An Introduction to the study of Indian Hisitory, pp.60.

  8. T.V. Mahalingam, “The Report on the Excavations in the Lower Kavery Vally”, 1970, University of Madras, pp. 105, 113. “Alagarai – ALG-4,  2.10 mts, Below surface height 4.00 mts, a Broken image of Ganesa was noticed”. “Ganesa figure suggest the worship of this deity is popular in those days that is 4th – 5th C.C.E”.

  9. S. Selvaraj. Significance of Modhur Excavations, 2004.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai