மாம்பழம் சின்னத்தை முடக்கக்கோரிய ராமதாஸின் மனு தள்ளுபடி! மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமார் பதவியேற்றார்! விஜய்யின் வாகனத்தில் பறக்கும் படை சோதனை!தமிழ்நாடு தலை குனியாது! முதல்வர் மு.க. ஸ்டாலின் உறுதி! தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

சென்செக்ஸ் 453 புள்ளிகள் முன்னேற்றம்

பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை ஓரளவு மீண்டு நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 452.73 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.

News image
Updated On :22 டிசம்பர் 2020, 10:17 pm

பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை ஓரளவு மீண்டு நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 452.73 புள்ளிகள் உயர்ந்து நிலைபெற்றது.
 கடந்த வாரம் முழுவதும் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்து வந்த பங்குச் சந்தையில் திங்கள்கிழமை கடந்த மார்ச்சுக்கு பிறகு அதிகபட்ச சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை காலை உற்சாகத்துடன் தொடங்கினாலும், பின்னர் எதிர்மறையாகச் சென்றது.
 இருப்பினும் பிற்பகலில் ஓரளவு மீண்டு எழுந்தது. ஐரோப்பிய பங்குச் சந்தைகள் ஏற்றம் கண்டிருந்த நிலையில், ஐடி, பார்மா பங்குகளுக்கு நல்ல ஆதரவு இருந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி நேர்மறையாக முடிந்ததாக பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், சந்தை கடும் சரிவைச் சந்தித்திருந்த நிலையில், முதலீட்டாளர்கள் ஐடி, பார்மா, எஃப்எம்சிஜி ஆகிய பாதுகாப்பான துறை பங்குகளில் கவனம் செலுத்தியதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.180.76 லட்சம் கோடி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,092 பங்குகளில் 1,569 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,352 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 171 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 118 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்துள்ளன. 251 பங்குகள் வெகுவாக உயர்ந்து அதிகபட்ச உறைநிலையை (அப்பர் சர்க்யூட்) அடைந்தது. சந்தை மூலதன மதிப்பு வர்த்தக முடிவில் ரூ.180.76 லட்சம் கோடியாக இருந்தது.
 ஏற்ற, இறக்கம் அதிகரிப்பு: சென்செக்ஸ் காலையில் 24.35 புள்ளிகள் குறைந்து 45,529.61-இல் தொடங்கி 45,112.19 வரை கீழே சென்றது. பின்னர் மீட்சி பெற்று அதிகபட்சமாக 46,080.18 வரை உயர்ந்தது. இறுதியில் 452.73 புள்ளிகள் உயர்ந்து 46,006.69-இல் நிலைபெற்றது. பங்குச் சந்தையில் வர்த்தக நேரம் முழுவதும் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது.

Story image

 ஹெச்சிஎல் டெக் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 25 பங்குகள் ஆதாயம் பெற்றன. 5 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில், ஹெச்சிஎல் டெக் 5.09 சதவீதம், டெக் மஹிந்திரா 4.20 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக இன்ஃபோசிஸ், பவர் கிரிட், சன்பார்மா, நெஸ்லே இந்தியா, எல் அண்ட் டி, டைட்டன், பார்தி ஏர்டெல் ஆகியவை 2 முதல் 3.78 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், டிசிஎஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 கோட்டக் பேங்க் வீழ்ச்சி :அதேசமயம், கோட்டக் பேங்க், 0.94 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபின் சர்வ், எச்டிஎஃப்சி, ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க் ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.
 தேசிய பங்குச் சந்தையில்...:
 தேசிய பங்குச் சந்தையில் 929 பங்குகள் ஆதாயம் பெற்றன. 807 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி 137.90 புள்ளிகள் (0.1.03 சதவீதம்) உயர்ந்து 13,466.30-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது 13,192.90 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 43 பங்குகள் ஆதாயம் பெற்றன. 7 பங்குகள் நஷ்டத்தை சந்தித்தன. அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன, நிஃப்டி ஐடி 3.36 சதவீதம், பார்மா 2.22 சதவீதம், மெட்டல் 1.36 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.