திருப்பரங்குன்ற வழக்குகளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் விசாரிக்க தடை! உயர் நீதிமன்றம் தஞ்சாவூரில் 4-ம் கட்ட சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறார் மு.க. ஸ்டாலின்!பாமக விவகாரம்: அவசர வழக்காக விசாரிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு! திருவண்ணாமலையில் முதல்வர் ஸ்டாலின் பிரசாரம்!தென்றலாக இருக்கும் தெற்கைப் புயலாக மாற்றாதீர்கள்! - முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,720 உயர்வு!டிரம்ப் வரி குறைப்பு எதிரொலி! சென்செக்ஸ் 2,600 புள்ளிகள் உயர்வு!விஜய்யின் கடலூர் பிரசாரத்துக்கு அனுமதி!கச்சா எண்ணெய் விலை அதிரடி சரிவு!
/

திடீர் எழுச்சி: சென்செக்ஸ் 661 புள்ளிகள் முன்னேற்றம்

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது.

News image

கோப்புப்படம்

Updated On :13 ஏப்ரல் 2021, 10:04 pm

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தை நேர்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 660.68 புள்ளிகள் உயர்ந்து 48,544-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 194 புள்ளிகள் உயர்ந்து 14,500-ஐ கடந்து நிலைபெற்றது. இந்த இரண்டு முக்கிய குறியீடுகளும் திங்கள்கிழமை வர்த்தகத்தில் கடும் சரிவைச் சந்தித்திருந்தன.
 உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்தன. இதையடுத்து, உள்நாட்டுச் சந்தைகள் எழுச்சியுடன் தொடங்கியது. பின்னர் தள்ளாட்டம் கண்டது. இருப்பினும், தடுப்பூசி வழங்கும் செயல்முறைகளை மேம்படுத்துவதற்காக வெளிநாட்டு கரோனா தடுப்பூசிகளுக்கு அரசு விரைந்து ஒப்புதல் அளித்து வருவதாக வெளியான தகவலால் பிற்பகலில் சந்தையில் உற்சாகம் ஏற்பட்டது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
 நிதித் துறை, ஆட்டோ மொபைல் துறை பங்குகளுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இருப்பினும், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் காலாண்டு முடிவைத் தொடர்ந்து, ஐடி பங்குகளில் லாபப் பதிவு அதிகரித்தது. இதேபோன்று பார்மா பங்குகளும் வீழ்ச்சியைச் சந்தித்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,046 பங்குகளில் 1,913 பங்குகள் ஆதாயம் பெற்றன. 928 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 182 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூலதன மதிப்பு ரூ.2.24 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.203.09
 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது முதலீட்டாளர்களுக்கு ஒரே நாளில் மொத்தம் ரூ.2.24 லட்சம் கோடி லாபம் கிடைத்துள்ளது.
 திடீர் எழுச்சி: சென்செக்ஸ் காலையில் 108.15 புள்ளிகள் கூடுதலுடன் 47,991.53-இல் தொடங்கி 47,775.32 வரை கீழே சென்றது. பின்னர் 48,627.43 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 660.68 புள்ளிகள் அதிகரித்து 48,544.06-இல் நிலைபெற்றது. குறிப்பாக வர்த்தகத்தின் பிற்பகுதியில்தான் பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
 எம் அண்ட் எம் முன்னிலை:
 சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 22 பங்குகள் ஆதாயம் பெற்றன. 8 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. இதில் எம் அண்ட் எம் 8.02 சதவீதம், பஜாஜ் ஃபின்சர்வ் 7.7
 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக, பஜாஜ் ஃபைனான்ஸ், மாருதி சுஸுகி, இன்டஸ்இண்ட் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஓஎன்ஜிசி, ஆக்ஸிஸ் பேங்க் ஆகியவை 4 முதல் 5 சதவீதம் வரை ஏற்றம் பெற்றன. எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிஐ, கோட்டக் பேங்க் ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 டிசிஎஸ் சரிவு: அதேசமயம், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ் 4.21 சதவீதம், டாக்டர் ரெட்டீஸ் லேப் 4.18, டெக் மஹிந்திரா 3.54 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக ஹெச்சிஎல் டெக், இன்ஃபோஸிஸ், நெஸ்லே இந்தியா, ஏசியன் பெயிண்ட்ஸ் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை குறைந்தன.
 தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 1,298 பங்குகள் ஆதாயம் பெற்றன. 438 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 194 புள்ளிகள் (1.36 சதவீதம்) உயர்ந்து 14,504.80-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 14,278.90 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 38 பங்குகள் ஆதாயம் பெற்றன. 12 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. ஐடி குறியீடு 3.28 சதவீதம், பார்மா குறியீடு 1.18 சதவீதம் சரிவைச் சந்தித்தன.
 நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 4.49 சதவீதம், ஆட்டோ குறியீடு 4.28 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல், பைனான்சியல் சர்வீஸஸ் குறியீடுகள் 3 முதல் 3.50 சதவீதம் வரை உயர்ந்தன.
 இன்று விடுமுறை
 பாபா சாஹேப் அம்பேத்கரின் ஜயந்தியையொட்டி, புதன்கிழமை பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகளில் அன்றைய தினம் பங்கு வர்த்தகம் நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமாடிட்டி சந்தையில் (எம்சிஎக்ஸ்) காலையில் வர்த்தகம் இருக்காது. ஆனால், மாலை 5.30 முதல் இரவு 11.30 வரை வர்த்தகம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.