Enable Javscript for better performance
தமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்- Dinamani

சுடச்சுட

  

  தமிழகத்தில் அன்னையர் எழுவருக்கு அமைந்த கோயில்கள்

  By ச. செல்வராஜ்.  |   Published on : 09th February 2018 12:20 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  அன்னையர் எழுவருக்கு என தனிக்கோயில்கள் ஒரு சிலவே இருந்துள்ளன. கிராமத் தெய்வங்களாக இருந்த தாய் தெய்வங்கள், பின்னர் ஏற்றம்பெற்று கன்னிமார்கள் என்றும், தாய் தெய்வங்கள் எழுவர் என்றும், சப்தமாதர்கள் என்றும் அழைத்துப் போற்றப்பட்டுள்ளனர்.

  பல்லவர் காலம்தொட்டே தனித்தனியாக இவர்களுக்குச் சிற்பங்கள் அமைத்து மக்கள் வழிபட்டுள்ளனர். நார்த்தாமலை போன்ற இடங்களில் அதன் தடயங்களைக் காணலாம். அன்னையர் எழுவர், தென்தமிழகத்தில் பெற்ற பரவலான வரவேற்பை வடதமிழகத்தில் பெறமுடியவில்லை. பாண்டியர் பகுதியில் திருக்கோளக்குடி, குன்னத்தூர், கோகர்ணம், பரங்குன்றம், மலையடிப்பட்டி போன்ற இடங்களில் இத்தொகுப்பைக் காணலாம்.

  தனிக்கோயில்கள் வழிபாடு என்பதைக் காட்டிலும், அளவில் பெரியதாக தாய் தெய்வங்களைப் படைத்து, அவற்றை கோயிலின் திருச்சுற்றுப் பிராகாரத்தில் அமைத்து அதற்குத் தனிச் சிறப்பை கொடுத்துள்ளனர். இருப்பினும், கர்ப்பக்கிருகத்திலோ அல்லது கோயிலுக்குள்ளேயே தனிக் கோயிலாகவோ அமைக்கப்படவில்லை. காரணம், கிராமங்களில் இருந்து வளர்ச்சி பெற்ற தெய்வங்கள் என்பதாலோ அல்லது பெரும்பான்மையாகச் சமூகத்தில் தாழ்நிலையில் உள்ள மக்கள் வணங்குவதாலோ என்பதாலா எனச் சரியாகக் கூறமுடியவில்லை. தெய்வச் சிற்பங்களிலும், போர்த் தெய்வங்களின் சிற்பங்கள் என்றால் அதற்குக் குறிப்பட்ட காலத்தில் மட்டுமே பூசைகளைச் செய்து வழிபடும் வழக்கத்தைக் கொண்டிருந்ததாலா என்பதும் அறிய இயலவில்லை.

  தமிழகத்தில் தாய் தெய்வங்கள் சிற்பத் தொகுப்பு

  தமிழகத்தில், குறிப்பாக தென்தமிழகத்தில் பரவலாக அன்னையர் எழுவர் தாய் தெய்வங்களின் சிற்பத் தொகுப்பினை அதிக அளிவில் காணமுடிகிறது. பாண்டியர் காலம் முதல் தொடர்ச்சியாகப் பல்லவர்கள், சோழர்கள், விஜயநகரப் பேரரசர்கள் காலம் வரை தாய் தெய்வங்களின் சிற்பத் தொகுப்பு பரவலாகக் காணப்பட்டாலும், அவற்றின் அமைப்பு முறையிலும், வழிபாட்டு முறையிலும் பெரும் மாறுபாடுகள் இருப்பதை அறியமுடிகிறது.

  தென்தமிழகத்தில் நாட்டார் வழக்குகளுக்குள் வந்த இத்தாய் தெய்வம், காலப்போக்கில் சிற்பான முதன்மை இடத்தைப் பிடித்து மக்களின் செல்வாக்கைப் பெற்றது. எவ்வாறாயினும், கோயில்களில் அமைந்த பெரும் தெய்வங்களுக்கு இணையாக இத்தாய் தெய்வங்களுக்குத் தனிக் கோயில்களோ, அல்லது தனி இடமோ ஒதுக்கப்பட்டு பராமரிக்கப்படவில்லை. கிராமத் தெய்வங்களைப்போல கோயிலின் சுற்றுப்பிராகாரத்தில் பரிவார தேவதைகளின் வரிசையில் இத்தொகுப்பையும் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.

  சப்த மாதர்கள் கைகளில் காணப்படும் கருவிகள்

  சப்த மாதர்கள் என்றழைக்கப்படும் அன்னையர் தெய்வங்களை போர்த் தெய்வங்கள் என்றும் குறிப்பர். எனவே, இவர்கள் தங்களின் கைகளில் ஏந்தியுள்ள ஆயுதங்கள் மற்றும் அவர்களது அணிகலன்கள் ஆகியவை என்னென்ன என்பதைக் காணலாம்.

  மகேசுவரி

  சிவனின் சக்தியாக வெளிப்படுபவள். ருத்ரி, ருத்ராணி, மகேசி எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்படுபவள். சிவனை மகேசன் என அழைப்பர். அதனால், அவரது சக்தியை மகேசுவரி என்றும் அழைத்தனர். நந்தியின் மேல் அமர்ந்தவள். சடாமகுடம், மான், மழு, சூலம், மகர குண்டலம், பத்ர குண்டலம் அணிந்தவள். ஆறு கைகளையும், மூன்று கண்களையும் கொண்டவள். தாமரை மொட்டை கையில் ஏந்தியபடி காட்சியளிப்பவள். கையில் திரிசூலமும், உடுக்கையும், மணிமாலையையும், நாகத்தை தன் கழுத்தில் அணிகலனாகவும் அணிந்தவள். பிறைச் சந்திரனைத் தலையில் அணிந்து சடாமகுடத்துடன் காட்சி அளிப்பவள்.

  கௌமாரி

  கௌமாரி, கார்த்திகேயினி, மற்றும் அம்பிகை எனப் பெயர்கள் இவளுக்கு உண்டு. இடுப்பில் சன்னவீரமும், அகன்ற கம்மல்களும், காதில் பனைஓலை குண்டலமும், சரப்பள்ளியும் அணிந்தவள். கைகளில் வச்சரமும், சக்தியும், மயிலை தன் இடது பக்கத்திலும் கொண்டு, ஒரு காலை மடக்கி, ஒரு காலை தொங்கவிட்ட நிலையிலும் சுகாசனத்தில் அமர்ந்திருப்பாள். ஆறு முதல் பன்னிரண்டு கைகள் கொண்டு காட்சியளிப்பவள். போர்க் கடவுளான கார்த்திகேயனின் அம்சமாக விளங்குபவள். தனது கரங்களில் ஈட்டி, கோடாரி, சக்தி, வில், அம்பு போன்றவற்றுடன் காட்சியளிப்பாள். கிரீட மகுடத்தை அணிந்தவள்.

  வைஷ்ணவி

  காக்கும் கடவுளான திருமாலின் அம்சப் படைப்பு. திருமாலுக்குரிய கிரீட மகுடமும், கைகளில் சங்கு, சக்கரம் கொண்டிருப்பவள். தண்டாயுதமும், தாமரை மலரும், கத்தியும், வில்லும் கைகளில் ஏந்தியுள்ளவள். பீடத்தில் கருடன் வணங்குவதுபோல அமர்ந்திருக்கும் நிலையும், கிரீட மகுடமும், வரத முத்திரையும் அபய முத்திரையும் கொண்டு காட்சியளிப்பாள். அணிகலன்களாக கழுத்தில் தங்கமாலையும், காதணிகளும், கை வளையல்களும் காணப்படும்.

  வராகி

  வராகியின் கைகளில் வாளும், பாசமும், சன்னவீரமும், கேயுரங்களும் வனப்புடையவளாகக் காட்டப்படும். இவளது வாகனம் காண்டாமிருகம். கரண்ட மகுடத்தை அணிந்தவள். இவளை எமனின் துணைவியாகவும் குறிப்பர். மனித உடலும் பன்றி முகமும் கொண்டவள். கையில் தண்டமும், கலப்பையும், வஜ்ராயுதம், கத்தி, சாமரம், அம்பு போன்றவற்றுடனும் காட்சியளிப்பவள்.

  இந்திராணி

  ஐந்திரி என்றும் மகேந்திரி, வஜ்ஜிரி எனப் பலவாறு அழைப்பர். ஆயுதங்களாக சக்தியும், வச்சிரமும் கொண்டிருப்பாள். இரண்டு முதல் ஆறு கரங்கள் கொண்டவள். யானை வாகனத்தையும், தலையில் கிரீட மகுடமும் கொண்டு காட்சியளிப்பாள்.

  பிரம்மி

  படைக்கும் கடவுள் பிரம்மனின் அருளுருவானவள் பிரம்மி. மஞ்சள் நிறத்தைக் கொண்டு நான்கு முகங்களையும் ஆறு கரங்களையும் அக்கமாலை, கமண்டலம் ஆகியவற்றுடன் காட்சியளிப்பவள். கரண்ட மகுடம் தரித்தவள். பல்வேறுவிதமான அணிகலன்களைக் கழுத்தில் அணிந்தவள்.

  சாமுண்டி

  தலையில் சுடர்முடியும், நடுவில் சிறிய கபாலமும், நெற்றிக்கண், காதில் பிணக் குண்டலம், கைகளில் உடுக்கையும், திரிசூலமும், ஈட்டியும் கொண்டு காணப்படுபவள். கொடூரமான முகமும், தொங்கிய வயிறும் காணப்படும். கபால மாலையை தனது கழுத்தில் அணிந்தவள்.

  பல்லவர்கள் காலம்

  தாய் தெய்வங்களின் தொகுப்பு பல்லவர்கள் காலத்தில் எழுவராக இருந்தது. சில இடங்களில் தாய் தெய்வங்களையும் பிற காவல் தெய்வங்களையும் இணைத்து அமைத்தனர். ஆரம்பக் காலகட்டங்களில் பெரிய அளவில் தனித்தனியாக தாய் தெய்வச் சிற்பங்களை வடித்துள்ளனர். இவற்றை ஒரே இடத்தில் திருச்சுற்று பிராகாரத்தில் அமைத்ததால், இதனைத் தாய் தெய்வங்களின் தொகுப்பு என்றும் தாய் தெய்வங்கள் என்றும், கன்னிமார் சிற்பங்கள் என்றும் அழைத்தனர். ராஜசிம்மப் பல்லவன் காலத்தில்தான் அன்னையர் எழுவர் சிற்பத் தொகுப்பு முதன்முதலாகக் காணமுடிகிறது.

  தமிழகத்தில் பாண்டியர் குடவரைக் கோயில்களில் மட்டுமே பழமையான அன்னையர் எழுவர் சிற்பங்களைக் காணமுடிகிறது. திருப்பரங்குன்றம், திருக்கோளக்குடி, குன்னத்தூர், கோகர்ணம் போன்ற குடவரைக் கோயில்களில் காணமுடிகிறது.

  முத்தரையர் கால அன்னையர் எழுவர்

  முத்தரையர் காலத்தைச் சார்ந்த குடவரைக் கோயில், மலையடிப்பட்டி சிவன் கோயிலே ஆகும். இங்கு அமைந்துள்ள குடவரைக் கோயிலில் முகமண்டபத்தின் தென்சுவற்றில், கிழக்கிலிருந்து மேற்காக வீரபத்திரர், பிராமி, மகேஸ்வரி, கௌமாரி, வைஷ்ணவி, வராகி, இந்திராணி, சாமுண்டி, பிள்ளையார் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. அன்னையர் எழுவரும் நான்கு கைகளுடன் சுகாசனத்தில் அமர்ந்துள்ளனர். வலது முன் கை அபய முத்திரையிலும், இடது முன் கை தொடையிலும் வைக்கப்பட்டுள்ளது. இங்கு காணப்படும் அன்னையர் சிற்பங்களில் காணப்படும் தனிச் சிறப்பு என்னவெனில், அன்னையர்களுக்குரிய கொடிகளும் காட்டப்பட்டுள்ளதே ஆகும். பிராமி அன்னக் கொடியும், மகேஸ்வரி நந்திக் கொடியும், கௌமாரி மயில் கொடியும், வைஷ்ணவி கொடியில் கருடனும், வராகி அம்மன் கொடியில் கலப்பையும், இந்திராணி கொடியில் யானையும் காணப்படுகிறது. சாமுண்டியின் கையில் வைத்துள்ள கொடியில் இருப்பது ஆந்தை.

  முற்காலச் சோழர்கள் காலத்தில் அன்னையர் எழுவர்

  பல்லவர்களுக்கு அடுத்து முத்தரையர்களும், முற்காலச் சோழர்களும் அன்னையர் எழுவர் சிற்பங்களைப் போற்றி மகிழ்ந்தனர். அவர்களும் தனியாகக் கோயில் அமைத்துச் செயல்படவில்லை. ஆனால், சிற்பங்கள் அனைத்தும் அளவில் பெரியதாகவும், அழகுறவும் வடிக்கப்பட்டுள்ளன. பரிவாரத் தெய்வங்களாகப் போற்றப்பட்ட அன்னையர் எழுவர் சிற்பங்கள், சோழர்கள் காலத்தில் தனிச்சிறப்பைப் பெற்றன என்பதே இங்கு வெளிப்படும் கருத்தாகும்.

  சிதைந்த நிலையில் காணப்படும், பொ.ஆ 9, 10-ம் நூற்றாண்டு சிற்பங்களுடன் வீரபத்திரரும் விநாயகரும்

  தனிக்கோயில் அமைப்பை விடுத்து, முற்காலச் சோழர்கள் காலத்தில் மையக் கோயிலைச் சுற்றி அமைந்த பரிவாரக் கோயில்களில் கன்னிமார் சிற்பத் தொகுப்பு அமைக்கப்பட்டு போற்றப்பட்டுள்ளதைக் காணலாம். அடுத்து, திருக்கட்டளை சுந்தரேசுவரர் கோயில், கீழையூர் அவனிகந்தர்வ ஈஸ்வரகிருகம் போன்ற முற்காலச் சோழர்கள் காலக் கோயில்களில், அன்னையர் எழுவர் தொகுப்பை அமைத்துள்ளனர். சோழர்கள் காலத்தில், பல கோயில்களில் தாய் தெய்வங்களின் சிற்பத் தொகுப்பை பெரிய அளவில் தனித்தனியாக கோயிலின் ஒரு பகுதியில் அமைத்துச் சிறப்பு செய்துள்ளதைக் காணமுடிகிறது. இவை தொடர்ந்து விஜயநகரர் காலத்தில் ஒரே பலகைக் கல்லில் செதுக்கி அமைக்கப்பட்டுள்ளதையும் தமிழகத்தில் பரவலாகக் காணலாம்.

  முற்காலச் சோழர்கள் காலத்தில் பல இடங்களில் சப்த மாதர்கள் மற்றும் அன்னையர் எழுவர், கன்னிமார்கள் என்றும் பெயரிட்ட நிலையில் இச்சிற்பத் தொகுப்பைக் காணமுடிகிறது. குறிப்பாக, சிதம்பரம், திருவலஞ்சுழி, திருக்கோயிலூர், திருவதிகை, திருத்தணி போன்ற கோயில்களில் காணமுடிகிறது.

  திருவலஞ்சுழி கோயில் - தஞ்சை மாவட்டம் – சோழர் காலம்

  முதலாம் ராஜேந்திர சோழனால் எடுப்பித்த அன்னையர் கோயில்

  சோழர்கள் காலத்தில், அன்னையர் தெய்வங்கள் போற்றப்பட்டனர் என்பதற்குச் சான்றாக, முதலாம் ராஜேந்திர சோழனால் எடுப்பிக்கப்பட்ட அன்னையர் கோயில் உள்ளது. விழப்புரம் மாவட்டம், விழுப்புரம் வட்டம் எசாலம் என்ற கிராமத்தில்தான் வரலாற்றுச் சிறப்புப் பெற்ற செப்புப் பட்டயம் ஒன்று சேகரிக்கப்பட்டது. அதில்தான், முதன்முதலாக முதலாம் ராசேந்திர சோழனால் கட்டப்பட்டதுதான் கங்கைகொண்டசோழீச்சரம் என்ற செய்தி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. ஏனெனில், அவனால் எடுப்பிக்கப்பட்டது என்று கூறப்பட்ட கங்கைகொண்டசோழீச்சரத்தில் அவனது கல்வெட்டுகள் ஏதும் காணப்படவில்லை. அதனால் நிலவிவந்த ஐயப்பாடான கருத்தை முறியடித்து, வரலாற்றுக்கு அரிய சான்றினை வழங்கிய ஊர்தான் எசாலம். இங்குதான் ராசேந்திர சோழன், அன்னையர் எழுவருக்கும் கோயில் எடுத்துச் சிறப்பித்துள்ளான். அதற்குச் சான்றாக இங்கு காணப்படும் அன்னையர் எழுவர் சிற்பங்கள் விளங்குகின்றன.

  ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அக்கற்பலகையில், அன்னையர் எழுவர் சிற்பமும் வரிசையாக செதுக்கப்பட்டுள்ளன. சோழர்கள் காலத்தில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட அன்னையர் சிற்பம் என்ற பெருமையையும் இது பெறுகிறது. இச்சிற்பங்களில் முதலாவதாக பிராமி, மகேஸ்வரி, வைஷ்ணவி, கௌமாரி, வராகி அடுத்து இறுதியாக சாமுண்டியைப் படைத்துள்ளனர். ஆனால் தற்பொழுது, சாமுண்டியை நடுவில் வைத்து அன்னையர் எழுவரைப் படைத்து வழிபாடுகள் செய்யப்படுகின்றன. தற்பொழுது இங்கு கோயில் காணப்படாவிட்டாலும், அன்னையர் எழுவர் கோயிலின் பகுதியில் பிடாரி அம்மன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. அன்னையர் எழுவர் சிற்பம் உடைந்த நிலையில் பாதுகாப்பின்றி அங்கே காணப்படுகிறது. காலத்தாலும், கலைச்சிறப்பாலும் இச்சிற்பம் சோழர்களின் கைவண்ணம் என்பதை தெள்ளத்தெளிவாகவே காணமுடிகிறது. எனவே, இதன் காலத்தை பொ.ஆ.11-ம் நூற்றாண்டு எனக் குறிக்கின்றனர்.

  திருத்தளிநாதசுவாமி திருக்கோயில் - திருப்பத்தூர்

  சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்தில் அமைந்துள்ள திருப்பத்தூர் திருத்தளிநாதசுவாமி திருக்கோயிலின் திருச்சுற்று மாளிகையில், சப்தமாதர்கள் சிற்பங்களின் தொகுப்பும், ஜேஸ்டாதேவி சிற்பமும் அமைந்துள்ளன. இச்சிற்பங்களின் அமைதியை ஒப்பு நோக்கும்பொழுது, இதன் காலத்தை பொ.ஆ. 10-11-ம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

  இங்கு காணப்படும் சப்தமாதர் சிற்பத் தொகுப்பில், முதலில் வீணாதர மூர்த்தியும் கடைசியாக விநாயகரும் காணப்படுகின்றனர். ஏழு கன்னியர்களும் இடது காலை மடித்து வலது காலை தொங்கவிட்ட நிலையிலும், வலது கை அபய முத்திரையிலும், இடது கையை தொடை மீது இருத்தியிருப்பது போலவும் வடிக்கப்பட்டுள்ளது. பின்னிரு கரங்களில், அவரவர்க்கு உரிய ஆயுதங்களை ஏந்தியவாறு காட்டப்பட்டுள்ளது. முதலில் பிராமி - அக்கமாலை, கெண்டி, மகேஸ்வரி - மழு, மான், இந்திராணி - வச்சிரம், சக்தி, வைஷ்ணவி - சங்கு, சக்கரம், வராகி - ஏர், உலக்கை, கௌமாரி - சக்தி, வச்சிரம், சாமுண்டா - ஆமை, சுவாலை ஆகியவை தெளிவாகக் காட்டப்பட்டு, அழகுற அமைக்கப்பட்டுள்ளது. பொதுவாக, தமிழகம் முழுவதுமே சப்தமாதர்கள், கன்னிமார்கள் வழிபாடு தொடர்ந்து வழிபாட்டில் இருந்து வந்துள்ளது என்பதற்கு இவை சான்றாக அமைகின்றன.

  ஏழு கருப்புசாமி சிற்பத் தொகுப்பு

  குறிப்பாக, தென்தமிழ்நாட்டில் தாய் தெய்வச் சிற்பங்கள் ஒரே கல்லில் செதுக்கி வழிபட்டு வந்ததை காணமுடிகிறது. எனவே, சுமார் 2000 ஆண்டுகளாகத் தாய் தெய்வ வழிபாடு பல்வேறு சிறப்புகளைப் பெற்று, நன்கு பரவலாகத் தமிழக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது என்றால் அது மிகையாகாது. கன்னியர் சிற்பங்களைப் போன்றே, ஏழு ஆடவர் சிற்பத் தொகுப்பும் இடம்பெற்றள்ளதை மணப்பாறை அருகே உள்ள நல்லாண்டார்கோயிலில் காணமுடிகிறது. இதனை, ஏழு கருப்புசாமி என்றழைத்து வழிபாடு செய்துவருகின்றனர். இதுபோன்று, தமிழகத்தில் வேறு எங்கும் காணப்படவில்லை. இது கருப்புசாமி வழிபாடு செய்பவர்களால் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம்.

  ஏழு கருப்புசாமி - நல்லாண்டார்கோயில்

  கொங்குநாட்டில் கன்னிமார் வழிபாடு

  கொங்குநாடு, மலைகளும், குன்றுகளும் சூழ்ந்த பகுதியாகும். தொல்பழங்கால மக்கள் வாழ்ந்தமைக்கான சான்றுகள் நிறைந்த அளவில், மேற்பரப்பு ஆய்வில் கண்டறியப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, கோவை மாவட்டம் வேட்டைக்காரன்புதூர் மலைப் பகுதியில், தொல்பழங்கால பாறை ஓவியங்கள் இருப்பதை தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை கண்டறிந்துள்ளது இக்கருத்துக்கு வலு சேர்ப்பதாகும். பழமையான பண்பாடுகளும், சடங்குகளும், பழக்க வழக்கங்களும் இப்பகுதியில் அதிகமாக வழக்கில் காணப்படுகின்றன.

  தொல்பழங்கால வழிபாடுகளில் கன்னிமார் வழிபாடு குறிப்பிடத்தக்கது. கொங்கு நாட்டில் பொங்கல் திருவிழா மிகவும் சிறப்புடன் கொண்டாடப்படும் திருவிழாவாகும். பண்டைய மக்கள் மேய்த்தல் தொழிலைக் கொண்டவர்கள் என்பதால், கால்நடைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து அவற்றைப் போற்றி மகிழ்ந்தனர். பொங்கல் திருவிழாவில், பூப்பொங்கல் என்பது கன்னிப்பெண்கள் மட்டுமே பங்கேற்று சடங்குகள் செய்யும் திருவிழாவாகும். பண்டைய கன்னி வழிபாட்டின் எச்சமாகவே இதனைக் கருதுவர்.

  பொள்ளாச்சி வட்டம், ஆனைமலைப் பகுதியில் சரியாக விளைச்சல் இல்லாத நிலங்களைச் சுற்றி, கன்னிப்பெண்கள் குறிப்பாக திருமணம் ஆகாத பெண்கள், தங்களது மாதவிலக்குக் காலங்களில் இந்நிலங்களையும், வயல்களையும் சுற்றிவந்தால் விளைச்சல் பெருகும் என்ற நம்பிக்கை வழக்கத்தில் இருந்துவந்துள்ளது. இதுவும் கன்னிமார்சாமிகள் வழிபாட்டில் வளமைச் சடங்குகளுடன் தொடர்புடையது என்பதையே தெளிவுபடுத்துகிறது. கொங்கு நாட்டில் சப்த கன்னியர்கள் சிற்பம் அரிதாகவே காணப்படுகிறது. எனவே, இங்குள்ள கிராமங்களில் ஏழு செங்கற்களை செங்குத்தாக நட்டுவைத்து இதனையே கன்னிமார்கள் எனக் கும்பிட்டு வழிபாடு செய்துவருகின்றனர். கொங்கு நாட்டு மக்கள் சக்தியின் மொத்த வெளிப்பாடும் கன்னிப் பெண்களே; கன்னி ஒருத்தியிடம் மட்டுமே படைக்கும் சக்தி பொதிந்துகிடக்கிறது என்ற நம்பிக்கை அதீதமாக இருந்துள்ளது.

  அடுத்த அத்தியாயத்தில், விஜயநகர மன்னர்களின் ஆட்சிக்காலத்தில் கன்னிமார்சாமிகள் வழிபாடு எவ்வாறெல்லாம் போற்றப்பட்டது எனக் காணலாம்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai