பிஎஸ்-III வாகனங்கள் சலுகைகளும் சவால்களும்...

தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு முந்தைய நாள் கடை வீதிகளில் எப்படி ஒரு கூட்ட நெரிசல் இருக்குமோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான "சுகானுபவத்தை' கடந்த மார்ச் 31-ஆம் தேதியன்று உணர முடிந்தது!
பிஎஸ்-III வாகனங்கள் சலுகைகளும் சவால்களும்...
Updated on
3 min read

தீபாவளி போன்ற பண்டிகைகளுக்கு முந்தைய நாள் கடை வீதிகளில் எப்படி ஒரு கூட்ட நெரிசல் இருக்குமோ, கிட்டத்தட்ட அதே மாதிரியான "சுகானுபவத்தை' கடந்த மார்ச் 31-ஆம் தேதியன்று உணர முடிந்தது!
ஆனால், இம்முறை பஜாரில் அல்ல... பஜாஜ், ஹோண்டா உள்ளிட்ட மோட்டார் வாகன விற்பனையங்களில். வயது வித்தியாசமின்றி பலரும் இரு சக்கர வாகன விற்பனையகங்களுக்குப் படையெடுத்திருந்தனர். "அப்பா அந்த வண்டி இல்லையாம்... இதுதான் இருக்குனு சொல்றாங்க.. அதுவும் ஒண்ணே ஒண்ணுதான் ஸ்டாக் இருக்காம்...' என்று பதின் பருவ இளைஞன் ஒருவன் செல்லிடப்பேசியில் ஆதங்கப்பட்டான். கவுன்சிலிங்கில் விரும்பிய படிப்பு கிடைக்காமல் வாழ்க்கையே பறி போனது போன்றதொரு ஏக்கத்தை அவனது கண்களிலும் குரலிலும் அப்போது காண முடிந்தது.
மற்றொரு பக்கம் கையில் பண முடிப்புகளுடன் காத்திருத்த நடுத்தர வயதினர். ஏதாவது ஒரு மாடல் வண்டியை வாங்கியே தீர்வது என்ற லட்சிய வேட்கை அவர்களுக்கு. இதற்கு நடுவே ஓய்வறியாமல் அலறிக் கொண்டிருந்தன விற்பனையகத் தொலைபேசிகள். கூடவே, அங்கு பணியாற்றும் ஊழியர்களும்.
வெள்ளிக்கிழமை (மார்ச் 31) பிற்பகலில் பெரும்பாலான ஷோ ரூம்களில் இருப்பு இல்லை என்ற அறிவிப்புகள் ஒட்டப்பட்டன. சிலவற்றுக்கு அவசர விடுமுறை விடப்பட்டன. நாடு முழுவதும் உள்ள அனைத்து விற்பனையகங்களிலும் இந்தக் காட்சிகளை காண முடிந்ததாக நமக்குத் தகவல் கிடைத்திருக்கிறது.
இத்தனை பரபரப்புகளுக்கும், களேபரங்களுக்கும் காரணம் உச்ச நீதிமன்றம் வெளியிட்ட ஒற்றைத் தீர்ப்பு. அதுவரை நாட்டில் சாதாரண குடிமக்கள் கேள்வியே படாத, அது குறித்துக் கவலையும்படாத பிஎஸ்-III மற்றும் பிஎஸ்-IV என்ற வார்த்தைகளை, கடந்த நான்கைந்து நாள்களாக பட்டி தொட்டியெல்லாம் மக்கள் அசைபோட்டு வருகின்றனர்.
மாசுக் கட்டுப்பாட்டுத் தர நிர்ணயத்துக்கான புதிய கொள்கைதான் பாரத் ஸ்டேஜ்-IV  (பிஎஸ்-IV). இந்தப் புதிய தரக் கட்டுப்பாட்டு விதிமுறைகள் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளன. அதற்கு முந்தைய தர நிர்ணயக் கொள்கையின் (பிஎஸ்-III) அடிப்படையில் தயாரிக்கப்பட்ட வாகனங்களை மேற்கொண்டு விற்கக் கூடாது என்று வெளியான உச்ச நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவுதான், கையிருப்பில் உள்ள வண்டிகளை சலுகை விலையில் விற்க வேண்டிய நிர்பந்தத்துக்கு ஆட்டோ மொபைல் உற்பத்தியாளர்களைத் தள்ளியது.
கிட்டத்தட்ட 8.25 லட்சம் பிஎஸ்-III மாடல் வண்டிகள் கையிருப்பில் உள்ளதாகவும், அவற்றை விற்பனை செய்ய அவகாசம் வழங்குமாறும் உச்ச நீதிமன்றத்தில் ஆட்டோ மொபைல் உற்பத்தி நிறுவனங்கள் கோரிக்கை விடுத்தன. இல்லையென்றால் தங்களுக்கு ரூ.12,000 கோடி இழப்பு ஏற்படும் என்றும் மன்றாடின. ஆனால், அவற்றுக்கு எல்லாம் செவிமடுக்காத உச்ச நீதிமன்றம், உங்கள் லாபத்தை விட மக்கள் உடல் நலன்தான் முக்கியம் என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
அதன் விளைவு, ரூ. 22,000 வரை இரு சக்கர வாகனங்களின் விலை குறைக்கப்பட்டது. துணிக் கடை சலுகை அறிவிப்பு போல பல்வேறு சலுகைகளை ஆட்டோ மொபைல் நிறுவனங்கள் வெளியிட்டன. அதன் காரணமாக கபாலிக்கு டிக்கெட் வாங்குவதைப் போல இரு சக்கர வாகனங்களை வாங்க மக்கள் குவியத் தொடங்கினர்.
தீர்ப்பு வெளியான இரு நாள்களுக்குள் நாடு முழுவதும் 7 லட்சம் வாகனங்களுக்கு மேல் விற்றுத் தீர்ந்துவிட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழகத்தைப் பொருத்தவரை, ஓரிரு நாட்களில் ஏறத்தாழ 40,000 இரு சக்கர வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. இது மாதாந்திர சராசரி விற்பனை அளவில் 60 சதவீதம் என்பது வியப்புக்குரிய தகவல். சரி, சலுகை விலையில் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியிருக்கிறது... அது வாடிக்கையாளர்களுக்கும், டீலர்களுக்கும் பரஸ்பரம் லாபம் தரக் கூடியதுதானே என எண்ணலாம். ஆனால், இந்த அவசர விற்பனைக்குப் பின்னால் சில சிக்கல்களும், சவால்களும் நிறைந்துள்ளன என்பதை மறுக்க இயலாது.
வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் வழக்கத்தைக் காட்டிலும் நான்கு மடங்கு அதிகமான அளவு வாகனப் பதிவு அந்த இரு நாள்களில் நடைபெற்றுள்ளது. அதிலும், குறிப்பாக மார்ச் 31-ஆம் தேதி மட்டும் 25 ஆயிரம் வாகனங்களைப் பதிவு செய்வதற்காக விண்ணப்பங்கள் குவிந்ததாகத் தெரிகிறது.
பதிவுக் கட்டணம் மற்றும் வரியை பெரும்பாலான டீலர்கள் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்துக்கு இணையவழியில் செலுத்தியிருந்தனர். அதிக அளவிலான விண்ணப்பங்கள் வந்ததால், அவை அனைத்துக்கும் ஆர்டிஓ தரப்பிலிருந்து ஒப்புகை வழங்கப்படவில்லை. இதன் காரணமாக, பல வாகனங்களின் பதிவு நிலவரம் என்ன என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.
இது ஒருபுறமிருக்க, சலுகை விலையில் வாங்கப்பட்ட வாகனங்களுக்கான காப்பீட்டு நடைமுறையிலும் சில சந்தேகங்கள் எழுந்துள்ளன.
வழக்கமான விலையில் விற்கப்பட்ட பிஎஸ்-III வாகனங்களுக்கு ஏற்கெனவே நடைமுறையில் உள்ள காப்பீட்டுத் திட்டங்களை எந்தவிதமான சிக்கல்களும் இன்றி தொடர முடியும்.
அதேநேரத்தில் சலுகை விலையில் விற்கப்பட்ட வாகனங்களுக்கு, அதன் விலையில் இருந்து எத்தனை சதவீதம் காப்பீடாக வழங்கப்படும், அவற்றைப் புதுப்பிக்கும்போது காப்பீட்டு விகிதம் எவ்வளவு குறையும் என்ற குழப்பங்கள் நீடித்து வருகின்றன. அவற்றுக்கெல்லாம் இதுவரை பதில் இல்லை.
சரி, அடுத்தது இலவச சர்வீஸ் சலுகைக்கு வரலாம். பொதுவாகவே, புதிதாக ஒரு வாகனம் வாங்கினால் குறிப்பிட்ட காலம் வரை இலவச பராமரிப்பு மற்றும் பழுது நீக்கும் சேவைகள் வழங்கப்படும். ஆனால், குறைந்த விலையில் வாங்கப்பட்ட பிஎஸ்-III வாகனங்களுக்கு பெரும்பாலும் இந்த சலுகைகள் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது.
விலையில் தள்ளுபடி வழங்கியதால், அதனை ஈடுகட்ட இலவச சர்வீஸ் சலுகைகளைக் குறைக்க வாகன விற்பனையாளர்கள் திட்டமிட்டதே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதுவும் வாடிக்கையாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தக் கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது.
இதைத்தவிர, புதிதாக விற்பனை செய்யப்பட்ட பிஎஸ்-III ரக வாகன என்ஜின்களில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால், அவற்றை மாற்றித் தருவதிலும் சில குழப்பங்கள் உள்ளன. உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி ஏப்ரல் 1-க்குப் பிறகு பிஎஸ்-III எஞ்சின்களை உற்பத்தி செய்ய முடியாது. எனவே, அந்த ரக என்ஜின்களை மாற்றித் தருவது குறித்தோ அல்லது அதற்கான உதிரி பாகங்களை மாற்றித் தருவது குறித்தோ டீலர்களிடம் தெளிவான விளக்கம் இல்லை.
அடுத்ததாக, மறு விற்பனை மதிப்பை எடுத்துக் கொண்டால், வரும் நாள்களில் பிஎஸ்-III மாடல் வாகனங்களின் மதிப்பு மிகக் குறைவாகவே இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. எதிர்காலத்தில் அவற்றை எக்ஸ்சேஞ்ச் செய்தாலும்கூட அந்த வாகனங்கள் மிகக் குறைந்த விலைக்கே விற்பனையாக வாய்ப்புள்ளது. மொத்தத்தில் பிஎஸ்-III வாகனங்களுக்கு சந்தை மதிப்பு இருக்காது என்பது வாடிக்கையாளர்கள் சந்திக்கப் போகும் மற்றொரு சவால்.
இவற்றையெல்லாம் தாண்டி, பழைய டீசல் வாகனங்களுக்கு தில்லி அரசு அதிரடியாகத் தடை விதித்ததைப் போல, பிஎஸ்-III வாகனங்களுக்கும் எதிர்காலத்தில் காலாவதி நேரம் நிர்ணயிக்கப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.
ஒருவேளை அப்படி நிர்ணயிக்கப்பட்டால், இன்றிலிருந்து குறைந்தபட்சம் 5 ஆண்டுகளாவது அவற்றுக்கு அவகாசம் வழங்கப்படலாம். ஆனாலும் கூட, இந்தியாவைப் பொருத்தவரை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாகனங்களை மாற்றுபவர்களின் விகிதம் குறைவுதான். எனவே, இதுவும் வாடிக்கையாளர்கள் கண்முன்னே இருக்கும் மற்றொரு சிக்கல் என்று கூறலாம்.
எது எப்படியோ, எத்தகைய கட்டுப்பாடுகளும், தடைகளும் வந்தாலும் சரி... அவற்றைத் தவிர்ப்பதும் கடப்பதும் நமது இயல்பாக உள்ளது.
மாசு தொடர்பான புதிய வாகனத் தரக் கட்டுப்பாடு அமலாக்கம் ஏற்படுத்தியிருக்கும் சிக்கல்களையும் சவால்களையும் வாடிக்கையாளர்கள் எப்படி சமாளிப்பார்கள் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com