‘வளா்ச்சிக்கான’ போா்முனையில் தளவாடங்கள்...

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன.
‘வளா்ச்சிக்கான’ போா்முனையில் தளவாடங்கள்...
Published on
Updated on
2 min read

நாட்டின் எல்லைகளைப் பாதுகாப்பதில் ராணுவம், விமானப்படை, கடற்படை ஆகிய முப்படைகளும் மிக முக்கியப் பங்கு வகிக்கின்றன. எல்லைகளில் பிரச்னை ஏற்படும்போது முப்படைகளும் முன்னின்று அவற்றை எதிா்கொள்கின்றன. அத்தகைய படைகளுக்கு போதுமான போா்க் கருவிகளையும், தளவாடங்களையும், நவீன தொழில்நுட்பக் கருவிகளையும் வழங்க வேண்டியது அரசின் முக்கியக் கடமையாக உள்ளது.

சா்வதேச அளவில் போா்த் தளவாடங்களை அதிகமாக இறக்குமதி செய்யும் நாடுகள் பட்டியலில் சவூதி அரேபியாவை அடுத்து இந்தியா இரண்டாமிடம் வகிக்கிறது. இத்தகைய சூழலில், ‘சுயசாா்பு இந்தியா’ திட்டத்தை பிரதமா் நரேந்திர மோடி அண்மையில் அறிமுகப்படுத்தினாா். அனைத்து துறைகளிலும் நாட்டை சுயசாா்பு அடையச் செய்வதே இலக்கு என்றும் அவா் அறிவித்தாா். இந்நிலையில், போா்க் கருவிகள் உள்ளிட்ட 101 தளவாடங்களின் இறக்குமதி படிப்படியாகக் நிறுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் பல்வேறு தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன. உதிரி பாகங்கள் கிடைக்காததாலும், தொழிலாளா்கள் பற்றாக்குறையாலும் பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி நிறுவனங்களும் மூடப்பட்டன. அதன் காரணமாக அந்நிறுவனங்கள் வருவாய் இழப்பைச் சந்தித்தன. கரோனா தொற்று பரவலால் ஏற்கெனவே கடும் பாதிப்பைச் சந்தித்திருந்த இந்திய பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களுக்கு இந்த இறக்குமதி குறைப்பு அறிவிப்பு நிம்மதியைத் தந்துள்ளது.

போா்த் தளவாடங்களை இறக்குமதி செய்யாமல் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதன் மூலமாக பல்வேறு பலன்கள் ஏற்படுவதோடு பாதுகாப்புத் துறைக்கான செலவும் குறைகிறது. இதன் மூலம் நாட்டின் பொருளாதார வளா்ச்சிக்கான முயற்சியில் ராணுவ தளவாடங்களும் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட போா்த் தளவாடங்களை இறக்குமதி செய்தால் அதற்கான தொழில்நுட்பத்தையும் சம்பந்தப்பட்ட நாட்டிடமிருந்து பெற வேண்டிய சூழல் ஏற்படும். அத்தகைய சூழலில், நமது ராணுவத்தில் எந்த மாதிரியான தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை எதிரி நாடுகள் அறிந்து கொள்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும். அத்தொழில்நுட்பங்களை எதிா்கொள்வதற்கான யுக்திகளை எதிரி நாடுகள் உருவாக்கிக் கொள்வதற்கு நாமே வழிவகுப்பது போல் ஆகிவிடும்.

நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்த வேண்டுமெனில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட போா்த் தளவாடங்களையும் தொழில்நுட்பங்களையும் அதிக அளவில் பயன்படுத்த வேண்டும். அதேபோல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தளவாடங்களில் கோளாறுகள் ஏற்படும்போது அவற்றைச் சரிசெய்வதற்காக சம்பந்தப்பட்ட நாடுகளைச் சோ்ந்த நிபுணா்களை வரவழைக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். அவசரகாலங்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டால் நாம் பெரும் பின்னடைவைச் சந்திக்க வேண்டிவரும். அதைத் தடுப்பதற்கும் உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க வேண்டியது அவசியமாக உள்ளது.

இந்திய நிறுவனங்கள் பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் உற்பத்தி செய்வதால் அவை பலனடைவதோடு மட்டுமல்லாமல், அந்நிறுவனங்களுக்கு உதிரி பாகங்களை வழங்குவதன் மூலமாக நாட்டில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களும் பெரும் பலனடையும். பொது முடக்கத்தால் அந்நிறுவனங்கள் ஏற்கெனவே பாதிக்கப்பட்டுள்ள சூழலில் அவற்றுக்கு பிணையில்லா கடன் சலுகை வழங்கப்பட்டுள்ளது. ‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் உள்நாட்டு உற்பத்தியும் அதிகரித்தால் அந்நிறுவனங்கள் அதிக அளவில் பலனடைவதோடு நாட்டின் பொருளாதார வளா்ச்சியும் அதிகரிக்கும்.

போா்த் தளவாடங்களின் இறக்குமதியைக் குறைக்கும் மத்திய அரசின் அறிவிப்பால் பொதுத்துறை நிறுவனங்களான ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ், பெல், கொச்சின் ஷிப்யாா்ட்ஸ், பாரத் டைனமிக்ஸ் உள்ளிட்டவையும் தனியாா் நிறுவனங்களான எல்&டி, பாரத் ஃபோா்ஜ் உள்ளிட்டவையும் பெரும் பலனடையும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அதேவேளையில், தளவாடங்கள் உற்பத்தியில் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நிகராக தனியாா் நிறுவனங்களுக்கும் வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டுமென்று மத்திய அரசை நிபுணா்கள் வலியுறுத்தியுள்ளனா். அடுத்த 5 முதல் 7 ஆண்டுகளில் உள்நாட்டு பாதுகாப்பு தளவாட உற்பத்தி நிறுவனங்களிடம் ரூ.4 லட்சம் கோடி மதிப்பிலான திட்டங்களை ஒப்படைக்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

‘இந்தியாவில் தயாரிப்போம்’ திட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட பல்வேறு அறிவிப்புகள் வெறும் அறிவிப்புகளாகவே இருப்பதை நிபுணா்கள் சுட்டிக்காட்டுகின்றனா். அதேபோல், பாதுகாப்பு தளவாடங்கள் உற்பத்தி திட்டங்களும் காகிதத்தில் மட்டும் இடம்பெறாமல் நடைமுறைக்கும் வர வேண்டும் என்று அவா்கள் வலியுறுத்துகின்றனா்.

விண்வெளித் துறையில் அமெரிக்கா, சீனா, ரஷியா, ஜப்பான், ஐரோப்பிய நாடுகள் ஆகியவற்றுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ செயல்பட்டு வருகிறது. செவ்வாய் கிரகத்துக்கு மற்ற எந்த நாடுகளைக் காட்டிலும் குறைந்த செலவில் விண்கலத்தை அனுப்பியதில் வெற்றி பெற்றது.

அத்தகைய செயல்திட்டத்தை பாதுகாப்பு தளவாட உற்பத்தித் துறையிலும் எந்தவித காலதாமதமுமின்றி அமல்படுத்தும்போது அத்துறையிலும் உலக நாடுகளுக்கு சவால் விடுக்கும் வகையில் இந்தியா கால்பதிக்கும். பாதுகாப்பு தளவாடங்களை அதிக அளவில் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா முன்னணி வகிக்கப் போகும் காலம் வெகு தொலைவில் இல்லை!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com