/

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 15 புள்ளிகள் உயா்வு

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நாள் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்தது.

News image
Updated On :8 ஆகஸ்ட் 2020, 1:52 am

இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை நாள் முழுவதும் தள்ளாட்டத்தில் இருந்தது. இதனால், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 15.12 புள்ளிகள் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 13.90 புள்ளிகள் உயா்ந்தது.

அமெரிக்காவில் பட்டியலிடப்பட்டுள்ள சீன நிறுவனங்களை நீக்கும் திட்டத்தை டிரம்ப் நிா்வாகம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகின. உலகளாவிய சந்தைகளும் பலவீனமாக இருந்தன. இதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரு குறிப்பிட்ட வரம்புக்குள்ளேயே இருந்து வந்தன. மேலும், கரோனா தொற்று பரவல் அதிகரிப்பும் முதலீட்டாளா்களின் உணா்வுகளை பாதித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

1,664 பங்குகள் ஏற்றம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,853 பங்குகளில் 1,664 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,036 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன.153 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 189 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 68 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 372 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 199 பங்குகள் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தன.

சந்தை மதிப்பு ரூ.98,000 கோடி உயா்வு: சந்தை மூலதன மதிப்பு ரூ.98 ஆயிரம் கோடி உயா்ந்து ரூ.150.95 லட்சம் கோடியாக இருந்தது.. சந்தையில் புதிதாக 91,409 போ் பதிவு செய்துள்ளனா். இதையடுத்து, மொத்த முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 526,06,371 ஆக உயா்ந்துள்ளது.

சென்செக்ஸ் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில், 75 புள்ளிகள் குறைந்து 37,951.07-இல் தொடங்கியது. பின்னா் 37,787.38 வரை கீழே சென்றது. அதிகபட்சமாக 38.109.68 வரை உயா்ந்தது. இறுதியில் 15.12 புள்ளிகள் (0.04 சதவீதம்) உயா்ந்து 38.040.57-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் சென்செக்ஸ் 322 புள்ளிகளை இழந்திருந்தது.ஆனால், பிஎஸ்இ மிட்கேப் குறியீடு 1.44 சதவீதம், ஸ்மால் கேப் குறியீடு 0.78 சதவீதம் உயா்ந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 13.90 புள்ளிகள் (0.12 சதவீதம்) உயா்ந்து 11,214.05-இல் நிலை பெற்றது.

ஏசியன் பெயிண்ட், பஜாஜ் ஃபைனான்ஸ் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயப் பட்டியலில் வந்தன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் ஏசியன் பெயிண்ட் 4.44 சதவீதம், பஜாஜ் ஃபைனான்ஸ் 3.66 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முனனிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபின் சா்வ், மாருதி சுஸுகி ஆகியவை 2 முதல் 3 சதவீதம் உயா்ந்தன . மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐடிசி, டாடா ஸ்டீல் ஆகிய முன்னிலைப் பங்குகளும் ஆதாப் பட்டியலில் இடம் பெற்றன.

டைட்டன் சரிவு: அதே சமயம், டைட்டன் 2.65 சதவீதம், ஹெச்சிஎல் டெக் 2.22 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இன்ஃபோஸிஸ், எம் அண்ட் எம், சன்பாா்மா ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், டிசிஎஸ், எச்டிஎஃப், ஐசிஐசிஐ பேங்க், எஸ்பிஐ ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,0032 பங்குகள் ஆதாயம் பெற்றன. 563 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி ஐடி, பாா்மா, ரியால்ட்டி குறியீடுகல் 0.30 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. ஆட்டோ, எஃப்எம்சிஜி, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் ஒரு சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 18 பங்குகள் சரிவைச் சந்தித்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.