

தமிழகத்தில் கரோனா பொது முடக்கத்தால் விற்பனை இல்லாததால் ரூ. 800 கோடிக்கு மேல் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தேங்காய் உற்பத்தியாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்தில் சுமார் 5 கோடிக்கும் அதிகமான தென்னை மரங்கள் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. இளநீர், கொப்பரை, உடை தேங்காய் என்ற வகையில் காய்கள் தரம் பிரிக்கப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். உள்ளூர் விற்பனை போக பிற மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அதிக அளவில் தேங்காய்கள் விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன.
ஆண்டுக்கு 6 முறை தேங்காய் பறிப்பு: தேங்காய் உற்பத்தியாளர்கள் குத்தகை அடிப்படையில் விவசாயிகளிடம் இருந்து மரத்தைப் பெற்று காய்களைப் பறிப்பர். ஆண்டுக்கு 6 முறை என்ற அடிப்படையில் 2 மாதங்களுக்கு ஒருமுறை தேங்காய்கள் பறிக்கப்படும். விற்பனை அதிகமுள்ள காலங்களில் ஒரு மரத்துக்கு ரூ. 1,500 வரை விலை பேசப்படும். மரங்களில் பறிக்கும் தேங்காய்களைக் கொண்டுவந்து உரித்து ஒரு மாத இடைவெளியில் வைத்திருந்து விற்பனைக்கு அனுப்புவர்.
விசேஷங்களுக்குத் தடை: கடந்த ஆண்டு தேங்காய் விற்பனை அதிக அளவில் இருந்தது. அதேபோல நிகழாண்டிலும் விற்பனை இருக்கும் என்ற நம்பிக்கையில் உற்பத்தியாளர்கள் தேங்காய்களை பறித்து, அதனை உரித்துப் போட்டு வைத்தனர். மார்ச் 25-இல் தொடங்கிய கரோனா பொது முடக்கத்தால் வழக்கமான விற்பனை இல்லாமல் போனது.
அத்தியாவசியப் பொருள்கள் விற்பனையில் தேங்காயும் உள்ளதால் பெரிதாக பாதிப்பில்லை. அதேவேளையில் கோயில்கள் திறப்புக்கும், திருவிழாக்களுக்கும், திருமண விழாக்களுக்கும் அரசு தடை விதித்ததாலும், தமிழகத்தில் வழக்கமான தேங்காய் விற்பனை இல்லை.
2 மாதங்கள் வரை அழுகாமல் தாக்குப்பிடிக்கும்: வெளி மாநிலங்களிலும் விழாக்கள் ரத்து செய்யப்பட்டதால் தேங்காய்களை அனுப்ப முடியவில்லை. இதனால் மாவட்டங்களில் உள்ள தேங்காய் உற்பத்திக் கிடங்குகளில் லட்சக்கணக்கில் தேங்காய்கள் தேங்கி கிடக்கின்றன.
நாமக்கல் மாவட்டத்தில் மோகனூர், பரமத்திவேலூர், ஒருவந்தூர், சேந்தமங்கலம், வளையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட தேங்காய் உற்பத்திக் கிடங்குகள் உள்ளன. இங்கு சுமார் 300 டன்னுக்கும் மேலாக தேங்காய்கள் இருப்பில் உள்ளன. 2 மாதங்கள் வரை அவை தாக்குப்பிடிக்கும் என்பதால் தேங்காய்கள் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தார்ப்பாய் கொண்டு மூடி வைக்கின்றனர்.
தொழிலாளர் பற்றாக்குறை: இவை மட்டுமின்றி மரத்தில் இருந்து பறிக்கப்படும் காய்களும் உரிக்கப்படாமல் அதிக அளவில் தேங்கியுள்ளன. தொழிலாளர் பற்றாக்குறையால் இந்த பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களில் மட்டும் ரூ. 800 கோடி முதல் ரூ.1,000 கோடி வரையில் இத்தொழிலில் வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக உற்பத்தியாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. வரும் மாதங்களில் வட மாநிலங்களில் நடைபெறும் திருவிழாக்களை நம்பியே தேங்காய் உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
விலை இல்லை; லாபம் இல்லை: நாமக்கல் மாவட்டம், மோகனூரைச் சேர்ந்த தேங்காய் உற்பத்தியாளர் சங்கப் பிரமுகர் பழனிசாமி கூறியதாவது:
கரோனா பொது முடக்கம் மற்ற தொழில்களைப் போல தேங்காய் தொழிலையும் பாதித்துள்ளது. கோயில்கள் திறக்காதது, திருமண விழாக்கள் இல்லாதது போன்றவற்றால், தேங்காய்களுக்கு எதிர்பார்த்த விலை, லாபம் கிடைக்கவில்லை. தென்னந்தோப்புகளுக்கு லட்சக்கணக்கில் பணம் செலுத்தி குத்தகை அடிப்படையில் மரங்களை எடுக்கிறோம். தேங்காய் பறிப்பது, லாரியில் எடுத்து வருவது, உரிப்பது, பின்னர் அவற்றைப் பராமரித்து மூட்டையாகக் கட்டி விற்பனைக்கு அனுப்புவது என ஒரு தேங்காய்க்கு ரூ. 12 வரை செலவாகிறது.
சீசன் காலங்களில் ரூ. 15 வரை விலை போகும். தற்போது வியாபாரிகள் ஒரு தேங்காயை ரூ. 10-க்கு கேட்கின்றனர். கரோனா பொது முடக்கத்தால் வருவாய் பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.
வட மாநில திருவிழா: தமிழகம் முழுவதும் 250-க்கும் மேற்பட்ட தேங்காய் உற்பத்தியாளர்கள் உள்ளனர். இந்த பொது முடக்கக் காலத்தில் ரூ. 800 கோடிக்கு மேலாக இழப்பு ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 3-ஆம் தேதி வட மாநிலங்களில் ரக்ஷாபந்தன் விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழா மகாராஷ்டிரம், குஜராத், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், பிகார், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் சிறப்பாக நடைபெறும். அப்போது தேங்காய் வைத்து அம்மாநில மக்கள் சிறப்பு வழிபாடு நடத்துவர். அதற்கு தேங்காய்களை அனுப்புவதற்கான பணிகளை தற்போது தொடங்கியுள்ளோம்.
தேங்காய்களைப் பறித்து உரித்துவிட்டால் 2 மாதங்கள் வரை அழுகாமல் தாக்குப்பிடிக்கும். அதனால்தான் எங்களால் ஓரளவு தொழிலில் தாக்குப்பிடிக்க முடிகிறது. வழக்கமான கோயில்கள் திறப்பு, திருவிழாக்கள், திருமண விழாக்கள், இதர பண்டிகைகள் நடைபெற்றால்தான் தேங்காய் விற்பனையில் மீண்டும் பழைய நிலையை அடைய முடியும் என்றார்.
ஒரு தேங்காய் உரிக்க 60 காசு மட்டுமே...
தேங்காய் உரிக்கும் தொழிலாளி இளங்கோ கூறியது: தேங்காய் விற்பனை மந்தமாகத் தான் உள்ளது. எங்களுக்கு ஆண்டுதோறும் வேலை இருக்கும். மரத்தில் இருந்து பறித்து வரும் தேங்காய்களை உரிக்க, ஒரு தேங்காய்க்கு 60 காசு கொடுக்கின்றனர். தினசரி 1000 தேங்காய்கள் உரித்தால் ரூ. 600 வரை கிடைக்கும். சற்றே கவனம் சிதறினால் கைகளில் பாதிப்பு ஏற்பட்டு விடும். எச்சரிக்கையுடன் செய்ய வேண்டிய வேலை இது. இதற்கென தனியாக இயந்திரங்கள் கிடையாது. கூர்மையான இரும்புக் கம்பியில் குத்தித் தான் உரிக்க வேண்டும் என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.