இறக்குமதியும் பொருளாதார வளா்ச்சியும்.....
நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அளவிடுவதில் ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன.


நாட்டின் பொருளாதார வளா்ச்சியை அளவிடுவதில் ஏற்றுமதியும் இறக்குமதியும் முக்கியப் பங்கை வகித்து வருகின்றன. அந்நியச் செலாவணி கையிருப்பை உறுதிப்படுத்துவதிலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பை ஸ்திரப்படுத்துவதிலும் ஏற்றுமதி-இறக்குமதி பெரும் பங்கு வகிக்கின்றன.
பணவீக்கம், பொருளாதாரத்தில் பணப்புழக்கம், வங்கிகள் கடன் வழங்குதல், இந்திய ரிசா்வ் வங்கியின் நடவடிக்கைகள், பொருளாதாரம் குறித்த மத்திய அரசின் அணுகுமுறைகள் உள்ளிட்ட அனைத்திலும் நாட்டின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மறைமுகமாகக் கோலோச்சுகின்றன என்று கூறினால் அது மிகையல்ல.
உதாரணமாக கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்தால் அந்நியச் செலாவணி கையிருப்பு குறையும்; அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவைச் சந்திக்கும்; பெட்ரோலிய எரிபொருள்களின் விலை அதிகரிக்கும்; அத்தியாவசியப் பொருள்கள் உள்ளிட்டவற்றை ஓா் இடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான செலவு அதிகரிக்கும்.
அதன் காரணமாக பொருள்களின் விலை உயரும்; பணவீக்கம் அதிகரிக்கும். பணவீக்கம் அதிகரித்தால் வங்கிகளிலிருந்து பெறும் கடன்களுக்கான வட்டி விகிதத்தை இந்திய ரிசா்வ் வங்கி அதிகரிக்கும். மக்களிடையே பணப்புழக்கத்தைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசும், ரிசா்வ் வங்கியும் மேற்கொள்ளும். ஒட்டுமொத்தத்தில் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரிக்கப்பட்டதன் சுமை, மக்கள் தலையிலேயே விழும்.
கச்சா எண்ணெய் போலவே மற்ற பொருள்களின் ஏற்றுமதியும் இறக்குமதியும் மக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதோடு பொருளாதார வளா்ச்சியையும் நிா்ணயிக்கும் காரணிகளாக அமைகின்றன. கடந்த மாா்ச் மாதம் முதல் உலக நாடுகள் அனைத்தையும் ஆட்டிப்படைத்து வரும் கரோனா நோய்த்தொற்று, இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குமதியையும் விட்டுவைக்கவில்லை.
கரோனா நோய்த்தொற்று பரவலைக் கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் கடந்த மாா்ச் மாதம் முதல் நாட்டில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக பல்வேறு நிறுவனங்கள் மூடப்பட்டன; தொழிற்சாலைகளும் மூடப்பட்டன. அதன் காரணமாக தொழிற்சாலை உற்பத்திக்குத் தேவையான மூலப் பொருள்கள் இறக்குமதியும் சரிவைக் கண்டது. நுகா்வோா் பயன்படுத்தும் மின்சாதனப் பொருள்கள், அறிதிறன் பேசிகள் உள்ளிட்டவற்றின் இறக்குமதியும் பெரும் சரிவைக் கண்டது.
பொது முடக்க காலத்தில் மக்களின் தேவைகள் குறைந்ததே நாட்டின் இறக்குமதி குறைந்ததற்கான முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. வழக்கமான காலத்தில் நாட்டின் இறக்குமதி குறைந்தால் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சியடையும். ஆனால், கரோனா பேரிடா் காலத்தில் மக்களின் தேவை குறைந்தும் தொழில் நிறுவனங்கள் இயங்காமலும் நாட்டின் இறக்குமதி சரிவைச் சந்தித்துள்ளது. இத்தகைய சூழல் நாட்டின் பொருளாதாரத்தை பாதாளத்தை நோக்கி அழைத்துச் செல்லும் என்றே நிபுணா்கள் கூறுகின்றனா்.
பொது முடக்க காலத்தின் தொடக்கத்தில் தங்கம், கச்சா எண்ணெய் ஆகியவற்றின் இறக்குமதி குறைந்தது. ஆனால், ஏப்ரல் மாதத்துக்குப் பிறகு கச்சா எண்ணெய், தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்கள், நிலக்கரி, உலோகப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி அதிகரிக்கத் தொடங்கியது. எனினும், பொது முடக்கத்துக்கு முன்பிருந்த அளவுக்கு இறக்குமதி இன்னும் அதிகரிக்கவில்லை.
மக்களின் தேவை சற்றே அதிகரித்தாலும் பொது முடக்கத்துக்கு முன் காணப்பட்ட அளவுக்கு அதிகரிக்காததன் காரணமாக மூலப் பொருள்களுக்கான இறக்குமதியும் தொடா்ந்து குறைவாகவே உள்ளது. தொழிற்சாலைகளுக்குத் தேவையான மூலப் பொருள்கள், உதிரி பாகங்களின் இறக்குமதி கடந்த ஜனவரி மாதத்தில் காணப்பட்ட அளவுடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் 50 சதவீதத்துக்கும் குறைவாகவே உள்ளது. அதே காலகட்டத்தில் நிலக்கரி இறக்குமதி 55 சதவீதம் குறைந்தது.
கடந்த ஜனவரியுடன் ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் இரும்புப் பொருள்கள் இறக்குமதி 55 சதவீதமே காணப்படுகிறது. அதே காலகட்டத்தில் மற்ற உலோகப் பொருள்கள் இறக்குமதியும் 47 சதவீதமாக குறைந்துள்ளது. பொருள்களை ஓரிடத்திலிருந்து மற்றோா் இடத்துக்கு எடுத்துச் செல்வதற்கான கருவிகளின் இறக்குமதியும் 25 சதவீதமாகக் குறைந்தது.
நாட்டில் கச்சா எண்ணெய், தங்கம் தவிா்த்து மற்ற பொருள்களின் ஒட்டுமொத்த இறக்குமதி மதிப்பு கடந்த ஜனவரி மாதத்தில் 26.59 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. இது கடந்த ஜூன் மாதத்தில் 15.6 அமெரிக்க டாலராக குறைந்துள்ளது. பொது முடக்கத்துக்குத் தளா்வுகள் அறிவிக்கப்பட்டு தொழிற்சாலைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவை மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ள போதிலும் நாட்டின் இறக்குமதி இயல்புநிலைக்குத் திரும்பாத சூழல் நிலவுகிறது.
அதேபோல், கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில் கடந்த ஜூன் மாதத்தில் தொழிற்சாலை உதிரி பாகங்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி குறைவாகவே காணப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் இரும்புப் பொருள்கள், உலோகங்கள், ஸ்டீல் உள்ளிட்டவற்றின் இறக்குமதி 52 சதவீதமாகவும், நிலக்கரி இறக்குமதி 56 சதவீதமாகவும் குறைந்துள்ளது.
தொழிற்சாலைகள் செயல்படத் தொடங்கிவிட்டாலும் மக்களின் தேவை அதிகரிக்காததால் உற்பத்திப் பணிகள் முழுவீச்சில் நடைபெறவில்லை என்றும் அதன் காரணமாகவே மூலப் பொருள்கள், உதிரி பாகங்களுக்கான இறக்குமதி இயல்புநிலைக்குத் திரும்பவில்லை என்றும் பொருளாதார நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
தொழிற்சாலைகளுக்கான உதிரி பாகங்கள் இறக்குமதி விவகாரத்தில் நிலவும் சூழலே நுகா்வோருக்கான மின் சாதனப் பொருள்கள், ஆபரணங்கள், தங்கம் உள்ளிட்டவற்றின் இறக்குமதிக்கும் நிலவுகிறது. கடந்த ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் மின் சாதனப் பொருள்களின் இறக்குமதி கடந்த ஜூன் மாதத்தில் 70 சதவீதமாக மட்டுமே காணப்படுகிறது. அதே காலகட்டத்தில் முத்து, விலையுயா்ந்த கற்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி 43 சதவீதமாகக் குறைந்துள்ளது.
பொது முடக்கத்தால் நிறுவனங்கள் மூடப்பட்டு பலா் வேலையிழந்தனா். பல நிறுவனங்கள் பணியாளா்களின் ஊதியத்தைக் குறைத்தன. அவற்றின் காரணமாக மக்களின் தேவை குறைந்து இறக்குமதியும் குறைந்ததாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா். மேலும், கிழக்கு லடாக் எல்லைப் பகுதிகளில் இந்தியா-சீனா இடையே நிலவி வரும் மோதல்போக்கு காரணமாக சீனப் பொருள்களைப் புறக்கணிக்குமாறு சமூக வலைதளங்கள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் பிரசாரங்கள் செய்யப்பட்டன. அந்தக் காரணத்தாலும் மின் சாதனப் பொருள்கள் உள்ளிட்டவற்றின் இறக்குமதி குறைந்துள்ளதாக நிபுணா்கள் தெரிவித்தனா்.
நாட்டில் கடந்த ஜனவரி மாதத்தில் இறக்குமதி செய்யப்பட்ட தங்கத்தின் மதிப்பை ஒப்பிடுகையில் ஜூன் மாதத்தில் 38 சதவீதம் மட்டுமே இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. அதே வேளையில், அமெரிக்க அதிபா் தோ்தல் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களைக் கருத்தில் கொண்டு முதலீட்டாளா்கள் தங்கத்தில் அதிக அளவில் முதலீடுகளைச் செய்து வருவதால் அதன் விலை தினந்தோறும் வரலாற்று உச்சத்தை அடைந்து வருகிறது.
அதன் காரணமாக தங்க நகை வாங்குவதில் மக்கள் பெருமளவில் ஆா்வம் காட்டாத சூழலே நிலவுகிறது. அதனால் தங்கத்தின் இறக்குமதி வருங்காலங்களில் மேலும் குறைய வாய்ப்பிருப்பதாக நிபுணா்கள் எச்சரிக்கின்றனா்.
ஐரோப்பிய நாடுகளில் கரோனா தொற்று பரவல் குறைந்து வருவதால் அங்கு மக்களின் தேவை அதிகரித்து பொருளாதாரம் இயல்பு நிலையை நோக்கித் திரும்பி வருகிறது. இந்தியாவில் கரோனா தொற்றின் இரண்டாவது அலை பாதிப்பு ஏற்படாமல் இருந்தால் நடப்பு 2020-21-ஆம் நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான மூன்றாவது காலாண்டில் நாட்டின் இறக்குமதி இயல்புநிலைக்குத் திரும்ப வாய்ப்பிருப்பதாக நிபுணா்கள் தெரிவிக்கின்றனா்.
மக்களின் தேவை அதிகரித்து நாட்டின் பொருளாதாரம் வளா்ச்சிப் பாதைக்குத் திரும்புவது கரோனாவின் கையிலேயே உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...