தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

4ஜி செல்லிடப்பேசி சந்திக்கும் சவால்கள்

நாட்டில் தற்போது 50 லட்சம் 4ஜி செல்லிடப்பேசிகள் விற்பனையாகி உள்ளன. அடுத்த மூன்றே ஆண்டுகளில் இது 18 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

News image
Updated On :13 மார்ச் 2016, 7:30 pm

டி.எஸ்.​ஆர். வெங்​கட்​ர​ம​ணா​​

நாட்டில் தற்போது 50 லட்சம் 4ஜி செல்லிடப்பேசிகள் விற்பனையாகி உள்ளன. அடுத்த மூன்றே ஆண்டுகளில் இது 18 கோடியாக அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் இவை அனைத்தும் 4ஜி தொலைத் தொடர்பு சேவைகள் பெற்றுவிடவில்லை.

4ஜி வருகிறது, வருகிறது என்று கூறிக் கொண்டு வந்த நிலையில், 4ஜி தொழில்நுட்ப அடிப்படையிலான தொலைத் தொடர்பு சேவைகள் வந்தேவிட்டது.

ஏர்டெல், ஐடியா, வோடஃபோன் நாடு முழுவதும் 4ஜி சேவைகளைத் தொடங்கிவிட்டன.

அடுத்த ஆண்டு நாட்டின் 4ஜி வாடிக்கையாளர் எண்ணிக்கை 9 கோடியைத் தொடும் என்று கூறப்படுகிறது.

அறிமுக அளவில் 4ஜி சேவைகளின் கட்டணங்கள் மிக அதிகம் என்ற விமர்சனம் எழுந்துவிடாத வகையில் "மிதமாகவே' உள்ளன.

வெறும் 2ஜி தொழில்நுட்பத்துக்குபப் பிறகு, ஜி.பி.ஆர்.எஸ். என்கிற 2.5ஜி தொழில்நுட்பம், இ.டி.ஜி.இ. என்கிற 2.75ஜி தொழில்நுட்பம் ஆகியவற்றைக் கடந்து இப்போது நாடு முழுவதும் அனைத்து தொலைத் தொடர்பு சேவை நிறுவனங்களும் 3ஜி தொழில்நுட்ப அடிப்படையில் சேவை அளித்து வருகின்றன.

அதிக அளவிலான தகவல் பரிமாற்றத்தை மிக வேகமாக அளிக்க உதவும் 4ஜி சேவைக்கான உள்கட்டமைப்பை நாடு முழுவதும் அமைத்து, அனைத்து நிறுவனங்களும் கடும் போட்டிக்கு தங்களை தயார்படுத்திக் கொண்டுவிட்டன.

இந்தியாவில் செல்பேசி அறிமுகமான கால கட்டத்துக்குப் பிறகு, சேவையளிக்கப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பம் என்பது தனி கவனத்தைப் பெறவில்லை.

ஜி.பி.ஆர்.எஸ்., இ.டி.ஜி.இ. தொழில்நுட்ப அடிப்படையில் எஃப்.எம். ரேடியோ, எம்.எம்.எஸ். தகவல் அனுப்புதல், புளூடூத் தகவல் பரிமாற்றம் உள்ளிட்ட வசதிகள் கொண்ட செல்லிடப்பேசிகள் அறிமுகமானபோது, அதற்கான தொழில்நுட்ப கட்டமைப்புகள் ஏற்கெனவே உருவாக்கப்பட்டிருந்தன. அல்லது படிப்படியாக மேம்படுத்தப்பட்டன.

இது 3ஜி தொழில்நுட்பம் அறிமுகமான காலத்துக்கும் பொருந்தும். ஆனால், இப்போது 4ஜி காலம் சற்று வித்தியாசமானது.

அதற்கான கட்டமைப்பு வசதிகள் உருவாகும் முன்பே, 4ஜி ஸ்மார்ட்போன்கள் அமோக விற்பனையைக் காணத் தொடங்கிவிட்டன.

குறுந்தகவல் கூட ஒரு வகையில் இணையதளத்தைப் பயன்படுத்தித்தான் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

அடுத்தகட்டமாக, மின்னஞ்சல், சிறிய அளவிலான இணையதள சேவைகளைப் பெறுதல் என்பது ஃபீச்சர் ரக செல்லிடப்பேசிகளில் சாத்தியமானது.

ஆனால் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமான பிறகு, தகவல் பரிமாற்றம் பெரும் பாய்ச்சல் கொண்டு முன்னேறியது.

ஜி.பி.ஆர்.எஸ்., இ.டி.ஜி.இ. தொழில்நுட்ப காலத்தில், செல்லிடப்பேசி விளையாட்டுகள், இசை போன்ற கேளிக்கைகள்தான் சாத்தியமாக இருந்தன. ஆனால் வலைதளப் பக்கங்களைப் பார்வையிடுவது, இணையதளத்தில் உலவுவது சிரமமானதாக இருந்தது.

3ஜி தொழில்நுட்பத்தின் அறிமுகத்துக்குப் பிறகுதான், செல்லிடப்பேசி மூலம் புதிய சந்தை உலகத்துக்குள் நுழைய முடிந்தது.

ஆன்டிராய்டு தொழில்நுட்பத்துடன் "ஸ்மார்ட்போன்' ரக செல்லிடப்பேசிகள் அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கையில் தவழத் தொடங்கின.

இந்தியாவில் தற்போது சுமார் 40 கோடி இணையதள வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில் 30 கோடிக்கும் மேற்பட்டவர்கள் செல்லிடப்பேசி மூலமாக இணையதளத்தைப் பயன்படுத்துகிறார்கள்.

இந்த நிலையில், மிக வேகமாக 4ஜி செல்லிடப்பேசிகள் புழக்கத்துக்கு வந்துவிட்டன. 4ஜி தொழில்நுட்பத்தில் சேவைகளை தொலைத் தொடர்பு நிறுவனங்கள் வழங்கத் தொடங்கியதோ இல்லையோ, அந்த ரக அதிநவீன செல்போன்களை புதிய தலைமுறை வாடிக்கையாளர்கள் சற்றும் யோசிக்காமல் இரு கைகள் கொண்டும் ஸ்வீகரித்து வருகின்றனர்.

இந்தத் தொழில்நுட்பத்தின் சிறப்பு, தகவல் பரிமாற்றம் அதிவிரைவாக இருக்கும். மிகப் பெரிய விடியோ தகவல் ஃபைல்களையும் அதிவிரைவாக அனுப்பும் வசதியை 4ஜி தொழில்நுட்பம் அளிக்கிறது.

இளைய தலைமுறையினரின் எண்ணங்களை ஆக்கிரமித்திருக்கும் இசையும், திரைப்படங்களும் அதிவிரைவில் டவுன்லோட் செய்யும் திறன், கேமிங் என்கிற நவீன ஆன்லைன் மொபைல் விளையாட்டுகள் என ஒருபுறம். மறுபுறம், விடியோ கான்பரன்ஸிங் போன்ற பயன்பாடுகளை சிக்கலின்றித் தெளிவாகப் பெற இயலும் வசதி.

இதனால், மிக நீண்ட தொலைவிலும், மிகத் துல்லியமாக விடியோ அழைப்புகளை மேற்கொள்ள முடியும். சந்தையில் நாளுக்கு நாள் புதிய மாடல்களில் 4ஜி செல்லிடப்பேசிகள் அறிமுகமாகின்றன என்று கூறும் அளவுக்கு மாடல்கள் வந்து குவிகின்றன.

பல்வேறு நிறுவனங்களின் நாடு தழுவிய 4ஜி கட்டமைப்பு ஏறத்தாழ பூர்த்தியாகிவிட்டது என்றே கூறலாம். பல தொலைத் தொடர்பு வட்டங்களில் 4ஜி சேவை தொடங்கிவிட்டது.

அடுத்த சில மாதங்களில் முழுவீச்சில் அனைத்திந்திய சேவைகள் தொடங்கிவிடும் என்று கூறலாம்.

இளைய தலைமுறையினரின் கேளிக்கைத் தேவைகள் ஒருபுறமிருக்க, இனி நாட்டின் இணையதளப் பயன்பாடு ஒரு புதிய உச்சத்தைத் தொடும் என்பதில் சந்தேகமே இல்லை.

முந்தைய தலைமுறை செல்லிடப்பேசிகளைவிட, நாட்டின் தற்போதைய ஸ்மார்ட்போன்கள் வழியே 6 மடங்கு தகவல் பரிமாற்றம் நடைபெறுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

என்னதான் 4ஜி தொழில்நுட்பப் பரவல் அதிகமானாலும், 3ஜி அடிப்படையிலான சேவைகள் நாட்டில் அடுத்த சில ஆண்டுகளாவது தொடரும் என்று நம்ப இடமிருக்கிறது. தங்களது 3ஜி தொடரும் என வோடஃபோன் அறிவித்துள்ளது.

அறிமுக காலத்தில் குறைவாக உள்ள 4ஜி கட்டணம், தொடர்ந்து எத்தனை காலம் அவ்வாறு இருக்கும் என்பது கேள்விக்குரியது.

பொதுவாகவே, நமது தொலைபேசிக் கட்டணங்கள் மிகக் குறைவாக இருக்கின்றன என்று தொலைத் தொடர்பு நிறுவனங்கள் கூறி வருகின்றன.

நாட்டின் தொலைத் தொடர்பு சந்தையில் உள்ள பொருளாதார நிலைக்குப் பொருந்தும் வகையில் அலைக்கற்றைக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதா என்ற கேள்வியை நிறுவனங்கள் ஏற்கெனவே எழுப்பியிருந்தன.

அலைக்கற்றை உரிமக் கட்டணம், முற்றிலும் புதிதாக 4ஜி தொழில் கட்டமைப்பை ஏற்படுத்தும் செலவு என எல்லாவற்றையும் சேர்த்துப் பார்க்கும்போது, 4ஜி கட்டணங்கள் ஆரம்ப நிலையிலேயே வெகு காலத்துக்குத் தொடர முடியாது என்பது தெளிவு.

இதனிடையே, இந்த ஆண்டின் பிற்பகுதியில் ரிலையன்ஸ் ஜியோ நாடு தழுவிய 4ஜி சேவையைத் தொடங்கவிருப்பது, இந்தத் துறையையே கலக்கப் போகிறது என்பது நிச்சயம்.

அதற்குள் ஐடியா, ஏர்டெல், வோடஃபோன் ஆகியவை தங்களின் சேவைகளை ஒருவாறு உறுதி செய்துவிடும் என்று நம்பலாம்.

இந்த 3 நிறுவனங்கள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ ஆகிய நான்கும் அண்மையில் விற்பனையான அலைக்கற்றையில் 85 சதவீத அளவை வாங்கியுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.