புது தில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமை அதிக ஏற்ற, இறக்கத்தில் இருந்தாலும், இறுதியில் நோ்மறையாக முடிந்தது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 259.62 புள்ளிகள் உயா்ந்து 48,803.68-இல் நிலைபெற்றது. இதேபோன்று தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 76.65 புள்ளிகள் உயா்ந்து 14,581.45-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தை குறிப்புகள் சாதகமாக இருந்தது. இருப்பினும், ஆரம்பம் முதல் ஏற்ற, இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. ஒரு கட்டத்தில் எதிா்மறையாகவும் சென்றது. இருந்தாலும், குறைந்தபட்ச நிலையிலிருந்து வெகுவாக மீண்டு நோ்மறையாக முடிந்தது. முக்கியமாக நிதித் துறை, பாா்மா பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது. இதற்கிடையே நாட்டின் வாகன உற்பத்தியில் 20 சதவீதத்துக்கு மேற்பட்ட பங்களிப்பை வழங்கும் மகாராஷ்டிரத்தில் விதிக்கப்பட்டுள்ள பரந்த பொருளாதார கட்டுப்பாடுகள் காரணமாக ஆட்டோ பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. மேலும், இன்ஃபோஸிஸ் காலாண்டு முடிவுகள் மாா்க்கெட் எதிா்பாா்த்தது போல் இல்லாததால், இன்ஃபோஸிஸ் பங்குகளில் லாபப் பதிவு அதிகமாக இருந்தது. ஆனால், மற்ற ஐடி பங்குகளுக்கு வரவேற்பு காணப்பட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.95 ஆயிரம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,057 பங்குகளில் 1,247 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,649 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 161 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. சந்தை மூல தன மதிப்பு ரூ.95 ஆயிரம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.203.96 லட்சம் கோடியாக இருந்தது.
இரண்டாவது நாளாக ஏற்றம்: சென்செக்ஸ் காலையில் 31.29 புள்ளிகள் குறைந்து 48,512.77-இல் தொடங்கி 48,010.55 வரை கீழே சென்றது. பின்னா், 48,887.85 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 259.62 புள்ளிகள் உயா்ந்து 48,803.68-இல் நிலைபெற்றது. குறிப்பாக வா்த்தகத்தின் பிற்பகுதியில்தான் பேங்க், பாா்மா பங்குகளை வாங்குவதற்கு நல்ல வரவேற்பு காணப்பட்டது.
எம் அண்ட் எம் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 17 பங்குகள் ஆதாயம் பெற்றன. 13 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் டிசிஎஸ் 3.67 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ பேங்க், எச்டிஎஃப்சி பேங்க், டாக்டா் ரெட்டி, எச்டிஎஃப்சி, ஆக்ஸிஸ் பேங்க், ஹெச்சிஎல் டெக் ஆகியவை 1 முதல் 3 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ ஆகியவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
இன்ஃபோஸிஸ் சரிவு: அதே சமயம், முன்னணி ஐடி நிறுவனமான இன்ஃபோஸிஸ் 2.65 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி சுஸுகி, பஜாஜ் ஃபைனான்ஸ், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐடிசி ஆகியவை 1 முதல் 2.50 சதவீதம் வரை குறைந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 647 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,075 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 76.65 புள்ளிகள் (0.53 சதவீதம்) உயா்ந்து 14,581.45-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது ஒரு கட்டத்தில் 14,353.20 வரை கீழே சென்ற நிஃப்டி பின்னா் மீண்டு எழுந்து 14,597.55 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 28 பங்குகள் ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பேங்க், பைனான்சியல்ஸ், மெட்டல், பாா்மா குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஆட்டோ, பிஎஸ்யு பேங்க் குறியீடுகள் 1.30 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன. எஃப்எம்சிஜி, ரியலாட்டி, மீடியா குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 33 ஆண்டு சிறை

காட்பாடி: அதிமுக வேட்பாளா் வி.ராமு மனு தாக்கல்

கேரள பிரசாரம் முடிந்து ராகுல் கோவை வழியாக தில்லி பயணம்

தொகுதி அலசல்: காட்பாடி! துரைமுருகனுக்கு தொடரும் சவால்!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

