தத்தளிக்கும் திருப்பூர் பாத்திரத் தொழில்
திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக இயங்கி வந்த பாத்திர உற்பத்தி தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது.


திருப்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் பரபரப்பாக இயங்கி வந்த பாத்திர உற்பத்தி தற்போது அழிவின் விளிம்பில் உள்ளது. இதைத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
திருப்பூர் என்றால் சட்டென அனைவரது நினைவுக்கும் வருவது பின்னலாடைத் தொழில். பாத்திர உற்பத்தியிலும் பெயர் பெற்ற நகரமாகவும் திருப்பூர் விளங்கி வருகிறது. இங்கு சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் மிகவும் பரபரப்பாக இயங்கி வந்த பாத்திர உற்பத்திப் பட்டறைகள் பல, தற்போது மூடப்பட்டும், வெறிச்சோடியும் காணப்படுகின்றன.
பாத்திர உற்பத்தியில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் பலரை பின்னலாடைத் தொழில் தன்னகத்தே இழுத்துக் கொண்டுவிட்டது. திருப்பூர் மாவட்டத்தில் அனுப்பர்பாளையம், அங்கேரிபாளையம், செட்டிபாளையம், ஆத்துப்பாளையம், தண்ணீர்பந்தல், திருமுருகன்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 350-க்கும் மேற்பட்ட பட்டறைகளில் எவர்சில்வர், செம்பு, பித்தளை ஆகிய உலோகங்களைக் கொண்டு நாள் ஒன்றுக்கு பல லட்ச ரூபாய் மதிப்பிலான பாத்திர உற்பத்தி நடைபெற்று வந்தது. இவை அனைத்துமே கிடைக்கும் ஆர்டர்களை வைத்துதான் நடைபெறுகிறது.
இந்தத் தொழிலை நம்பி ஜாப் ஆர்டர் செய்வோர் உள்பட சுமார் ஆறாயிரம் தொழிலாளர்கள் உள்ளனர். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருப்பூரில் ஆயிரக்கணக்கில் இருந்த பாத்திர உற்பத்தி பட்டறைகள் தற்போது குறைந்துள்ளன. வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்த திருப்பூர் பாத்திரங்கள் தற்போது, தமிழகத்தை தாண்டுவதே பெரும் சிரமமாக உள்ளது.
அடுத்த தலைமுறை விரும்பவில்லை.
முன்பெல்லாம், திருப்பூர் பாத்திரங்கள் என்றால் மக்களிடத்தில் தனி மவுசு எப்போதும் உண்டு.
ஆரம்பம் முதல் தற்போது வரை கை வேலைப்பாடு மூலமாகவே பாத்திரங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாத்திர உற்பத்திக்கென பிரத்யேக இயந்திரங்கள் வந்துவிட்டாலும், திருப்பூரில் 80 சதவீத பாத்திரங்கள் கை வேலைப்பாடு மூலமாக உற்பத்தி செய்யப்படுகின்றன.
இதனால், எங்களது பாத்திரங்களுக்கு ஆயுள் அதிகம் என்கிறார் மூன்று தலைமுறைகளாக திருப்பூரில் பாத்திர உற்பத்தியில் ஈடுபட்டு வரும் பி.சண்முகம்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
மூன்று தலைமுறைகளாகப் பாத்திரத் தயாரிப்புத் தொழில் செய்து வருகிறோம். ஆனால், எனது மகன் இந்தத் தொழிலை விரும்பவில்லை. முன்பிருந்த வரவேற்பு தற்போது இல்லை என்பதுதான் அதற்கு முக்கியக் காரணம்.
கடைசியாக 2005-ஆம் ஆண்டு ஆயுத பூஜை, தீபாவளி பண்டிகையின்போது, விடுப்பு கூட எடுக்க முடியாமல் நாங்கள் வேலை செய்தோம். கால மாற்றத்தில் எவர்சில்வர் பாத்திரங்கள் உள்ளிட்டவற்றின் மீது மக்களுக்கான ஆர்வம் குறைவு, பிளாஸ்டிக், பீங்கான் பொருள்களின் வரவு, பெருநிறுவனங்களின் வரவு போன்றவை இந்தத் தொழிலை மிகவும் பாதித்துள்ளன.
இதனால், பலர் பின்னலாடைத் தொழிலுக்குச் சென்றுவிட்டனர். 5 ஆண்டுகளுக்கு முன் தீபாவளிக்கு ரூ.25 லட்சம் வரை வருமானம் கிடைத்தது. நடப்பு ஆண்டு தீபாவளிக்கு ரூ. 3 லட்சம் வருமானத்தை எதிர்பார்த்துள்ளேன் என்றார்.
கோரிக்கைகள்
பாத்திர உற்பத்தி பொருள்களுக்கான விலையைக் குறைக்க வேண்டும். மானிய மின்சாரம், உற்பத்திப் பொருளுக்கு நிரந்தர விலை நிர்ணயிக்க வேண்டும். பாத்திரங்களை கூட்டுறவுச் சங்கம் மூலமாக அரசே கொள்முதல் செய்ய வேண்டும்.
குடிசைத் தொழில் செய்வோருக்கு வங்கிக் கடனுதவி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கைவினைத் தொழில் வாரியத்தில் பாத்திரத் தொழிலை சேர்த்து சலுகைகள் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே திருப்பூர் பாத்திர உற்பத்தியாளர்களின் கோரிக்கையாக உள்ளது.
80% குறைந்துள்ள தீபாவளி விற்பனை
இதுகுறித்து திருப்பூர் பாத்திர உற்பத்தியாளர்கள் சங்க முன்னாள் செயலாளர் வேலுசாமி கூறியதாவது:
ஆர்டர்களை மட்டும் செய்து கொடுப்பதால், பெரிய விலை கொடுத்து இயந்திரங்களை வாங்கவோ, பெரிய முதலீடு செய்யவோ யாரும் தயாராக இல்லை. மேலும், தொழில் சரிவு, உடல் உழைப்பு, பாத்திர உற்பத்தியில் கையாளப்படும் எரிவாயு வெளிப்படுத்தும் நச்சுப் புகை, பாத்திரத்தை பாலிஷ் செய்ய பயன்படுத்தப்படும் திராவகங்கள் போன்றவை உடல்நலத்தைப் பாதிக்கக் கூடியவை.
பிற நகரங்களில் இயந்திரங்களைக் கொண்டு வேலை நடைபெறுவதால் அங்குள்ள பாத்திரங்கள் விலை குறைவாக உள்ளன. திருப்பூரில் கை வேலைப்பாடு பாத்திரங்கள் என்பதால் விலை அதிகம். இதனால், ஆர்டர்கள் வருகை குறைந்துவிட்டது. மேலும், 10 ஆண்டுகளுக்கு முன் இருந்த தீபாவளி விற்பனையில் நடப்பு ஆண்டில் 80% குறைந்துள்ளது. இதனால், தொழிலாளர்களுக்கு போனஸ் கொடுப்பது சிரமமான விஷயமாக உள்ளது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...