தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சிக்கு அடித்தளமிடும் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு தொழில் துறையினரிடையே ஏற்பட்டிருக்கிறது.
மதுரை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் விவசாயம் பிரதானமாக இருக்கிறது. விவசாயம் லாபகரமாக இல்லாத சூழலில், வேலைவாய்ப்பு தேடி தென் மாவட்டங்களைச் சேர்ந்தோர் சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களுக்கு இடம் பெயர்ந்துவிட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டங்களில் உள்ள ஜவுளித் தொழில் நிறுவனங்கள், வார்ப்படம் உள்ளிட்ட என்ஜினியரிங் சார்ந்த தொழில் நிறுவனங்களின் தொழிலாளர்கள் தேவையை தென் மாவட்டங்கள் நிறைவு செய்கின்றன.
உணவுப் பொருள் தயாரிப்பு, பதப்படுத்துதல், ஜவுளி, ஆயத்த ஆடை, பட்டாசு- தீப்பெட்டி, மருந்துப் பொருள்கள், ரப்பர், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி போன்ற சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஏராளமாக இருக்கின்றன. சிறு, குறுந்தொழில் துறையில் முன்னேற்றத்தை அடைந்திருந்தபோதிலும், இங்கிருப்பவர்களுக்கு வேலையளிக்கும் வகையிலும், தொழில் வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையிலும் பெரிய தொழிற்சாலைகள் தென் மாவட்டங்களில் இல்லாதது பெரும் குறையாக இருந்து வருகிறது. அதோடு, சிறு,குறு, நடுத்தரத் தொழில்களுக்கான ஒதுக்கீட்டில் இருந்து பல உற்பத்திப் பொருள்களுக்கு மத்திய அரசு விலக்கு அளித்துவிட்டது. இதனால், வரும் காலங்களில் சிறுதொழில் துறை பெரும் சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. இதற்குத் தீர்வு காணும் வகையில், 2011- 2016 ஆட்சிக் காலத்தில் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியானது. தென் மாவட்டங்களின் தொழில் வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, முதலீட்டாளர்களுடனான சந்திப்புகள், சென்னையில் நடந்த முதலீட்டாளர் மாநாடு ஆகியவற்றில் மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மீண்டும் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள அதிமுக அரசு, இந்தத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும் எனத் தொழில் துறையினர் எதிர்பார்க்கின்றனர். குறிப்பாக, சென்னையைச் சுற்றிலும் ஏராளமான கனரகத் தொழிற்சாலைகள் இருப்பதைப் போல தென் மாவட்டங்களிலும் முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும். ராணுவத் தளவாடங்கள், கார் போன்ற பெரு நிறுவனங்கள் அமையும்பட்சத்தில், அதைச் சார்ந்து சிறு நிறுவனங்களும் ஏராளமாக வளர்ச்சி பெறும் என்று தொழில் துறையினர் தெரிவிக்கின்றனர்.
தொழில் வழிச் சாலைத் திட்டம் அறிவிப்பைத் தொடர்ந்து, மதுரை- தூத்துக்குடி இடையே சாலையின் இரு பகுதிகளிலும் உள்ள நிலங்கள் ரியல் எஸ்டேட்காரர்களின் கைக்கு மாறி வருகிறது. தொழில் வழிச் சாலைத் திட்டம் செயல்பாட்டுக்கு வரும்போது இந்தப் பகுதியில் நில மதிப்பு உயரும் என்பதன் அடிப்படையில் நிலங்களை வாங்கியுள்ளனர். ஆகவே, தொழில் வழிச் சாலைத் திட்டத்தை செயல்படுத்தும் நிலையில், தொழிற்சாலைகளுக்கான நிலங்களை அரசே வாங்கிக் கொடுக்கும் வகையில் நில வங்கியை ஏற்படுத்த வேண்டும் என்றும் தொழில் துறையினர் வேண்டுகோள் வைக்கின்றனர்.
"அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைவுபடுத்த வேண்டும்'
மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தும் நிலையில் அதற்கான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு சிறு, குறுந்தொழில்கள் சங்கத் துணைத் தலைவர் வி.எஸ். மணிமாறன் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: மதுரையில் இருந்து அருப்புக்கோட்டை, எட்டயபுரம், தூத்துக்குடி வழியான அகல ரயில் பாதைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும். இதன்மூலம், மதுரை- தூத்துக்குடி இடையே இப்போது உள்ள ரயில் பயணத்தில் 65 கி.மீ. குறையும். அதேபோல, மதுரை விமான நிலைய விரிவாக்கம் மற்றும் சர்வதேச விமானங்கள் வந்து செல்வதற்கான ஏற்பாடு போன்றவை அவசியமாகிறது. மதுரை- தூத்துக்குடி தொழில் வழிச் சாலைத் திட்டத்தை விரைந்து செயல்படுத்தும் அதேநேரத்தில், மேற்குறிப்பிட்ட கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டும். மேலும், தொழில் வழிச் சாலைத் திட்டத்தில் நகரியங்களை உருவாக்குதன் மூலம் ஒருங்கிணைந்த வளர்ச்சியை ஏற்படுத்த முடியும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.