

பார்தி ஏர்டெல்-கார்பன் நிறுவனம் இணைந்து இருவகையான ஸ்மார்ட்போன்களை ரூ.1,799 மற்றும் ரூ.1,849 சலுகை விலையில் அறிமுகம் செய்துள்ளன.
இதுகுறித்து ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
ஆன்ட்ராய்டு இயங்குதளத்தில் செயல்படும் 4ஜி ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 'ஏ1 இந்தியன்' மாடல் விலை ரூ.1,799ஆகவும், 'ஏ41 பவர்' மாடல் விலை ரூ.1,849ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வாடிக்கையாளர்கள் 'ஏ1 இந்தியன்' 4ஜி மாடலைப் பெற ரூ.3,299ம், 'ஏ41 பவர்' மாடலைப் பெற ரூ.3,349ம் முன்பணமாக செலுத்த வேண்டும்.
ஏர்டெல் நிறுவனத்தின் ரூ.169 மாதாந்திர கட்டண திட்டத்தில் இணைந்து தொடர்ச்சியாக 36 மாதங்களுக்கு ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு முதல் 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.500ம், அதற்கடுத்த 18 மாதங்களுக்குப் பிறகு ரூ.1,000ம் திரும்ப வழங்கப்படும். இதையடுத்து, வாடிக்கையாளருக்கு கிடைக்கும் மொத்த பணப் பலன் ரூ.1,500ஆக இருக்கும். அந்த '169' திட்டத்தை விரும்பாத வாடிக்கையாளர்கள் தங்களது இஷ்டம்போல் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். இருப்பினும், முதல் 18 மாதங்களில் ரூ.3,000 மதிப்புக்கும், அடுத்த 18 மாதங்களுக்கு ரூ.3,000 மதிப்புக்கும் அவர்கள் கண்டிப்பாக ரீசார்ஜ் செய்திருக்க வேண்டும். அப்போதுதான் ரூ.1,500 திரும்ப வழங்கப்படும்.
ஏர்டெல்-கார்பன் கூட்டுத்திட்டத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த 4ஜி ஸ்மார்ட்போன்கள் அமேஸான் வலைதளத்திலும் கிடைக்கும் என்று ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொலைத்தொடர்பு சந்தையில் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை எதிர்கொள்ளும் வகையில் பல நிறுவனங்கள், ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சலுகை திட்டங்களை அறிவித்து வருகின்றன.
அந்த வகையில், பார்தி ஏர்டெல் நிறுவனம் கார்பன் மற்றும் செல்கான் நிறுவனங்களுடன் இணைந்து குறைந்த விலை 4ஜி செல்லிடப்பேசிகளை சந்தையில் அறிமுகம் செய்து வருகிறது.
இதேபோன்று, வோடஃபோன் நிறுவனமும் மைக்ரோமேக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து ரூ.999 சலுகை விலையில் 4 ஜி ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.