அத்தியாயம் 70 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

குலக்குறி நம்பிக்கை பெரும்பாலும் பழங்குடி சமுதாயங்களில் அதன் முழுத்தன்மையுடன் காணப்படுகிறது. பழங்குடியல்லாத சமூகங்களில் இத்தன்மை முழுமையானதாகவோ, எச்சங்களாகவோ இருப்பதைக் காணமுடிகிறது.

குலக்குறி வழிபாடு

தொன்மைச் சமயம் குறித்த சிந்தனையில் எமிலி தர்க்கைம் முன்வைத்த கோட்பாடு, குலக்குறியியம் (Totemism) என்று குறிக்கப்படுகிறது. தமிழில் இது குலக்குறி வழிபாடு என்று குறிக்கப்படுகிறது. இன்றுள்ள சமய நம்பிக்கைகள் அனைத்தும் குலக்குறி நம்பிக்கையில் இருந்து வளர்ச்சிபெற்றவையாகும் என்று காட்டும்பொழுது, “இன்றுள்ள சமய முறைகளில் இன்றியமையாதெனக் எனக் கருதப்படும் பண்புகளான ’வழிபாட்டுப் பொருள், அதன் மீதான நம்பிக்கை, நம்பிக்கையில் உறுதிகொண்டோர்’, ‘சடங்கு, சடங்கு செய்தல்’ போன்றவற்றைக் கொண்ட ஆரம்பகாலச் சமயமாகக் குலக்குறியியம் தோன்றியது” என விளக்குகிறார். (Emile Durkheim, ‘The Elementary Form of Religious Life’) ஜான் பெர்கூசன் மெக்லெனன், “மனித குலத்தின் எல்லாப் பிரிவுகளும் பழங்காலத்தில் குலக்குறியியல் நிலையைக் கடந்துதான் வந்துள்ளன” எனச் சுட்டிக்காட்டுவார். (John Fergusan Mclenan, The worship of Animals and Plants, 1869-70.)

இ.பி. டெய்லர் என்பவர், குலக்குறியை சமயத்தின் அடிப்படை என்பதை மறுத்து “குலக்குறி என்பது வெறும் விலங்கு, தாவர வழிபாடு அன்று; இது ஒரு குறிப்பிட்ட விலங்குக்கும் ஒரு குழுவைச் சேர்ந்த மக்களுக்கும் இடையிலுள்ள தொடர்பினைக் குறிக்கிறது” என்று விளக்கிக் காட்டுவார்.

குலக்குறி நம்பிக்கை

மாந்தரினத்தில் சில சமூகத்தினர், தம் குலத்தவர் சில பொருட்களில் இருந்து தோன்றியவர்கள் என்றும், அதனோடு பல்வேறு முறைகளில் தொடர்புடையவர்கள் என்றும் நம்பிக்கை கொண்டு, அப்பொருளை அவர்தம் குலக்குறியாகக் கொண்டுள்ளனர். இவ்வகைப்பட்ட குலக்குறிகளாக விலங்குகள், தாவரங்கள், இயற்கைப் பொருட்கள் ஆகியவை முதன்மையிடத்தில் உள்ளன.

குலக்குறி நம்பிக்கை பெரும்பாலும் பழங்குடி சமுதாயங்களில் அதன் முழுத்தன்மையுடன் காணப்படுகிறது. பழங்குடியல்லாத சமூகங்களில் இத்தன்மை முழுமையானதாகவோ, எச்சங்களாகவோ இருப்பதைக் காணமுடிகிறது. குலக்குறி அமைப்புடைய சமுதாயங்களில், குலக்குறியின் செயல்பாடு சமுதாயத்தின் பல நிறுவனங்களோடு தொடர்புடையதாக உள்ளது. குறிப்பாக திருமண முறை, உறவு முறை, வழிபாட்டு முறை, உணவு முறை போன்றவற்றோடு குலக்குறி மிகவும் நெருங்கிய செயலுறவைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு சமூகத்திலும், அச்சமூகத்தவர் தம்தம் குலக்குறியோடு கொண்டுள்ள நடைமுறைகள், நம்பிக்கைகள், செயல்பாடுகள் அனைத்தும் சேர்ந்த ஒன்றே குலக்குறியம் என்று குறிப்பிடப்படுகிறது.

ஒரு குலக்குறிக்கும் அதனோடு தொடர்புடைய குழுவுக்கும் உள்ள உறவு, குழுவுக்குக் குழு மாறுபடுகிறது. இம்மாறுபாடு, உலகம் தழுவிய நிலையில் ஒன்றுபோல இருப்பதில்லை. சில குழுவினர்க்கு அவர்களின் குலக்குறியோடு கொண்டுள்ள உறவு கருதியலாகவும் (ideological), சில குழுவினர்க்கு அது இயல்கடந்த மறைமெய்யாகவும் (mystical) இன்னும் சிலருக்கு அவ்வுறவு பயபக்தியுடன் போற்றும் (reverential) தன்மை கொண்டதாகவும், இன்னும் சில குழுவினருக்கு அவ்வுறவு, உணர்ச்சிவயப்பட்ட நிலைகொண்டதாகவும், மேலும் சில குழுவினருக்கு அவரவர் குடிவழித் தொடர்பைக் காணும் முறையாகவும் உள்ளது. இவ்வாறான வேறுபாடுகளை அடையாளம் கண்டுணர முடிந்தாலும், கீழ்க்கண்ட சில பொதுப்பண்புகளை அனைத்துச் சமுதாயங்களும் கொண்டிருப்பதையும் காணமுடிகிறது.

  1. குலக்குறி பொதுவாக விலங்காகவோ, தாவரமாகவோ, இயற்கைப் பொருளாகவோ இருக்கிறது.
  2. ஒத்த குலக்குறி உடையவர்கள் அனைவரும் ஒருவழி மரபுடையவர்களாக இருப்பர்.
  3. குலக்குறியைக் கொண்டுள்ள குழுவினர் அதைத் துணைவன், உறவினன், பாதுகாப்பவன், மூதாதையர் என நம்புவர்.
  4. ஒவ்வொரு குலத்தவரும் அல்லது குழுவினரும் குலக்குறிக்குத் தனிப்பட்ட பெயரோ, தனிக்குறியோ தம்தம் வழக்கில் கொண்டிருப்பர். பெரும்பாலும், குலக்குறியின் பெயரையே அக்குழுவினரும் கொண்டிருப்பர்.
  5. தனி ஒருவருக்கென்று குலக்குறியும் அல்லது குழுவினர் அனைவருக்கும் பொதுவான குலக்குறியும் காணப்படுவதுண்டு. சில சமூகங்களில், முதன்மைக் குலக்குறிகளும் இடம்பெற்றிருக்கும்.
  6. குலக்குறியைச் சில நிகழ்ச்சிகள் தவிர பொதுவாக உண்ணவோ, கொல்லவோ மறுப்பர்.
  7. குலக்குறிக்கு முறைப்படியான வழிபாடுகள் செய்வர்.

குலக்குறியின் தோற்றம் பற்றிய ஆய்வுகள்

மக்லீனன், ஆண்ட்ரூஸ் லாங், பிரேசர், வில்கெம் ஸ்மித், ராட்கிளிஃப் பிரெளன், லெவி ஸ்ட்ராஸ், கோல்டன் வீய்சர் போன்ற பல மானிடவியளாலர்கள், குறிக்குறியின் தோற்றம் பற்றி ஆராய்ந்துள்ளனர். இவர்களிடையே ஒற்றுமையான கருத்துகள் வெளிப்படவில்லை. தனித்தனி வகைகளாகவே நிற்கின்றன. மக்லீனன், “குலக்குறி அமைப்புடைய சமுதாய நிலையே தொடக்ககாலச் சமுதாய முறை என்றும், இந்நிலையைக் கடந்த பின்னரே இன்றுள்ள அனைத்து வகையான சமுதாயங்களும் வளர்ந்துள்ளன” என்று கருதுகிறார். “உலகின் பல்வேறு சூழல்களில் வாழ்ந்த மனிதக் குழுவினர் அவரவர் இயற்கைச் சூழல்களில் காணப்பட்டவற்றுள் சிறப்பானதொன்று வாழ்வுக்கு முதன்மையானது எனக் கருதியதால், அதனை அவர்தம் குலக்குறியாகக் ஏற்றுக்கொண்டனர்” என்பார் ஆண்ட்ரூஸ் லாங்.

இவ்விருவரின் கருத்திலிருந்து மாறுபட்டதாக அமைந்தது பிரேசரின் மெலனேசிய பழங்குடிகளிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வு முடிவு. அது, “முதுகுடிகளின் குழந்தைப் பிறப்பு பற்றிய நம்பிக்கையே குழக்குறியின் தோற்றத்துக்கு வழிகோலியது” என்று தெரிவித்தது. ‘‘ஆஸ்திரேலிய மெலனேசியர் இறக்கும்பொழுது, அவர்களின் ஆவி உடலில் இருந்து பிரிந்தவுடன் பூமிக்குள் சென்றுவிடுகின்றன என்றும், அவை தாவரங்கள், விலங்குகள், இயற்கைப் பொருட்கள் ஆகியவற்றில் உறைகின்றன என்றும், அந்த ஆவிகள் குழந்தைகள் உருவில் மீண்டும் உயிர்த்தெழுகின்றன என்றும், இந்நிலையில் ஓர் ஆணும் பெண்ணும் புணர்ச்சியில் ஈடுபடும்பொழுது அவர்களுக்கு அருகில், தாவரம், விலங்கு, இயற்கைப் பொருட்கள் போன்ற எது உள்ளதோ, அதில் உறைந்துள்ள முன்னோர்களின் ஆவி பெண்ணின் கருப்பையினுள் புகுவதால் கருவுறுதல் நிகழ்கிறது என நினைக்கின்றனர். அதனால், அவர்கள் முன்னோர் ஆவி உறைந்த பொருளையே அவர்தம் குலத்தின் குறியாகக் கொண்டனர்” என அவர் மேலும் விளக்குகிறார். இவர்களின் கருத்தைப்போலவே, பிற குடியினர் கருத்தும் உள்ளதால், கருவுறுதல் கருத்தின் அடிப்படையிலேயே குலக்குறி தோற்றம் பெற்றது என்பார். பிரேசரின் கருத்து கருவுறுதலின் அடிப்படையில் அமைந்ததால், இக்கொள்கை “கருவுறுதல் கொள்கை” என அழைக்கப்படலாயிற்று.

“இறந்த மூதாதையர்களின் புனைப்பெயர்களுக்கும் சுற்றுச்சூழலில் உள்ள முக்கியப் பொருள்களின் பெயர்களுக்கும் இடையே வேறுபாடு தெரியாமல் குறிப்பிடத் தொடங்கியதால், குலக்குறி ஏற்பட்டு அதனைத் தொன்மைக் குடியினர் மதித்து மரியாதை செலுத்தினர். தொல்பழங்காலத்தில் மனிதனுக்குத் தெரிந்ததெல்லாம் சில சொற்களே. ஆகவே, சொற்களின் குறைபாடு காரணமாக ஒரே சொல்லையே திரும்பத்திரும்ப வழங்கவேண்டி இருந்தது” என்று முற்றிலும் மாறுபட்ட கருத்தொன்றை தெரிவிக்கின்றார் ஹெர்பர்ட் ஸ்பென்சர்.

‘‘இயற்கைப்பொருள் வணக்கத்தில் இருந்து குலக்குறி தோன்றியது என்றும், வணங்கப்பட்ட தாவரம், விலங்கு, இயற்கைப்பொருள் ஆகியவை முதலில் தனிமனிதனுக்கும் பின்னர் குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்டது” என்பார் ஆல்பரி. வில்கெம் ஸ்மித் என்பவர் இவர்களிடமிருந்து மாறுபட்டு, “தொன்மைக்குடியினர் தங்கள் உயிரை விலங்கின் உடலிலோ, தாவரங்களிலோ, இயற்கைப்பொருளிலோ வைக்க இயலும் என நம்பினர். அவ்வாறு அவர்களின் உயிரை வேற்றுப்பொருள்களில் வைத்துவிட்டால், அவர்களை எவரும் அழிக்கமுடியாது எனவும், அப்பொருள் அழிக்கப்பட்டால் அவர்களும் அழிந்துபோவர் எனவும் நம்பினர். தம் சுற்றுச்சூழலிலுள்ள சிறப்பானதொரு பொருளிலேயே தம் உயிரை வைக்க இயலும் என நம்பியதால், அதைக் குலக்குறியாகக் கொண்டு அதற்குத் தீங்கிழைக்காமலும், கொல்லாமலும், உண்ணாமலும் காத்தனர்” என்று குறிப்பிடுகிறார்.

வில்கெம், “மனிதர்களின் ஆவி விலங்குகளிடம் சென்று உறையும் என்னும் நம்பிக்கையின் அடிப்படையிலேயே குலக்குறி ஏற்பட்டது” என்று காட்டுவார். ‘‘அயலார் ஒரு கூட்டத்தினரைக் குறிப்பிடும்பொழுது, அம்மக்கள் எவ்வகை உண்வை மிகுதியாக நம்பியிருந்தார்களோ அதன் பெயரால் ஏற்பட்டதே குலக்குறி” என்று குறிப்பிடுகிறார் ஏ.சி.ஹாடன்.

இக்கருத்துகள் எல்லாவற்றிலிருந்தும் மாறாக, எமிலி தர்கைம், “ஒரு கூட்டத்தினரின் சமூக மனநிலையின் (social mind) ஒன்றுபட்ட வெளிப்பாடாக (collective representation) அமையப்பெற்றதே குலக்குறி” என்று குறிப்பிடுகிறார். ”இயற்கைச் சூழலுடன் இரத்த உறவு உடைய கூட்டத்தினர் உள்ளார்ந்த மனநிலையில் கொள்ளும் உறவே குலக்குறி” என்கிறார் சிக்மண்டு பிராய்டு. ‘‘ஓர் எதிர்பாராத வரலாற்று நிகழ்வால் ஏற்பட்ட கருத்து, பல இடங்களில் வாழ்ந்த குடியினரிடையே பரவியதால் குலக்குறி நம்பிக்கை தோன்றியிருக்கலாம்” என்று கருகிறார் வெரியன் எல்வின். “ஒருவன் கழுகைக் கொன்ற சிலகாலம் கழித்து கண்பார்வை இழக்க நேரிடும்பொழுது, அதைக் குணப்படுத்த மந்திரவாதியிடம் சென்றிருப்பான். அவனது கடந்தகால வரலாற்றை ஒன்றுபடுத்திப் பார்க்கும் மந்திரவாதி, கழுகைக் கொன்றதற்கும் கண்பார்வை போனதற்கும் தொடர்புபடுத்தி, இனிமேல் அதைக் கொல்லக் கூடாது எனக் கூறியிருப்பான். இத்தகைய பல்வேறு நிகழ்வுகளால் பல குலக்குறிகள் தோன்றியிருக்கும்” என அவர் தன் கருத்துக்குச் சான்றாக எடுத்துக்காட்டுகிறார்.

பீட்டர் ஜோன்ஸ் என்பவர், “தலைமை ஆவி (great sprit), மக்களுக்குப் பல குலக்குறிகளை வழங்கியிருக்கிறது. இம்மக்கள் தங்களுக்குள் உறவுடையவர்கள்; அதே சமயத்தில் இவர்களுக்குள் திருமண உறவு தடைசெய்யப்பட்டிருக்கிறது” என்றும் “குலக்குறி என்பது ஒரு தனிமனிதனுக்கும் அல்லது ஒரு குழுவுக்கும் ஒரு குலக்குறிக்கும் இடையிலுள்ள மறை பொருள் தொடர்பை (mystical relationship) குறிக்கும்” என்றும் சுட்டிக்காட்டுகிறார்.

குலக்குறி குறித்த ஆய்வுகள் பல்வேறு அறிஞர்களிடையே பல்வேறுவிதமான முடிவுகளை வழங்கியுள்ளது. இந்தவகையில், அமெரிக்காவின் அலெக்சாண்டர் கோல்டன் வீசர் மற்றும் பிரான்ஸின் போஸ், ஜெர்மனியின் ரிச்சர்ட் துன்வால்டு ஆகியோரின் கருத்துகளும் குறிப்பிடத்தக்கவையாகவும், ஒன்றையொன்று மறுத்தும் விரித்தும் எழுதப்பட்டவையாக உள்ளன. இக்கருத்துகளின் ஊடே, ‘‘விலக்கு” (Taboo) என்ற கருத்துருவமும் உருப்பெறத் துவங்கியது.

தொன்மைக்குடியினர், காடுகள் அடர்ந்த சுற்றுச்சூழலுடன் வாழ்ந்ததால், அவர்கள் வாழ்ந்த பகுதியின் ஆற்றல்மிக்க விலங்குகளுடன் தொடர்புகொண்டால், வேட்டையின்போது தம் குலத்தவருக்கு அவ்விலங்கின் ஆற்றல் கிடைக்கும் என நம்பினர். அதோடு, வேட்டையின்பொழுது குறிப்பிட்ட விலங்கைக் கொல்லாமல் விட்டால், அது அவர்களின் வேட்டைக்குத் துணைபுரியும் எனவும் நம்பினர். மீன்களைப்போல் தங்கள் குலத்தவர் பெருக வேண்டும் என எண்ணி, மீனைக் குலக்குறியாகக் கொண்டனர். குறிப்பிட்ட ஒருவகை ஆற்றலுடன் கூடிய விலங்கின் ஆற்றல் தங்கள் குலத்தவருக்குக் கிடைக்க வேண்டும் என்னும் ஆவலில், அதனைத் தங்கள் குலக்குறியாகக் கொண்டனர். இவ்வகை குலக்குறி நம்பிக்கை வேட்டுவச் சமுதாயங்களிலும், அதையடுத்து எளிய முறையில் வேளாண் வாழ்க்கையிலும் தொடங்கியதற்கான சான்றுகள் மிகுதியாகக் கிடைக்கின்றன.

ஒரு குழுவுக்குப் பொதுவான ஒரு குலக்குறியோ அல்லது, ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ஒரு குலக்குறியோ இருக்கும். வடஇந்தியாவில் வாழும் தெல்கி காரியர் (Delhi Kharia) குடியினர், 1. “முரா” என்ற ஆமை, 2. “சோரங்கு’’ என்ற பாறை, 3. ‘‘சமத்” என்ற மான், 4. “சார்கட்” என்ற ஒருவகைப் பறவை, 5. “சார்லிகா” என்ற ஒருவகைப் பலம், 6. “தாப்னோ” என்ற ஒருவகைப் பறவை, 7. “கிரோ” என்ற புலி, 8. “ஹன்ஸ்தா” என்ற விலாங்கு மீன் ஆகிய எட்டுக் குலக்குறிகளைக் கொண்டுள்ளனர். இக்குலங்கள் ஒவ்வொன்றும் புறமணக் குலங்களாகும் (exogamous clan).

தமிழகத்தில் நீலகிரி மலைப்பகுதிகளில் வாழும் குறும்பர் (Kurumbas/ Kurubas) இனத்தினர், தங்களை “கும்புஸ்” (Gumpus) எனப்படும் கால்வழிக் குழுக்களாகப் பாகுபடுத்திக் கொண்டுள்ளனர். இக்கால்வழிக் குழுக்கள் மேலும் பல கிளைக் குழுக்களாகப் பாகுபடுகின்றனர். இக்கிளைக் குழுக்கள் “கோத்திரங்கள்” (Gotras) எனக் குறிக்கப்படுகின்றன. யானை, பாம்பு, தேள், எருமை, ஆமை, கட்டெறும்பு, நாய், செம்மறியாடு, கருங்காலி மரம், சீரகச் செடி, துவரைச் செடி, மல்லிகை, சாமந்தி (chrysanthemum), சாமை, மிளகு, பால், வெண்ணெய், நெருப்பு, சூரியன், சந்திரன், கடல், வெள்ளி, தங்கம், வெண்கலம், பவழம், சங்கு, மண் உப்பு (earth salt), சிக்கிமுக்கிக் கல், மோதிரம், தங்க மோதிரம், மெட்டி, மேளம், கம்பளம், கோடரி, தறி, மூங்கில் குழாய், வண்டி, குடிசை, பேய், மூப்பன் (headman), மஞ்சள் உள்பட 66 உட்குலங்கள் என்ற கோத்திரங்கள் உள்ளதாக அறியமுடிகிறது.

நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் வாழும் கசவர் இனக்குழு மக்கள், ஏழு புறமணக் குலங்களாகப் பிரிந்துள்ளனர். அவை: 1. பாம்பு குலம் (nagara kula), 2. வெள்ளி குலம் (belhi kula), 3. பூமிக் குலம் (pumi kula), 4. சம்பர் குலம் (sambar kula), 5. ஓர் குலம் (or kula), 6. கரட்டகுரு குலம் (karayaguru kula) மற்றும் 7. உப்பளிகுரு குலம் (uppiliguru kula).

நீலகிரி மலைத்தொடர்ப் பகுதிகளில் வாழும் மற்றொரு பழங்குடிகளான தோடர்களின் சமுதாய அமைப்பு இன்னும் விரிவாகவும், பிற குடிகளின் அமைப்பில் இருந்து மாறுபட்டதாகவும் விளங்குகிறது. தோடர் சமுதாயம், தார்த்தரோல் மற்றும் தெய்வளி என்னும் இரு பெரு அமணக் கூட்டங்களாகப் பாகுபடுகின்றனர். அதாவது, தார்த்தரோல் பெருங்கூட்டத்தினர் அவர்களுக்குள்ளும், தெய்வளி பெருங்கூட்டத்தினர் அவர்களுக்குள்ளும் மண உறவுகளை ஏற்படுத்திக்கொள்கின்றனர். அவ்வாறு மட்டுமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்பது கடைப்பிடிக்கப்படுகிறது. அதே சமயத்தில், தார்த்தரோல் பெருங்கூட்டமானது 12 உட்குலங்கள் கொண்டதாகவும், தெய்வளி பெருங்கூட்டமானது 6 உட்குலங்கள் கொண்டதாகவும் பாகுபட்டுள்ளன.

தமிழகத்து கொங்கு வெள்ளாளர்களிடையே, ஒரு சமுதாயத்தில் ஏற்படும் மாற்றம் அல்லது எண்ணிக்கைப் பெருக்கத்துக்கு ஏற்ப புதிய குலக்குறிகள் ஏற்படுவதும், சில சமூகங்களிடையே மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் தெரிவிக்கின்றன. எஸ்.சி. ராய் என்பவர், ஓரவன் (Oraon) என்ற வடஇந்தியாவில் வாழும் பழங்குடி மக்களிடையே மேற்கொண்ட ஆய்வு இதனை தெளிவுபடுத்துகிறது. ஓரவன் சமூகத்தில் பல குடும்பங்கள் ஒன்றிணைந்து ஒரு பொதுவான குலக்குறியைக் கொண்டுள்ளனர். இது முதல் நிலையாகும். இவ்வாறு ஒரு குலக்குறியைக் கொண்ட குழுவினர் எண்ணிக்கை மிகுதியாகும்பொழுது, தனித்தனி குலக்குறியைக் கொண்ட பல குழுக்களாகப் பிரிகின்றனர். இது இரண்டாம் நிலையாகும். இதனை இணைதல் மற்றும் பிளவுறுதல் என்று (Fusion and fission) குறிப்பிடும் ஆய்வாளர், இதற்குச் சான்றாக, புலியை குலக்குறியாகக் கொண்டு பல ஓரவன்கள் ஒன்றிணைந்து வாழ்ந்தனர் என்றும், இந்த புலி குலக்குறிச் சமூகம் எண்ணிக்கையில் மிகுதியானபொழுது, புலி வால், புலி தலை, புலி நகம், புலி பல் ஆகியவறை குலக்குறியாகக் கொண்டு பாகுபட்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறார்.

பழங்குடிச் சமுதாயங்கள் தவிர ஊரகச் சமுதாயங்களிலும் குலக்குறி முறை பரவலாகக் காணமுடிகிறது. ஆந்திரப் பகுதியில் இருந்து தமிழகப் பகுதிக்கு வந்த தெலுங்கு பேசும் மக்களின் குலக்குறிப் பெயர்கள், தாவரங்கள், விலங்குகள், உலோகங்கள், ஆபரணங்கள், இயற்கைப் பொருட்கள் ஆகியவற்றின் பெயரில் உள்ளன.

கொங்கு வேளாளர்கள், தம் குலக்குறியை கூட்டம் என்ற சொல்லால் அடையாளப்படுத்துகின்றனர். கூட்டத்தின் சொற்களாக தாவரங்கள், விலங்குகள், பறவைகள் போன்றவற்றின் பெயர்களாக உள்ளன. இவர்களிடையேயும், பெருங்கூட்டம் உட்கூட்டம் அல்லது கிளைக்கூட்டம் என்ற சமுதாப் பகுப்பு உள்ளது. உதாரணமாக, ஆந்தை ஒரு பெரிய கூட்டத்தின் பெயராகவும்; சாத்தாந்தை, பொருளாந்தை, கொற்றாந்தை, தேவாந்தை போன்று உட்கூட்டம் அல்லது கிளைக்கூட்டம் பகுக்கப்பட்டுள்ளது. இவர்களிடையே, எண்ணெய், ஈஞ்சை, பதறி (இலந்தை), பயிர், துவரை, வெண்டை போன்ற தாவரப் பெயர்க் கூட்டங்களும்; மீன், மேதி (எருமை), குண்டெலி, பாண்டி (எருது), மாதங்கன் (யானை) ஆகிய விலங்குப் பெயர் கொண்ட கூட்டங்களும்; காடை போன்ற பறவைகளின் பெயர் கொண்ட கூட்டங்களும் உள்ளன.

குலக்குறிகள், சமய வாழ்வினதோடு மட்டும் தொடர்புடையதாக இருப்பதில்லை. இவை அச்சமூகத்தின் திருமண உறவு முறைகளையும், மரபு முறைகளையும் நெறிப்படுத்தும் ஒரு சமுதாய அலகாகவும் விளங்குகின்றன. ஒரு குலக்குறியைக் கொண்ட அனைவரும் தாய் அல்லது தந்தை வழியில் வரும் “ஒருவழி மரபினர்” ஆக உள்ளவர் ஆகின்றனர். ஆகவே, அவர்கள் அனைவரும் ரத்த உறவுடையவராக உள்ளவராகின்றனர். இதன்காரணமாக, ஒரு குலத்தவர் தம் குலத்திலிருந்து மணத்துணையை அமைத்துக்கொள்ளாமல், வேற்றுக் குலத்திலிருந்தே மணத்துணையை ஏற்படுத்திக்கொள்வர்.

குலக்குறி வணக்கமும் குலக்குறி மேலாண்மையும்

ஒரு குலக்குறிக் குழுவினர் மற்றொரு குழுவைச் சண்டையில் வென்றுவிட்டால், வென்ற குழுவின் குலக்குறி தோல்வி அடைந்த குழுவின் அல்லது குழுக்களின் வணக்கத்துக்கு உரிய சின்னமாக மாறிவிடுகிறது. யானை ஒரு குழுவின் குலக்குறி, இக்குழு பெரிதாகிப் பல குழுக்களை வென்றும், ஏனைய குழுக்களைத் தன் கீழ் கொண்டுவந்ததால், யானைச் சின்னம் அந்தக் குழுக்களின் வழிபடும் சின்னமாகிறது. இந்த நிலை அரசாக மாறுபொழுது, யானை அந்த அரசின் கொடியாக மாறுகிறது.

குலக்குறி வழிபாடு

குலக்குறியைக் கொண்ட பழங்குடியினருள் பெரும்பான்மையோர் தம் குலக்குறியை மரத்திலோ, வேறு சில வடிவங்களிலோ சித்தரித்த கம்பங்களைத் தம் குடியிருப்புப் பகுதி அல்லது தாம் விரும்பும் பகுதியினுள் நட்டு வழிபடுகின்றனர். இதனை குலக்குறி கம்பம் (totem pole) என்று குறிப்பிடுகின்றனர். இதற்குப் பல சடங்குகள் நடத்திச் சிறப்பாக வழிபடும் முறை அமெரிக்கா, ஆப்பிரிக்கா, இந்தியா, மத்திய தரைக்கடல் தீவுகள் ஆகிய பகுதிகளின் பழங்குடிகளிடையே பரவலாகக் காணப்படுகிறது.

(தொடரும்)

மேற்பார்வை நூல்கள்

  1. Durheim, Emile, The Elementary forms of Religious life, The free Press, Newyork, 1915.
  2. Frazer, James. The Golden Bough, A study in magic and religion, Macmillan, 1976.
  3. ----, Marriage and worship in the early societies: A Treatise On Totemism and Exogamy.
  4. Lang Andrew, Myth, Ritual and Religion, vol-1, Aryan books, New Delhi, 1993.
  5. Levi - Strauss. Clade, Totemism, Beacon press, Baston.
  6. பக்தவச்சல பாரதி, பண்பாட்டு மானிடவியல், மெய்யப்பன் பதிப்பகம், சிதம்பரம், பதி.2014.
  7. ஆ. தனஞ்செயன், குலக்குறியியலும் மீனவர் வழக்காறுகளும், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை. 2012.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com