Enable Javscript for better performance
அத்தியாயம் 72 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி- Dinamani

சுடச்சுட

  

  அத்தியாயம் 72 - திணை வாழ்வியலுக்கு முந்தைய தமிழ்ச் சமூகத்தைத் தேடி

  By த. பார்த்திபன்  |   Published on : 25th May 2018 03:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

   

  போலிப் பொருள் வழிபாடு (Fetishism)

  ‘‘நன்மை விளைவிக்கும் ஆற்றலும், மனிதனின் விருப்பத்தை அடையச் செய்கின்ற ஆற்றலும் சில பொருட்களில் உள்ளீடாக உள்ளன’’ என்ற நம்பிக்கையின் அடிப்படையில் எழுந்த வழிபாட்டுமுறையே போலிப் பொருள் வழிபாடு (Fetishism) ஆகும். இதனை ‘‘போலிஉரு வழிபாடு’’ என்றும் மொழிபெயர்க்கப்படுவது உண்டு. இவ்வழிபாடு தொல்மாந்தரினத்தில் முக்கிய இடத்தைப் பெற்றிருந்தது. இவ்வழிபாடு செலுத்திய ஆழமான தாக்கத்தை விதிவிலக்கின்றி மனித இனம் சந்தித்த எல்லா சிறு பெருஞ்சமயங்களிலும் காணமுடிகின்றது.

  முன் அத்தியாயத்தில் குறிப்பிட்டதுபோல், குலக்குறி வழிபாடு மற்றும் விலக்கு ஆகியவற்றுடன் போலிப் பொருள் வழிபாடு நெருங்கிய தொடர்புடையதாக உள்ளது. ஜான் மெக்லேனன் (John Mclennen) அவர்கள், போலிப் பொருள் வழிபாட்டைக் குலக்குறி வழிபாட்டின் ஆரம்ப நிலையாகக் கருதுகிறார். ஆவி வழிபாடு (Animism) கோட்பாட்டை வெளிப்படுத்திய டைலர் (E.B.Tylor) அவர்கள், போலிப் பொருட்களில் அதீத ஆற்றல் இருப்பதாக நம்புவதனையே மந்திரச் சமய நம்பிக்கையின் அடிப்படை எனக் குறிப்பிடுகிறார். இவ்விருவரும், போலிப் பொருள் வழிபாடு என்னும் கோட்பாடு கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள தொடர்பில் இருந்த தனிமுறை உறவில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தத் தொடங்கியதாகக் குறை கூறுகிறார்கள். இவ்வழிபாடு இயற்கையாக நிகழும் நிகழ்வுகளுக்குப் பொய்மையான உருப்படிவங்கள் (models) உருவாவதற்கு வாய்ப்பு அளிக்கிறது என்றும், வரலாற்றின் அடிப்படையிலும், சமயங்களின் பரிணாம வளர்ச்சியிலும், சமுதாயவியலின் அடிப்படையிலும் இவ்வழிபாடே மையமானச் சிக்கலாக உள்ளது என்றும் கருதுகின்றனர். ‘‘போலிப்பொருள் வழிபாடு இயற்கை கடந்த ஆற்றலின் மீது கொண்ட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டுள்ளதால், இவ்வழிபாட்டு முறை ஆவிநம்பிக்கையின் திரிபு என்றோ அதன் தொடர்ச்சி என்றோ கூறலாம்’’ என்பார் பக்தவச்சல பாரதி. (பண்பாட்டு மானிடவியல், ப.515).

  இருப்பற்ற (non - existent) பொருளுக்கு ஓர் இருப்புத் தன்மை (existent) வழங்குவதே போலிப் பொருள் வழிபாடு ஆகும் என்பார் கார்ல் மார்க்ஸ் (Karl Marx). இவ்வழிபாட்டை மனிதன் மேற்கொண்டதற்கான காரணத்தை அவர் இவ்வாறு விளக்குகிறார் - ‘‘மனிதனின் உழைப்பால் தோன்றிய உற்பத்திப் பொருட்கள் அவனை அதிகாரம் செலுத்தியபோது, அவன் அவற்றில் இருந்து அந்நியப்படுத்தப்பட்டான். இதனால் அப்பொருட்களின் மதிப்பு உயரலாயிற்று. பின்னர் அவன் அப்பொருட்களுக்கு அல்லது அதுபோன்ற உருவங்களுக்குப் பணிந்து நடந்தான். அவ்வாறு பணிந்து நடக்கத் தொடங்கியபொழுது, அப்பொருட்கள் அவனை நசுக்கத் தொடங்கின’’ என்று சுட்டுவார். இதனை அவர் ‘‘பொருட்களின் போலிப்பொருள் வழிபாடு’’ என்று குறிப்பிடுவர். இவ்விளக்கத்தினை உபரி உற்பத்திப் பொருட்கள் மற்றும் சந்தை மதிப்பு கூடிய உற்பத்திப் பொருட்களுக்கானது எனக் கொள்ளலாம். போலிப் பொருள் வழிபாட்டில் இயற்கைப் பொருட்களும், தாவரங்கள், விலங்குகளும் இடம்பெறுகின்றன. இருப்பற்ற (non-existent) பொருளுக்கு ஓர் இருப்புத் தன்மை (existent) வழங்குவதே போலிப் பொருள் வழிபாடு ஆகும் என்ற விளக்கம், போலிப் பொருள் வழிபாட்டின் மற்றொரு குணாம்சத்தைப் புலப்படுத்துவதாகும்.

  பல பகுதிகளில் இருந்து கிடைத்துவரும் அண்மைக்கால மானிடவியல், இறையியல் தரவுகளைத் தொகுத்துப் பார்த்தால், போலிப் பொருள் வழிபாடு பழங்குடி மக்களிடமட்டுமல்லாது, பழங்குடியில்லாதாரின் சமயங்களிலும் உலகின் எல்லாப் பகுதியிலும், எல்லா இன மக்களிடையும் விரவி பல்வகைப்பட்டதாக வெளிப்படுவதைக் காட்டுகிறது. அனைத்துச் சமயங்களும் போலிப் பொருள் வழிபாட்டிலிருந்தே தோற்றமடைந்தன என்ற கருத்தை முன்நிறுத்துவார் பிரஞ்சு நாட்டு அறிஞர் சார்லஸ் தெ புரொசே (Charles de Brosses). இக்கருத்தினை மேலும் ஆராய்ந்த அகஸ்டே கொம்தே (Auguste Comte), மனித அறிவு வளர்ச்சியில் காணப்பட்டும் மூன்று நிலைகளைக் கண்டடைகின்றார். அவை முறையே, இறையியல், மறைஞானம், உடன்பாட்டுக் கருத்து என்பனவாகும். முதல் நிலையான இறையியலில்தான் போலிப் பொருள் வழிபாடு காணப்படுகிறது. இவரது கருத்தின்படி, ‘‘தொல்குடிகள் வெளிஉலகில் உள்ள பொருட்களை தங்கள் வாழ்வோடு இணைத்து அவற்றை வழிபடுவதற்கு உரியவையாகக் கருதுவதாகும்’’. அவர் மேலும் குறிப்பிடும்பொழுது, தொல்குடிகள் இயற்கைக்கும் தங்களுக்கும் இடையே நெருங்கிய உண்மையான தொடர்பு கொண்டிருந்ததனால், அவர்கள் அப்பொருட்களை உயிர்ப்பொருளாகக் கருதினர். மேலும் அவர் இந்நம்பிக்கையை விலங்கு உணர்விலிருந்து மனிதன் விடுபட்டதற்கான அவனுடைய மனநிலை வளர்ச்சியாகக் காண்கிறார். மேலும், போலிப் பொருள் வழிபாட்டை சமயங்களின் தொன்மையான நிலை என்றும், தொன்மையான நிலையைத் தொடர்ந்து பல்சமயக் கோட்பாடும் அதனைத் தொடர்ந்து ஒருசமயக் கோட்பாடும் உருவாயின என்றும் அவர் கருதுகிறார்.

  இயல்பிறந்த இயற்கையின் ஆற்றல்கள் (Supernatural Powers) சில பொருட்களில் உறைந்துள்ளன என நம்பிக்கையில் அப்பொருட்களை வழிபாடு செய்தனர் என்பது இவ்வழிபாட்டின் முக்கிய அடையாளமாகும். இவ்வழிப்பட்ட வழிபாடு, பெரும்பான்மையான வளர்ச்சியடைந்த பண்பாடுகளிலும் காணப்படுகிறது. போலிப் பொருள் வழிபாட்டுக்கு உரிய பொருட்கள் உயிருள்ளவையாகவோ, உயிரற்றவையாகவோ, இயற்கையானவையாகவோ, செயற்கையானவையாகவோ உள்ளன. உலகலாவிய நிலையில், வழிபாட்டில் உள்ள போலிப் பொருட்களின் பட்டியலில் ரத்தம், ஆற்றல் மிக்க பொருளாக உள்ளது; இதனுடன் ஊறும் தண்ணீர், ஆறு, குளம் போன்றவையும் இடம்பெற்றுள்ளன. பறவைகளின் இறகுகள், கையால் வரையப்பட்ட சித்திரங்கள், மரப் பொருட்கள், கல், மரம், எலும்பு, தந்தம், உலோகம் போன்றவை கொண்டு உருவாக்கப்பட்ட மனித, விலங்குச் சிற்பங்கள், களிமண் பொம்மைகள், ஆயுதங்கள், இயற்கையாகக் கிடைக்கும் விசித்திர வடிவம் கொண்ட கற்கள், மண்டையோடுகள், மர மூங்கில் கழிகள், இசைக் கருவிகள், விவசாய, வேட்டை மற்றும் பிற வகை தொழிற்கருவிகள், கிளிஞ்சல், சங்கு போன்ற கடல்விளைப் பொருட்கள், விலங்குகளின் கொம்புகள், நகம், தோல், ஆமை ஓடு, உலோகக் கட்டிகள், துண்டுகள், பதக்கங்கள், மற்றும் தற்காலத்திய மதச் சின்னங்கள் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றோடு தொல் பழங்கால, புதிய கற்கால கல்லாயுதங்கள் போன்றவற்றையும் இணைத்துக்கொள்ளலாம்.

  இயல்பிறந்த ஆற்றல் பெற்றவையாகப் கருதப்படும் இவ்வகைப் பொருட்கள், மற்றவர்கள் மேல் நல்ல அல்லது தீய விளைவுகளை ஏற்படுத்தும் ஆற்றல் பெற்றவை என்பது போலிப் பொருள் வழிபாட்டின் அடிப்படையாகும். இந்நம்பிக்கை ஒரு குழு அல்லது ஒரு சமயம் சார்ந்து உள்ளவர்கள் மட்டுமே புரிந்துகொள்ளும் அகவய நம்பிக்கையாகும். அக்குழு அல்லது சமயம் சாராத வெளியார்களுக்கு இச்சிந்தனை புறவயமாகவே இருக்கும். ஒரு குழு அல்லது சமயத்தினரின் ஒரு பொருள் மீதான நம்பிக்கை, மற்றொரு குழு அல்லது சமயத்தினருக்கு நம்பிக்கையற்ற பொருளாவது இந்த அகவய புறவய சிந்தனை காரணமாகவே அமைகிறது என்று சுட்டிக்காட்டப்படுவது உண்டு.

  தமிழர் மரபில் போலிப் பொருள் வழிபாடு சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளது. சங்க இலக்கியம் தொடர்ந்து பக்தி இலக்கியங்கள் வரையிலும் போலிப் பொருள் வழிபாடு சார்ந்து ஏராளமான சான்றுகளைக் காணமுடிகிறது. ஆகம வழிப்பட்ட வழிபாட்டு முறைகள் பலவும், போலிப் பொருள் வழிபாட்டுக் கொள்கைகளில் இருந்து கிளைத்தவையாகவும், இவ்வழிபாட்டின் மீது இறையியல் சார்ந்த தத்துவங்கள், பூசப்பட்டும், நம்பிக்கைகள் ஏற்றப்பட்டும் காணப்படுகின்றன. போலிப் பொருள்களில் புனிதம் என்ற நம்பிக்கையும் ஏற்றப்படுவதையும் காணமுடிகிறது.

  இயற்கைப் பொருளில் ஆறுகளான காவிரி, கங்கை, யமுனை, கிருஷ்ணா, வைகை போன்று எல்லா ஆறுகளும் புனிதமானவை. மலைகளிலும், ஆங்காங்கே சுரக்கும் சுனைகளும், நீர்வீழ்ச்சிகளும் புனிதமானவை. செயற்கையாக உருவாக்கப்பட்ட கோயில் குளங்கள் போன்றவை புனிதமானவை. மரங்களில் ஆலும், அரசும், வேம்பும், கடம்பும் புனிதமானவை. இதனுடன் வில்வம் இணைத்துக்காணத்தக்கது. இம்மரங்களின் தெய்வம் உறைகின்றன நம்பிக்கை எல்லாக் காலகட்டங்களிலும் இருப்பதைக் காணமுடிகிறது. இந்நம்பிக்கையே, உருவ வழிபாடு வளர்ச்சியுற்ற காலங்களில், கல்லாயுதங்கள் முதல் நடுகல்வரையிலும் பெருந்தெய்வங்கள் உட்பட அவரவர் நம்பிக்கை சார்ந்து தெய்வ உருவச்சிலைகள் நிறுவப்பட்டு வழிபடும் பண்பாடாக மாற்றமடைந்துள்ளது. மரத்தில் உறைந்துள்ள தெய்வம் மூத்தோர் ஆவிகளாகவே துவக்கக் காலங்களில் இருந்தன என்பதன் பின்னணியில், ஆவி வழிபாட்டின் நீட்சியாக இவற்றைக் காணலாம். செடிகளில் துளசி, புல் வகையில் அறுகம் புனிதமானது. இவை புனிதமானவை என்பதால் வழிபாட்டுக்கு உரியவையாகின்றன.

  போலிப் பொருளில் குழுவுக்குக் குழு மாறுபடும் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. சங்க இலக்கியம் குறிப்பிடும் காவல் மரம் இவ்வகைப்பட்டதாகக் கருதலாம். காவல் மரங்கள் தெய்வீக ஆற்றல் அல்லது இயற்கையிகந்த ஆற்றல் வாய்ந்தவை, மந்திரத் தன்மை கொண்டவை என்று அக்கால மக்களின் நம்பிக்கைகள் குறிக்கப்படுகின்றன. காவல் மரங்கள் குழுவுக்குக் குழு மாறுபடும். நன்னனுக்கு வாகை, மற்றொரு நன்னனுக்கு மாமரம், கடம்பர்களுக்குக் கடம்ப மரம். பகையரசர்களால் காவல் மரங்கள் வெட்டிச் சாய்க்கப்படும். இதனால், அம்மரத்தை காவல் தெய்வமாகக் கொண்ட அரசனின் ஆற்றல் அழியும் என்பது நம்பிக்கையாகும். இதனை சங்க இலக்கியம் வழி நாம் அறிவதே. திருமுருகாற்றுப்படை, பரிபாடலில் சிறப்பிக்கப்படும் பக்தி இலக்கியக் காட்சி ஒன்று, சூரபன்மனின் காவல் மரமான மாமரத்தை முருகன் வெட்டியதாகும் (திருமுரு: 59-61; பரி: 19: 101, 21: 8,28) சேர மன்னன் இமயவரம்பன், நெடுஞ்சேரலாதன் தீவுகளில் வாழ்ந்த கடம்பர்கள் மீது படைசெலுத்தி அவர்களின் காவல் மரமான கடம்ப மரத்தை வெட்டி வீழ்த்தியக் காட்சி, சூரபன்மன் மீதான முருகனின் வெற்றியோடு குறிக்கப்படும்.

  உயிரற்ற பொருட்கள் வரிசையில் மண், மரம், தந்தம், எலும்பு, கல், உலோகச் சிற்பங்களும், இறையுருவ ஓவியங்களும் முதன்மையான இடத்தை வகிக்கின்றன. இந்த வகையில், வாயில் நிலைகளில் செதுக்கப்படும் இலக்குமியான திருமகளின் உருவம் உட்பட அனைத்து வகை வழிபாடு உருவங்களும் அடங்குகின்றன. முருக வழிபாடு குறித்த செய்திகளில், கன்னம் என்று குறிப்பிடப்படும் படிமம் அல்லது தாயத்தும் இதில் அடங்கும். காப்பு நாண் என்ற கங்கனம் அணிவதும் போலிப் பொருள் வழிபாட்டுத் தத்துவத்தின்பார்பட்டதாகவே கொள்ளமுடியும். தாலி, ஐம்படைத்தாலி என்பவை குழந்தைகளின் கழுத்தில் அணிவிக்கப்பெறும் அணிகலன்களாகும். சங்க இலக்கியங்கள் ‘புலிப்பல் தாலி புந்தலைச் சிறாஅர்’ என்றும் ‘புலிப்பல் கோத்த புலம்புமணித்தாலி’ என்றும் ‘புலிப்பல் தாலி’ என்றும் சங்க இலக்கியங்கள் சித்தரிக்கின்றன.

  குழந்தைகள் புலியின் வீரத்துடன் இளமைப் பருவத்தை அடைவர் என்ற நம்பிக்கையே இவ்வாறு புலிப்பல்லை குழந்தைகளுக்கு அணிவிப்பதற்குக் காரணமாகக் கருதப்படுகிறது. தற்காலத்தில் நரிப்பல், புலிநகம் போன்றவை அதிர்ஷ்டம் தரும் பொருட்களாகக் கருதப்படுகின்றன. அணிகலனாக அணிந்துகொள்ளப்படுகின்றன. தாலி என்பதற்குப் பிற்காலத்தில் ஐம்படைத்தாலி என்ற பொருளும் வழங்கப்படுகிறது. சங்கு, சக்கரம், கதை, கட்கம் என்ற வாள், சாரங்கம் என்ற வில் ஆகிய ஐந்து ஆயுதங்களை ஒரு பதக்கத்தில் இடம்பெறச்செய்து அணிவதே ஐம்படைத்தாலி ஆகும். இப்பொருட்கள் தங்கத்தில் செய்தும் அணிவிக்கப்பெற்ற என்று பொருள் தருமாறு, அகநானூற்றுப் பாடலொன்று ‘‘பொன்னுடைத் தாலி’’ என்று குறிப்பிடுகிறது. அது ஐம்படைத்தாலியை மட்டும் குறிக்குமா அல்லது புலிப்பல் போன்றவற்றையும் குறிக்குமா என்பது மேலாய்வுக்கு உரியது. அதீத ஆற்றல் கொண்ட கழுத்தில் அணியும் பொருள்கள் தாலி என்று குறிக்கப்பட்டன எனவும் கருத இடம் உண்டு.

  கந்து வழிபாடு, போலிப் பொருள் வழிபாட்டுக்கு சிறந்ததொரு உதாரணமாகும். மரத்துண்டு ஒன்றை நட்டு, அதற்கு வழிபாடு செய்வது தொல்தமிழர் மரபில் நிலவி வந்த வழக்கமாகும். அதுவே கந்து வழிபாடு என்று குறிப்பிடப்படுகிறது. மணிமேகலை இதனை ‘‘கந்தில் பாவை’’ என்று குறிப்பிடுகிறது. இதனை கந்தில் செதுக்கப்பட்ட பாவை உருவமாகவும் கொள்ளலாம். இதுவே பிற்காலத்தில் மரச் சிற்பங்களின் வழிபாட்டுக்கு முன்னோடியாகவும் ஆகலாம்.

  பாவை செய்து வழிபடுவது ஒரு மிகத்தொன்மையான பழைய கற்காலப் பண்பாட்டில் இருந்து தொடர்ந்து வருவதாகும். துவக்ககாலப் பாவைகள் தாய் தெய்வங்களாக இருந்தன. பிற்காலத்தின் மூத்தோர் உருவங்களாகவும், சமயம் சார்ந்த தெய்வங்களாகவும் பரிமாண வளர்ச்சியுற்றன.

  ஓவியம் செய்து வழிபடுவதும் பாவையைப் போன்றே மிகத்தொன்மையான பழைய கற்காலப் பண்பாட்டில் இருந்து தொடர்ந்து வருவதாகும். குகை/பாறை ஓவியங்கள் இதற்குச் சான்றாகின்றன. இன்று தெய்வப்படங்களையும், மூத்தோர் படங்களையும் ஓவியமாகத் தீட்டி வழிபடுவது, மரபாக எல்லா சமூகத்தினரும் கொண்டிருக்கும் மரபாகும்.

  குறியீடுகளும் வடிவியல் வரைவு உருவங்களும் (symbols and geometric forms) போலிப் பொருள் வழிபாட்டில் முக்கிய இடத்தைப் பெற்றிருக்கின்றன. ஆனால், போலிப் பொருள் வழிபாட்டு ஆய்வில் இவை இன்றுவரை கவனம் பெறாநிலையிலேயே உள்ளன. குறியீடுகள் பலவகைப்பட்ட வகையான பொருள் கொண்டவையாக உள்ளன. சில குறியீடுகளுக்குப் பெயரும், பொருளும் மறைந்துபோயிருந்தாலும், அவற்றின் புழக்கத்தை மக்கள் கைவிடாதிருக்கின்றனர். பாவை, ஓவியம் போன்று குறியீடுகளும், வடிவியல் வரைவுகளும் மிகத்தொன்மையான பழைய கற்காலப் பண்பாட்டில் இருந்து தொடர்ந்து வருவதாகும். ஸ்வஸ்திக், ஓம் போன்ற குறியீடுகளும், பலவகையான வடிவியல் வரைவு உருவங்களான எந்திர வடிவங்கள், தமிழர் மரபில் பெரும் தாக்கத்தைக் கொண்டிருக்கும் பொருட்களாகும். இவை பெரும்பாலும் சுவற்றிலோ, பலகையிலோ, தரையிலோ, தாளிலோ, தகடுகளிலோ செய்து வழிபடப்படுவதுடன், குறியீடுகள் பதக்கமாக அணிந்துகொள்ளப்படுகின்றன; வடிவியல் வரைவுகளான யந்திரங்கள் ஐங்கோணத் தகடுகள், அறுகோணத் தகடுகள், எண்கோணத் தகடுகள், ஒன்பதுகோணத் தகடுகள் என கீறப்பட்டு, தாயத்துகளாகவும் அணிந்துகொள்ளப்படுகின்றன.

  தானியங்களும், எண்ணைய் வகைகளும், போலிப் பொருள் வழிபாட்டில் குறிப்பாக இந்திய, தமிழக பண்பாட்டு மரபில் முக்கியப் பங்காற்றுகின்றன. இவை வளமை கருதியும், தீயவை அண்டாதிருக்கவும் வழிபாட்டுப் பொருளாகின்றன. வெண்கடுகு என்ற ஐயவி, தீய ஆற்றலில் இருந்து வீட்டையும், மக்களையும் காக்கும் பொருளாகும். நவதானியங்களின் பயன்பாடு வளமை சார்ந்து வழிபாட்டில் முக்கிய இடத்தை வகிப்பதும் போலிப் பொருள் வழிபாடு கோட்பாடு சார்ந்ததே ஆகும். குறிப்பிட்ட எண்ணெய் வகை கொண்டு தீபம் ஏற்றுவது, குறிப்பிட்ட விகிதத்தில் குறிப்பிட எண்ணெய் வகைகளை கலந்து தீபம் ஏற்றுவது அதன் மூலம் தீமையை அகற்றி, நன்மையை வரவழைத்துக்கொள்வது என்ற நம்பிக்கையும் போலிப் பொருள் வழிபாடு சார்ந்ததே.

  போலிப் பொருள் வழிபாட்டுக்குப் புராணங்களும், அவரவர் மத நூல்களும் வெவ்வேறு விளக்கங்கள் தரும். எனினும், அதன் தோற்றம் என்பது தொல்மனிதர்களின் சிந்தனையில் உதித்து, அதில் நம்பிக்கை வைத்து தலைமுறைக்குத் தலைமுறை தொடரப்பட்ட போலிப் பொருள் வழிபாடு என்ற நம்பிக்கையே ஆகும். முழுவதும் நம்பிக்கை சார்ந்து இயங்குவதாலும், பண்பாட்டில் வளர்ச்சிப்போக்குகளும், மாற்றங்களும் நிகழ்ந்துகொண்டே இருப்பது போன்றே, நம்பிக்கைகளும் மாறிகொண்டே இருக்கின்றன. இருந்தும், மனித இனத்தில் போலிப் பொருள் வழிபாட்டின் தாக்கம் வலிமையானது; தொடர்ந்து இருப்பது.

  (தொடரும்)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம்
   பகிரப்பட்டவை
  google_play app_store
  kattana sevai