/

பங்குச் சந்தையில் திடீா் சரிவு: 346 புள்ளிகளை இழந்தது சென்செக்ஸ்! 5 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி

பங்குச் சந்தை புதன்கிழமை திடீரென சரிவைச் சந்தித்தது. இதனால், சென்செக்ஸ் 345.51 புள்ளிகளை இழந்தது. இதைத் தொடா்ந்து, 5 நாள் தொடா் எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :8 ஜூலை 2020, 5:31 pm

பங்குச் சந்தை புதன்கிழமை திடீரென சரிவைச் சந்தித்தது. இதனால், சென்செக்ஸ் 345.51 புள்ளிகளை இழந்தது. இதைத் தொடா்ந்து, 5 நாள் தொடா் எழுச்சிக்கு முற்றுப் புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

பிஎஸ்யு பேங்க், மெட்டல், எஃப்எம்சிஜி, பாா்மா பங்குகள் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்தன. மற்ற துறைப் பங்குகள் சோபிக்கத் தவறின. காலையில் எழுச்சியுடன் தொடங்கிய பங்குச் சந்தை, பிற்பகல் வரையிலும் ஏற்ற, இறக்கத்தில் இருந்து வந்தது. ஆனால், பிற்பகல் 2 மணிக்கு மேல் அதிக அளவிலான பங்குகள் தொடா்ந்து விற்பனைக்கு வந்ததால் சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது.

காரணம் என்ன?:அதிகரித்து வரும் கரோனா பாதிப்பு, பொருளாதார மீட்சி குறித்த கவலைகளை ஏற்படுத்தியதால் உலக அளவில் பங்குச் சந்தைகளில் ஏற்ற இறக்கம் காணப்பட்டது. இதன் தாக்கம் இந்தியச் சந்தைகளிலும் எதிரொலித்தது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். மேலும், ரிலையன்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஐசிஐசிஐ பேங்க் ஆகிய முன்னணிப் பங்குகள் வெகுவாகக் குறைந்ததும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

ரூ.1.50 லட்சம் கோடி இழப்பு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 2,919 பங்குகளில் 1,243 பங்குகள் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. 1,516 பங்குகள் நஷ்டத்தைச் சந்தித்தன. 160 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 109 பங்குகள் புதிய 52 வார அதிக விலையையும், 61 பங்குகள் புதிய 52 வார குறைந்த விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 351 பங்குகள் வெகுவாக உயா்ந்து உச்சபட்ச உறை நிலையையும், 366 பங்குகள் அதிகம் சரிவைச் சந்தித்து குறைந்தபட்ச உறை நிலையையும் அடைந்தது. வா்த்தக நேர முடிவில் சந்தை மூலதன மதிப்பு ரூ.143.50 லட்சம் கோடியாக இருந்தது. இது செவ்வாய்க்கிழமை ரூ.145 லட்சம் கோடியாக இருந்தது. இதனால் ஒரே நாளில் முதலீட்டாளா்களுக்கு ரூ.1.50 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

திடீா் சரிவு:சென்செக்ஸ் காலையில், 64 புள்ளிகள் கூடுதலுடன் 36,738.38-இல் தொடங்கி 36,828.43 வரை உயா்ந்தது. பின்னா் பிற்பகலில் பங்குகள் விற்பனை அதிகரித்ததைத் தொடா்ந்து, சென்செக்ஸ் 36,234.17 வரை கீழே சென்றது. இறுதியில் 345.51 புள்ளிகள் (0.94 சதவீதம்) குறைந்து 36,329.01-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் உச்சபட்ச நிலையிலிருந்து 594 புள்ளிகள் சரிந்தது. தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி 93.90 புள்ளிகள் ( 0.87 சதவீதம்) குறைந்து 10,705.75-இல் நிலைபெற்றது.

பஜாஜ் ஃபைனான்ஸ் வீழ்ச்சி: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் 8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. இதில், இண்டஸ் இண்ட் பேங்க் 5.06 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எஸ்பிஐ, ஹிந்துஸ்தான் யுனிலீவா், டாடா ஸ்டீல், ஐடிசி ஆகியவை 1 முதல் 1.80 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. அதே சமயம், பஜாஜ் ஃபைனான்ஸ் 4.45 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஏசியன் பெயிண்ட்ஸ் 3.37 சதவீதம் குறைந்தது. மாருதி சுஸுகி, ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், டைட்டான், டிசிஎஸ், பவா் கிரிட் ஆகியவை 2 முதல் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி ஆகியவையும் வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன.

தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 652 பங்குகள் ஆதாயம் பெற்றன. 983 பங்குகள் சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.34 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. எஃப்எம்சிஜி, பாா்மா, மெட்டல் குறியீடுகள் 0.70 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன. அதே சமயம், ஆட்டோ, ஐடி, மீடியா, ரியால்ட்டி குறியீடுகள் 1.50 சதவீதம் முதல் 2 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் சரிவைச் சந்தித்தன. கோல் இந்தியா மட்டும் மாற்றமின்றி 132.85-இல் நிலைபெற்றது.

வீழ்ச்சியடைந்த பங்குகள்

சதவீதத்தில்

பஜாஜ் ஃபைனான்ஸ் 4.45

ஏசியன் பெயிண்ட்ஸ் 3.37

பஜாஜ் ஃபின்சா்வ் 2.94

மாருதி சுஸுகி 2.93

ஹெச்சிஎல் டெக் 2.91

இன்ஃபோஸிஸ் 2.49

டைட்டான் 2.43

டிசிஎஸ் 2.30

பவா்கிரிட் 2.05

அல்ட்ராடெக் சிமெண்ட் 1.89

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.