Enable Javscript for better performance
அத்தியாயம் 77 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 77 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

  By த. பார்த்திபன்  |   Published on : 03rd August 2018 12:00 AM  |   அ+அ அ-   |    |  

   

  காவிட்டி அல்லது காவிஷ்டி போர்கள்  

  ரிக் வேதத்தில் ஆநிரை தொடர்பான எழுந்த போர்கள் காவிட்டி அல்லது காவிஷ்டி என்று அழைக்கப்படுகிறது. இந்த வகையில், ஆநிரை தொடர்பான பூசல் அல்லது போர்கள் குறித்த மிகப் பழைமையான ஆவணம் ரிக் வேதத்தில் இருந்து கிடைக்கிறது. இந்தப் போர்களில் ரிக் வேத இருடிகள் பலரும் ஆயுதம் ஏந்தி காவிட்டிப் போர் புரிந்தவர்களாகக் காட்சி அளிக்கின்றனர். இந்திரன், அக்னி, ருத்திரன், பூசன், விஷ்ணு, மித்திர வருணர்கள் என்று பலரும், ஆநிரைகளை விரும்பி தாங்கள் புரியும் இப்போர்களுக்கு உதவவும், தங்கள் பக்கம் நிற்கவும், தங்களைக் கைவிடாதிருக்கவும் வேண்டப்படுகின்றனர். இவர்கள் ஒருவரோடு மற்றொருவர் ஒப்பிடப்படுவர். ஒருவர் மற்றொருவரன்றி வேறில்லை என்று போற்றப்படுவர். குறிப்பாக, இந்திரனை ஒப்புவர்களாகக் குறிக்கப்படுவர். பவமான சோமனை நோக்கிய பாடலொன்று, சோமனின் குணத்தைக் குறிப்பிடும் வரிகள் இதற்குச் சான்றாகிறது.

  ‘‘பசுக்களைத் தொடர்ந்து கர்ச்சிக்கும் காளையைப்போல் சோமன் முழக்கத்துடன் சோதியிலும் புவியிலும் செல்லுகிறான். போரிலே அவனது குரல் இந்திரனுடைய குரலைப் போல கேட்கிறது. அவன் தன்னைப் புலப்படுத்திக் கொண்டு இந்த சப்தத்தை எழுப்புகிறான்.’’*1

  ‘‘கால்நடைகளை விரும்பு’’ என்ற பொருளைத் தரும் காவிட்டி, விரும்புதலின் விளைவாக இருக்கும் ஆநிரை கவர்தல், ஆநிரைகளைக் கொள்ளையிடும் மரபாகவே பார்க்கப்படுகிறது. ஆநிரை கவர்தல் செயல், உரையாசிரியர்கள் முதல் தற்கால ஆசிரியர்கள் வரை பலவிதமாக விளக்கப்பட்டுள்ளது. அறப் பண்பாட்டு விழுமியங்கள், ஆநிரைப் பூசலை கொள்ளையிடுதலோடு ஒப்புநோக்க மறுக்கிறது.

  தமிழ் இலக்கண மரபில், ஆகொள் பூசல் என்பதே ஆநிரைப் பூசல் என்று குறிக்கப்படுகிறது. ஆகோளானது இலக்கண ஆசிரியர்களால் தன்னுறு தொழில் என்றும் மண்ணுறு தொழில் என்றும் வகைப்படுத்தப்படும். தமிழ் மரபு குறித்த பகுதிகளில் இவை இரண்டு குறித்தும் விவரிக்கப்படும். ரிக் வேத மரபில், இவ்விரு வகைகள் இருந்தனவா அல்லது இருந்து அவை அடையாளப்படுத்த வேறு வேறு சொற்கள் இருந்தனவா என்று அறியமுடியவில்லை.

  போலவே, ஆகோளில் நிரை கவர்தலை வெட்சித் திணையாகவும்; கவரப்பட்ட நிரைகளை மீட்டல் செயல் கரந்தைத் திணையாகவும் இலக்கண ஆசிரியர்கள் குறிப்பர். ரிக் வேதம், கவர்தல் மற்றும் மீட்டல் ஆகிய இரண்டு செயல்களையுமே குறிப்பிடுகிறது. ஆனால், தமிழில் உள்ளதுபோல் திணைப் பகுப்பு என்பது வேத இலக்கியத்திலோ, சம்ஸ்கிருத இலக்கணத்திலோ இல்லை. பூசல் சொல், கவர்தல் மீட்டல் இரண்டுக்கும் பொதுவாக உள்ளதுபோல், காவிட்டி சொல் இரு செயல்களுக்கும் பொதுவாக உள்ளது.

  இந்திரனும், இந்திரனுக்கு இணையானவர்களும் ஆநிரை மீட்டலும்

  இருடி கிருதசமனின் மண்டலம் 2: 12-ஆம் பாடல், இந்திரனின் குணங்களைக் கூறுவதாக உள்ளது. பல்வேறு அரிய செயல்களையும், வெற்றிகளையும் குறிப்பிடும் அவர் பசுவை மீட்ட செயல், ‘‘பலனால் தடுக்கப்பட்டப் பசுக்களை மீட்டவனும்’’*2 என்று குறிப்பிடப்படுகிறார். இது ஆநிரைப்பூசலில் இந்திரனின் இன்றியமையாத பங்கை வெளிச்சப்படுத்துகிறது.

  காவிட்டிப் போர் நிகழ்வுகள்

  தமிழ் மரபில், உரையாசிரியர்கள் காட்டும் பூசலின்பொழுது நிகழும் தொடர் நிகழ்வுகள் போன்று ரிக் மரபில் காணமுடியவில்லை. ஆனால், வேள்வி புரிந்து இந்திரன் முதலானவர்களை துதித்து அழைத்தல், அவன் புகழ் பாடுதல், தாங்கள் விரும்பும் செல்வம் எத்தகையது எனல், எதிரியின் பலம் அறிதல், சோமம் அருந்துதல், இசை முழக்கம், போரிடல், ஆநிரைகளான செல்வத்தை அடைதல் என்ற செயல்களை வரிசைப்படுத்திக்கொள்ள முடிகிறது.

  சோமன் அருந்துதலை தமிழ் இலக்கணத்தில் வரும் ‘‘உண்டாட்டு’’ என்ற திணையோடு ஒப்பிட்டுக் காணலாம். மதுவினை அருந்துதல் பண்டைய நாளில் வீரர்கள் கொண்டிருந்த பழக்கமாகும். நடுகல்லில் கெண்டி, சிமிழ் போன்ற உருவங்கள் வடிக்கப்பட்டிருக்கும். இது தமிழ் நாட்டில் உள்ள நடுகற்களில் மட்டும் உள்ள மரபாகும். கொண்டியும் மதுக்குடம் என்றே கருத்தப்படுகிறது. இன்றும் நடுகலுக்குக் கள் வைத்துப் படைக்கும் வழக்கம் உண்டு. சங்க காலத்தில் அதியமான் நெடுமான் அஞ்சியின் நடுகல்லுக்கு கள் படைக்கப்பட்டதை அவ்வையார் பாடுவார்.

  காவிட்டி வீரர்கள்

  காவிட்டி போர் வீரர்கள் யார், அவர்கள் குணங்கள் யாவை என்பதற்கு தெளிவான வரிகளைக் காணமுடியவில்லை. அதே சமயத்தில், இந்திரன் முதல் பலரும் மனித அல்லது ரிக் வேத மக்களில் ஒருவராகவும் காட்சிப்படுத்தப்படுகின்றனர். இருடி கவி பார்கவன், பவமான சோமனை இவ்வாறு காட்சிப்படுத்துகிறார். அது படையில் இருக்கும் ஒரு வீரனை காட்சிப்படுத்துவதாகவே உள்ளது.

  ‘‘அவன் தீரனைப்போல் தன் கைகளிலே படைகளை ஏந்துகிறான். யக்ஞத்தைப் பற்ற விரும்பி, வழிபடுபவனுக்குப் பசுக்களை நாட தேரிலே ஏறி இந்திரனுடைய ஆற்றலை ஊக்கப்படுத்தும் இந்து, செயல்களை விரும்பும் அறிஞர்களால் பிரேரிதமாகி, பாலாலும், தயிராலும் அபிசேகமாகிறான்’’. பிறகு, ‘‘ரிஷிகளைக் கடப்பவனும், சூரியனுடைய ரசிமியால் சுத்தப்படுபவனும், துதிகளின் தலைவனும், ஒப்பில்லாத கவியுமான சோமன் இந்திரனுடைய செயலை விரும்புகிறான்’’*3.

  இதில் கவியுமான சோமன் என்பதற்கு ‘அவியை அளிப்பவர்’ என லுட்விக் தரும் குறிப்பு கவனிக்கத்தக்கதாகிறது. எனில், இந்த சோமன், இருடி கவி பார்கவனே ஆவார். வீரனின் காட்சிப்படுத்த தோற்றம் கவி பார்கவனுடையதேயாகும்.

  இனி, வேள்வியில் இருந்து காவிட்டிப் போர் நிகழ்வுகளை வரிசைப்படுத்திக் காணலாம்.

  வேள்வியும் வேள்விப்பலியும்

  காவிட்டிப் போர்களில் ஈடுபடுமுன்னரும், வேள்வி நிகழ்த்தப்பட்டது. வேள்வியில் உயிர்ப்பலி நிச்சயம் மேற்கொள்ளப்படும். சங்க இலக்கியம் நடுகல் நட்ட பிறகு, அதற்கு உயிர்ப்பலியும், கள்ளும் படைப்பர். துருப்பலியும் அளிக்கப்பட்டது. பலியிடப்படும் மிருகத்தின் ரத்தம் நான்கு புறமும் இறைப்பதன் நோக்கம், அவ்வுயிரினம் மேலும் பெருக வேண்டும் என்பதாகும். ஆட்டு ரத்தத்தினை ஆகுதியாக இறைத்தால் ஆட்டு வளம் பெரும் என்றும், ‘‘கொழுப்பாவெறிந்து குருதிப்பலி’’ கொடுத்தால் மாட்டு மந்தை பெருகும் என்பதும் நம்பிக்கையாக இருந்தது. தேவிபிரசாத், வேத வேள்ளிப் பலியும்கூட இந்த அடிப்படையில் செய்யப்படுவதாகும் எனக் காட்டுவார்.*4

  துதிகள் 1. அழைத்தல்

  துதிகளின் முதற்பகுதியாக அழைத்தலைக் கொள்ளமுடியும். இருடி கிருத்சமதன் அக்கினிப் பற்றி விவரித்து அழைக்கும்பொழுது,

  ‘‘அக்கினியே! மனிதர்களின் நடுவே மனிதர் தலைவனான நீ சோதிகளோடு தோன்றுகிறாய்’’*5 ‘‘அக்கினியே! நீ இந்திரன்; வீரர்களின் வீரன்; நீ விஷ்ணு; மகத்தான கம்பீர நடையுள்ள நீ, போற்றத்தகுந்தவன்; பிரம்மணஸ்பதியான நீ, பிரம்மன்; செல்வங்களைக் ஏந்துபவன்; ….’’*6. ‘‘அக்கினியே! நீ துவஷ்டா. நீ வழிபடுபவனுக்கு மிகுந்த செல்வத்தைத் தருகிறாய்; ….நீ, எங்களுக்கு உத்தம குதிரைச் செல்வத்தைத் தருகிறாய், புருசுவான நீ, மானிடர்களின் படையாகிறாய்’’; ‘‘அக்கினியே நீ ருத்திரன் நீ பகைவர்களை மகத்தான வானில் இருந்து நீக்குகிறாய்; நீ மருந்துகளின் பலமாகிறாய்; நீ உணவுக்குத் தலைவனாகிறாய்; நீ யக்ஞ சதனத்திலே இனிமையாய் வசிக்கிறாய். நீ சிகப்புக் குதிரைகளோடு காற்றைப்போல் வேகமாகச் செல்கிறாய். நீ பூசாவாகி, நீயாகவே வழிபடுபவர்களைக் காக்கிறாய்’’.*7

  இருடி ரேணு - விசுவாமித்திரன், இந்திரனைப் பற்றி விவரிக்கும்பொழுது,

  ‘‘இந்திரனே! விசுவாமித்திரத்தில் வந்த நாங்கள் தினத்திலே உன்னுடைய பாலனத்துக்காகப் போற்றி உன்னுடைய பாலிக்கும் சுமதிகளை நாங்கள் பெருவோமாக. நாங்கள் உன்னுடைய புதிய சுமதிகளைப் பெறுவோமாக’’ என்றும் ‘‘நாங்கள் இந்தப் போரிலே எங்கள் பாலனத்துக்காக சுத்தனும், செல்வனும், சமரிலே மிக்க வீரமுள்ளவனும், செவி கொடுப்பவனும், உக்கிரனும், களங்களில் விருத்திரர்களைக் கொள்பவனும், பகைவர்களுடைய பொருளைப் பற்றுபவனுமான இந்திரனை அழைக்கிறோம்’’.*8

  பவமான சோமனை தங்களின் பசுக்களை விரும்பும், அதாவது பசு கவர்தலுக்காக செயலுக்கு உதவும் நோக்கில் பல இருடிகள் பாடி அழைப்பதாக உள்ள பாடல்,

  ‘‘மதமளிக்கும் சோமனே!, நீ மேகத்தை உன் ஆயுதங்களால் வணக்கப்படுத்தி இந்திரனுடைய மதத்துக்காகப் பெருகவும், ஒளிமய நிறத்தை நீ தரித்து எங்களுடைய பசுக்களை விரும்பி, பவித்திரத்தில் பிரேரிக்கப்பட்ட நீ, சோமனே! பெருகவும்’’ என்கிறது.*9

  2. புகழ்பாடுதல்

  இருடி கோரனின் புதல்வன் இருடி கண்வன், அக்னியை நோக்கித் துதிக்கும்பொழுது,

  ‘‘அழிக்கும் தேவர்கள் உன்னோடு விருத்திரனைக் கொன்றார்கள். அவர்கள் சோதியையும், புவியையும், வானையும் சீவர்கள் வசிக்கப் பரந்த இடமாகச் செய்தார்கள். புகழுள்ள காளை அழைக்கப்பட்டு, கண்வனின் அருகே நின்றான். பசுக்களுக்கானப் போர்களிலே புரவி கர்ச்சித்து, கனைத்தான்’’.*10

  இங்கு புகழுள்ள காளை என்று வர்ணிக்கப்படுபவர் அக்னி, எருது போன்ற பலமும்; குதிரை போன்ற வேகமும் கொண்ட அக்கி; அக்னி கண்வன் புரிந்த பசுக்களுக்கான போரில் அக்னி உதவியவன் என்பது இதன் விளக்கம்.

  இருடி விசுவமனன், இந்திரனைத் துதிக்கையில் அவனை வீரத்தைப் புகழ்கிறார்.  

  ‘‘குதிரைகள் உள்ளவனே! நீ பசுக்களை மீட்கும்கால் எதிர்ப்பவர்கள் உனது வலது கையையோ, இடது கையைபோ தடுக்க இயலாதவர்கள். பகைவர்கள் உன்னை தடைசெய்யார்கள்’’*11

  இருடி மேத்ய காண்வன் தான் பசு, குதிரை முதலான செல்வத்தை விரும்பிய போருக்கு ஆயத்தமானதை,

  ‘‘குதிரைகள் உள்ளவனே!, நான் உன் பாலனத்தோடு செல்வத்தை விரும்பி பிரமத்துக்கும் போருக்கும் செல்கிறேன். பசுக்களையும், குதிரைகளையும் விரும்பி போராடுபவர்களின் தலைவனாகச் செல்லுங்கால் உன்னையே என்னிடமிருக்க வேண்டும் என வற்புறுத்துகிறேன்’’*12 என்று காட்டுகிறார்.

  (அடுத்த அத்தியாயத்தில், வேண்டுதல் அல்லது விருப்பத்தைக் கூறுதல், எதிரியின் பலம் அறிதல், சோமம் அருந்துதல், போர்இசை முழக்கம், போர், பகிர்தல் ஆகிய பகுதிகள் இடம்பெறும்).

  சான்றெண் விளக்கம்

  1. ரிக். மண்டலம் 9: பாடல் 97, வரி 13. ம.ரா. ஜம்புநாதன் (மொ.பெ), அலைகள் வெளியீடு, சென்னை

  2. ரிக். 2: 12, 3

  3. ரிக். 9: 2 & 4

  4. தேவிபிரசாத் சட்டோப்பாத்தியாயா, உலகாயுதம், (மொ.பெ), நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், சென்னை

  5. ரிக். 2: 1, 1

  6. மேலது., 3

  7. மேலது., 5-6

  8. ரிக்.10: 89-17 & 18

  9. ரிக். 9: 97, 15.

  10. ரிக். 1: 36, 8

  11. ரிக். 8: 24, 5

  12. ரிக். 8: 53 (5), 8

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  kattana sevai