அத்தியாயம் 37 - நடுகற்கள் வகைகளும் வகைப்பாடும் - 30

 பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்மூத்தோர்களுக்கு புறத்தோற்றம் ஏதுமற்ற எளிய ஈமக்குழி சின்னம் முதல் 20

 
பெருங் கற்படைச் சின்னங்களும் திணை வாழ்வியலும்

மூத்தோர்களுக்கு புறத்தோற்றம் ஏதுமற்ற எளிய ஈமக்குழி சின்னம் முதல் 20 டன் எடைக்கும் கூடுதலான எடை கொண்ட கற்படைச் சின்னங்கள் வரை எழுப்பிய பெருங் கற்படைப் பண்பாட்டில், பொருளாதார வாழ்வியல் பன்முகப்பட்டிருந்தது.

இரும்பின் பயன்பாடு இக்காலத்தில் மிகுதியாக இருந்தமையால், இப்பண்பாட்டுக் காலம் இரும்புக் காலம் என்று அழைப்பதும் வழக்கில் உள்ளது. ஆயுதங்களைச் செய்ய பயனான மூலப்பொருளின் பெயர்கொண்டு அழைக்கும் வரலாற்றுக்கு முற்பட்ட காலப் பெயர் சூட்டும் மரபுக்கு இது இயைந்ததாக உள்ளது. இப்பண்பாட்டுக் காலகட்டம் முழுவதும் இயற்கை அமைப்பும், வளங்களின் அளிப்பும் அவ்வவ் நிலம் சார்ந்த வாழ்வியலுக்கும் பொருளாதாரத்துக்கும் காரணிகளாக அமைந்திருக்கின்றன.

முதலில் கருதப்பட்டதுபோல், பெருங் கற்படைப் பண்பாடு ஒரு குறிப்பிட்ட வாழ்க்கை முறையைக்கொண்ட மக்களால் உருவாக்கப்பட்ட பண்பாடு இல்லை. தென்னிந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட புதிய அகழாய்வுகளும், மேற்பரப்பு கள ஆய்வுகளும் இதனை உறுதிசெய்கின்றன.

இப்பண்பாட்டை உருவாக்கியவர்கள் மேய்த்தல் சமூத்தினர் என்ற கருத்தையும், அச்சமூகம் நாடோடி வாழ்க்கை முறையினைக் கொண்டிருந்தது என்ற கருத்தையும் அண்மைக்கால ஆய்வுகள் மறுதலிக்கின்றன.

வரலாற்றுப்போக்கில், தென்னிந்தியாவின் பெருங் கற்காலப் பண்பட்டு மக்கள் நாடோடி மேய்த்தல் மரபு கொண்டவர்கள் என்ற கருத்து லெஸ்னிக் (1967), பி. நரசிம்மையா (1980) போன்றோரால் முன்வைக்கப்பட்டது. வேளாண் சமூக மக்கள் என்ற மற்றொரு கருத்து குருராஜராவ் (1972), ராமச்சந்திரன் (1980), ராவ் (1988) போன்றோரால் முன்வைக்கப்பட்டது. இது இவ்விரு பண்பாட்டு மக்களின் கலவையான வெளிப்பாடு என்ற மற்றொரு கருத்து ராமச்சந்திரன் (1962), செளந்தரராஜன் (1962), டியோ (1985), மொகந்தி (2005) ஆகியோரால் முன்நிறுத்தப்பட்டது.

யுத்தபூமியின் முன் அத்தியாயங்களில், தகடூர்ப் பகுதியில் கிடைக்கும் கல்திட்டை ஓவியங்களின் வழி மேய்த்தல் சமூகம் மற்றும் வேளாண் சமூகம் மட்டுமல்லாது, இக்கால வேட்டைச் சமூகமும் பெருங் கற்படைப் பண்பாட்டில் அங்கம் பெற்றிருந்தது விளக்கப்பட்டுள்ளது. இச்சமூகங்கள் அருகருகே வாழ்ந்ததும் இதன்வழி தெளியப்பட்டுள்ளது. இதனை மேலும் தெளிவாக, குகை மற்றும் வாழிடத் தொல்பழங்கால ஓவியங்கள் வெளிப்படுத்துகின்றன. கருக்கியூர் போன்று பல தொகுப்புகளைக்கொண்ட ஓரிட ஓவியங்கள், இச்சமூகங்கள் இணக்கமாக வாழ்ந்திருந்த நிலையை அடையாளப்படுத்தும் சான்றுகளாகின்றன.

தமிழகம் உட்பட தென்னிந்தியாவில் நுண் கற்காலப் பண்பாட்டுக்கு உரிய ஓவியங்கள் முதல் புதிய கற் கற்காலம், இரும்புக் காலம் மற்றும் வரலாற்றுக் காலப் பண்பாட்டுக்கு உரிய ஓவியங்கள் வரை தொடர்ச்சியாகக் காணமுடிகிறது. இவை குகை மற்றும் வாழிடங்களுக்கு அருகாமையில் அமைந்த பாறைகளில் காணப்படுகின்றன. இவற்றுக்கு இடையே உள்ள பண்பாட்டுத் தொடர்பு ஒரு தொடர்ச்சியைக் காட்டுகிறது. தொடர்ச்சியை மறுக்கமுடியாதும் உள்ளது. இவற்றுக்கு இடையேயான பொதுப்பண்புகளும் புறக்கணிக்கமுடியாத இடத்தில் உள்ளன. இவற்றுக்கு இடையிலான மாற்றம் என்பது மிக மெல்லியதாக வெளிப்பட்டிருக்கிறது. கலைப்பாணி மாற்றம் என்பது ஒவ்வொரு பண்பாட்டுக்கும் இடையில் மிகவும் மெதுவாக சிறிதளவு மாற்றமே பெற்று வெளிப்பட்டுள்ளது.

இதில், நுண்கற்காலத்தின் துவக்கமான மு.பொ.ஆ.10000 முதல் பொ.ஆ. 200 வரையிலான வரலாற்றுக் காலம் வரையிலான காலகட்டம் அடங்கியுள்ளது. இங்கு பண்பாடு மாற்றங்களும் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி ஒரே காலகட்டத்தில் நிகழவில்லை. இரு வெவ்வேறு இடங்களில் இரு வெவ்வேறு பண்பாடுகள் நிலவின என்று குறிப்பிடமுடியாது. அருகருகே அமைந்த இரு இடங்களில்கூட இரு வெவ்வேறு பண்பாடுகளில் வாழ்ந்த மக்கள் இருந்ததை அறியமுடிகிறது.
இப்பண்பாடுகளுக்கு இடையிலான காலகட்டம் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்டது.
புதிய அறிதல்களாலும், புதிய தொழில்நுட்பங்கள் காரணமாகவும் இக்காலகட்டங்கள் முன்னோக்கித் தள்ளப்படலாம். அல்லது உறுதி செய்யப்படலாம். எவ்வாறாயினும், மாற்றம் என்பது ஆயிரக்கணக்கிலும், நூற்றுக்கணக்கிலும் ஆண்டுகளை எடுத்துக்கொண்டு மிக மெதுவாகவே வெளிப்பட்டுள்ளது.

இவ்வோவியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ள வண்ணங்கள் காலத்தை அறிய உதவினாலும், அது காலத்தை துல்லியமாகத் தெரிவிக்கவில்லை. ஒவ்வொரு பண்பாட்டுக் காலகட்டமாக மட்டுமே பகுத்தறிய உதவுகிறது. வண்ணங்களில் சிவப்பும் வெள்ளையும் முன்நிற்கின்றன. இவ்விரண்டும் ஒன்றை அடுத்து ஒன்றும்; இரண்டும் பயன்படுத்தப்பட்ட நிலையைக் காணமுடிகிறது. இவற்றுள் சிவப்பு வண்ணம் காலத்தால் முற்பட்டது.

இப்பின்னணியில், இன்று அறியப்பட்ட காலமுறை கொண்டு தமிழகத்தில் நுண்கற்கால ஓவியம் என்று அடையாளம் காணப்படும் ஓவியம் ஒன்று, மு.பொ.ஆ. 10000 - 3000 வரையிலான எக்காலகட்டத்தையும் சார்ந்தாக இருக்கலாம். புதிய கற்கால ஓவியம் என்பது மு.பொ.ஆ. 4000 முதல் மு.பொ.ஆ. 1000 வரையிலான எக்காலகட்டத்தையும் சார்ந்ததாக இருக்கலாம். இவ்விரு கால ஓவியங்களும் சிவப்பு வண்ணத்தால் ஆனவை. இரும்புக்கால ஓவியம் என்பது மு.பொ.ஆ. 1500 முதல் பொ.ஆ. 200 வரையிலான காலத்தைச் சார்ந்ததாகவும், வரலாற்றுக்கால ஓவியம் என்பது மு.பொ.ஆ. 500 முதல் துவங்குவதாக இருக்க வேண்டும். அப்பண்பாடுகள் இம்மண்ணில் நிலவிய காலகட்டம் இதுவே. ஆனால், இன்றுவரை அறியப்பட்ட நுண் கற்கால ஓவியத்தின் பழமை மு.பொ.ஆ. 3000 அளவினது என்று வரையறுக்க முடியாது உள்ளது. புதிய கற்காலப் பண்பாட்டு மக்களின் ஓவியங்களும், புதிய கற்காலத்தின் இறுதி ஆண்டுகளுக்கு உரியவையாக இன்று அறியப்பட்டும் கணிக்கப்பட்டும் உள்ளன. பெருங் கற்காலத்துக்கு உரியவையும் மு.பொ.ஆ. 1000 அல்லது மு.பொ.ஆ. 500-க்குப் பிற்பட்டதாகவே கணிக்கப்பட்டுள்ளது. வரும் காலத்தில், இவற்றின் காலம் முன்னோக்கிக் கொண்டுசெல்ல சான்றுகள் கிடைக்கலாம். அறிவியலும் வளர்ச்சி பெறலாம்.

நமக்குக் கிடைத்துள்ள ஓவியங்கள் பெரும்பான்மையும் வெள்ளை வண்ணத்தால் ஆனவை. காலத்தால் மூத்த சிவப்பு வண்ணத்தின் பயன்பாடும் உண்டு. காலத்தால் பழமைவாய்ந்த சிவப்பு வண்ண ஓவியம் அழிந்துபட, அதே இடத்தில் அதே காட்சியை அல்லது புதிய காட்சியை வெள்ளை வண்ணம் கொண்டு தீட்டியிருப்பதையும் காணமுடிகிறது. சிவப்பு வண்ணம் காலத்தால் மூத்தது என்பதற்கு இது சான்றாகிறது. அதேசமயத்தில், சிவப்பு நிறம் வரலாற்று உதய காலத்திலும், கருங்கலக்குடி (மேலூர் வட்டம், மதுரை மாவட்டம்), அணைப்பட்டி (திண்டுக்கல் மாவட்டம்) மற்றும் கருக்கியூரின் பெரும்பான்மையான ஓவியங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது. நீளம், இளமஞ்சள், வெளிர் மஞ்சள் போன்ற நிறங்களும் குறைந்த அளவில் பயன்படுத்தப்பட்டுள்ளன. தனியாகப் பயன்படுத்தி வரையப்பட்ட ஓவியங்கள் இன்னும் அறியப்படவில்லை. ஆக, காலத்தைக் கணிக்க நிறம் உதவும் என்பது முற்றான சான்றில்லை என்பதை இவை தெளிவுபடுத்துகிறது. இங்கும் மூலப்பொருட்களின் கிடைப்பே ஓவியத்தின் வண்ணத்தை தீர்மானித்துள்ளது என்பதைக் காட்டுகிறது.

தமிழகத்தைப் பொருத்தஅளவில், இவ்வோவியங்களைப் பழைய கற்காலப் பண்பாடு வெளிப்பட்டுள்ள பாலாறு, தென் பெண்ணை ஆற்றுப்படுகை நிலங்கள் அதிகமாகக் காணமுடிகிறது. அதாவது, வடதமிழகத்தின் மாவட்டங்களான இன்றைய அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், வேலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை மாவட்டங்களில் இவை அடர்த்தியாக வெளிப்பட்டுள்ளன. நீலகிரி, கோயம்புத்தூர், மதுரை, திண்டுக்கல், தேனி, சிவகங்கை மாவட்டங்களில் கணிசமான தொல்லோவியங்கள் அறியப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் குறைவான இடங்களில் தொல்லோவியங்களை வெளிப்படுத்தினாலும், அதிக எண்ணிக்கையில் ஓவியங்களை வெளிப்படுத்தியுள்ளது. கருக்கியூர், தென்னிந்தியாவில் அளவிலும், ஓவியங்களின் எண்ணிக்கையிலும் வெளிப்படுத்தப்பட்ட இடமாகும். இருந்தாலும், பழைய கற்காலத்துக்குரிய தொல்லோவியம் ஏதும் இப்பகுதியில் இருந்து வெளிப்படாமல் உள்ளது.

தென்னிந்தியாவில் காணப்படும் தொல்லோவியங்களுக்கு இடையே ஒன்றுமைகள் உள்ளன. இந்த ஒற்றுமை நாம் வகுத்துக்கொண்ட இன்றைய நாட்டு, மாநில, மாவட்ட எல்லை வரையறைகளுக்கு உட்படாதவை. இந்த ஒற்றுமை, பெருங் கற்படைக் காலத்தில் மேலும் தெளிவாக உள்ளது.
இந்நிலையில், வேறு எந்த தொல்பொருள் சான்றுகளைவிடவும், ஓவியங்கள் ஒரு தனித்த மரபுத் தொடர்ச்சியை முன்னிறுத்துகின்றன. அது நுண் கற்காலத்தில் இருந்து தொடங்குகிறது. அது, இம்மண்ணுக்கு அப்பாற்பட்டு வெளியில் இருந்துவந்த சான்று எதனையும் கொண்டிருப்பதாகத் தோன்றவில்லை.

இவ்விளக்கங்கள் அடையப்பட்ட பிறகு, இப்பண்பாட்டுக் காலகட்டத்தில் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து தனித்தனி அடையாளங்களுடன் பல்கிப் பெருகியிருந்த இனக்குழுக்கள் வாழ்ந்ததை அறியமுடிகிறது. நிலவியல் சார்ந்த வாழ்க்கை முறைகளால் இம்மக்கள் குறிஞ்சி வாழ்வியல், முல்லை வாழ்வியல், மருத வாழ்வியல், நெய்தல் வாழ்வியல் மற்றும் பாலை வாழ்வியல் என்று பெருஅடையாளத்தைப் பெற்றிருந்தனர்.

இப்பகுதியின் நெய்தல் வாழ்க்கை நீர் சார்ந்த வாழ்வியல்தான் என்றாலும், முற்றிலும் கடல்சார் நெய்தல் வாழ்வியலில் இருந்து பெரிதும் மாறுபாடு கொண்டது. அடிப்படையில் அது கடலால் சூழப்பட்ட நிலவாழ்வியல்; இது நிலத்தால் சூழப்பட்ட நீர்வாழ்வியல். முன்னதில், நீர்சார் வாழ்வியலுக்கு வழங்கப்பட்ட வாய்ப்புகளும் வசதிகளும் மிகுதி. பின்னதில், அவ்வாழ்வியலுக்கு வழங்கப்பட்டது வரையறுக்கப்பட்ட வாய்ப்புகளும் வசதிகளுமே. முன்னதில், கடல்வளத்தால் அவர்கள் பிற நிலத்து மக்கள் மீது ஆளுமை செலுத்தினர். பின்னதில், நிலவளத்தால் வளர்ந்திருந்த மக்களால் நீர்சார் மக்கள் ஆளுமைக்கு ஆட்பட்டனர்.

இவ்வாறு, கிளைபிரிந்த மக்களின் திணை சார்ந்த வாழ்வியலின் பகுதிகள் முழுமையாக மேற்பரப்பு களஆய்வு செய்யப்பட்டு, பெருங் கற்காலப் பண்பாட்டுச் சின்னங்களின் எண்ணிக்கை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன என்று குறிப்பிடமுடியாது. அழிந்துபட்டவை பற்றிய புள்ளிவிவரமும் இல்லை. இன்றைய தமிழகத்தின் வடமாவட்டங்களில் ஏனைய பகுதிகளின் காணமுடியாத தொன்மையான, வகைவகையான தொல்லியல் சின்னங்கள் மிகுதியாகக் காணக்கிடைப்பதன் காரணங்கள் ஆராயப்படவேண்டி உள்ளது. நிலவியல் வளம் முதன்மையான காரணம் என்பதை அந்த ஆய்வுகள் மெய்ப்பிக்கக்கூடும்.

இப்பகுதி கீழ்நிலைப் பழைய கற்காலம் முதல், தொடர்ச்சியாக மாந்தரினத்தின் பரிணாம வளர்ச்சி நிலைகளின் எல்லா நிலைகளின் வாழ்வியலுக்கும் உகந்ததாக இருப்பது வேறு பகுதிகளில் அரிது. பழைய கற்காலத்தின் மூன்று நிலைகள் அடுத்ததாக நுண் கற்காலம், பிறகு புதிய கற்காலம் பிறகு பெருங் கற்படைக் காலம் அதனைத் தொடர்ந்த வரலாற்றுக் காலம் என இப்பகுதியில் மு.பொ.ஆ. 15 லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர் தொடங்கிய மாந்தரினத்தின் வாழ்க்கை இன்றும் தொடர்கிறது.

இத்தெளிவுக்குப் பிறகு கீழ்க்கண்ட கேள்விகள் எழுகின்றன.
தென்னிந்தியாவின், குறிப்பாக “சென்னைக் கற்கருவி” படைத்த மனிதனே, கீழ்நிலை பழைய முதல் ஒவ்வொரு பண்பாட்டு வளர்ச்சிகளையும் படைத்து பல்கிப் பெருகினானா?

ஒவ்வொரு பண்பாடும் வெளியில் இருந்து வந்த வெவ்வேறு இனக் குழுக்களால் உருவாக்கப்பட்டு, அதனை இம்மண்ணைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள் ஏற்று தம்முடையதாகவும் ஆக்கிக்கொண்டு வாழ்ந்தனரா?

ஒவ்வொரு பண்பாடும் ஒன்றுக்கொன்று தொடர்பற்ற, வெளியில் இருந்து கொண்டுவந்த இனக்குழுக்களால் அவர்களால் மட்டும் மேற்கொள்ளப்பட்ட பண்பாடாக விளங்கியதா?

இப்பண்பாடுகளை வெளியில் இருந்து வந்தவர்கள் கொண்டுவந்தவர்கள் என்றால், அவர்கள் தம் பூர்வீகம் விட்டுக் கிளம்பும் காலத்தின் பண்பாட்டை அப்படியே இங்கு கொண்டுவந்து வாழ்ந்தனரா?

உதாரணமாக, மெசபடோமியாவில் இருந்து புறப்பட்ட வேளாண் தொழிலில் ஈடுபட்டிருந்த புதிய கற்கால மனிதன், தென்னிந்தியாவை எவ்வாறு அடைந்தான். வேளாண்மையின் உயர் தொழில்நுட்பங்களைக் கொண்டிருந்த மெசபடோமிய புதிய கற்கால மனிதன் அத்தொழில்நுட்பங்கள் எல்லாவற்றையும் இங்கு பயன்படுத்தி பயிர்த்தொழிலை மேற்கொண்டானா? தொடர்ந்து பயணப்பட்ட உதாரணமாகக் கொண்ட மெசபடோமிய மனிதன், இடையில் கைவிட்ட தொழில்நுட்பங்கள் எவை? வழியில் கற்றுக்கொண்டு கொண்டுவந்த தொழில்நுட்பம் எவை? அவ்வாறு வந்தவர்களின் எண்ணிக்கை / அல்லது கூட்டங்களின் எண்ணிக்கை என்ன? அவர்கள் முதலில் எங்கு தங்கி எவ்வாறு பரவி, இங்கு பூர்வீகமாகக் கொண்ட மக்களுக்கு தம் பண்பாட்டை எவ்வாறு பரப்பினார்கள்?

மேலாக, பெருங் கற்காலப் பண்பாட்டு வரையிலான பண்பாடு வெளியில் இருந்து வந்து இம்மண்ணில் குடியேறி, இம்மண்ணின் பூர்வீக மக்களுக்கும் அளித்தனர் என்றால், (பெரும்பாலான வரலாற்று ஆசிரியர்களின் நிலைப்பாடு இதுவே) இவர்கள் தென்னிந்தியாவின், குறிப்பாக கிருஷ்ணா நதி வரையிலான நிலப்பரப்பில் ஐவகை திணை வாழ்க்கையில் ஒடுங்கியது எவ்வாறு என்று விடை தேடவேண்டி உள்ளது. ஏனெனில், திணை வாழ்க்கை முறை உலகின் வேறு எப்பகுதியிலும், இவ்வாழ்வியலின் அடையாளங்கள் குறித்த பதிவுகளோ சான்றுகளோ இல்லை என்பது இக்கேள்வியை மேலும் அர்த்தமுள்ளதாக்குகிறது (சங்க காலத்தில் தமிழகத்தின் எல்லை கிருஷ்ணா நதி என்பது இந்த ஆசிரியரின் நிலைப்பாடு. பார்க்க: சங்ககாலத் தமிழகமும் அதியர் மரபினரும்).

தென்னிந்தியாவில் கிடைத்துவரும் தொல்பொருட்களை தமிழ் மண்ணின் தனித்த அடையாளமாக உள்ள திணை நிலத்துக்கு உரியவை, திணை வாழ்வியலுக்கு உரியவை, திணை மயக்க வாழ்வியலுக்கு உரியவை என வகைப்படுத்திக் காணவேண்டி உள்ளது. இப்பார்வையில், தொல்பொருட்கள் புதிய விளக்கத்தைப் பெறும். தொல்காப்பியம் தன்காலத்துக்கு முன்னரான மற்றும் சமகாலத் தமிழர் வாழ்வியலை அடையாளப்படுத்துவதாக உள்ளபோது, இத்தோடல் மேலும் முக்கியத்துவம் உடையதாகிறது.

பெருங் கற்படை என்ற இரும்புக் காலப் பண்பாட்டில் பொருளாதார வாழ்வியல்

தென்னிந்தியாவில் பெருங் கற்படைச் சின்ன வகைகள், அதனைத் தொடர்ந்த நடுகல் சின்ன வகைகள் ஆகிய இரு பண்பாட்டுச் சின்ன வகைகளும் பரவலாகக் காணப்பட்டாலும், கிழக்குத் தொடர்ச்சி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர்கள் சந்திக்கும் பகுதிகளில்தான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன. இவ்விரு சின்னங்களும் வரலாற்றுக்கு முற்பட்ட காலம், வரலாற்று உதயக் காலம் மற்றும் வரலாற்றுக் காலம் ஆகிய மூன்று காலகட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. இப்பகுதி இவ்விரு மலைத்தொடர்களுக்கும் தொடர்பற்ற அல்லது அறுபட்ட தொடர்ச்சியைக்கொண்ட மலை சார்ந்த பகுதிகளாகும். இப்பகுதி, இன்றைய தமிழகம், ஆந்திரம் மற்றும் கர்நாடக மாநிலங்கள் சந்திக்கும் பகுதியாக உள்ளது. இப்பண்பாடுகள் நிலவிய காலத்தில், இப்பகுதி தனித்த அடையாளம் கொண்ட சமூகப் பொருளாதாரச் சூழல் கொண்ட தனி நிலத்தொகுதியைக் கொண்டதாக விளக்கியிருக்கிறது. இன்று, அத்தொன்மையான நிலத்தொகுதியின் பெயரை அறியமுடியாது உள்ளது. வரலாற்றுக் காலத்தின் துவக்கத்தில் அது தமிழகம் என்ற பெரும் நிலத்தொகுதிக்கு உட்பட்டதாக விளங்கியிருக்கிறது.

தென்னிந்திய பெருங் கற்படைச் சின்னங்களின் அமைவிடங்கள்

(தொடரும்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com