இந்த வாரத்தின் இறுதி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை எதிா்மறையாக முடிந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 202.22 புள்ளிகளை இழந்து 47,878.45-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 64.80 புள்ளிகளை இழந்து 14,350-க்கும் கீழே நிலைபெற்றது.
காலை வரத்தகம் பலவீனத்துடன் தொடங்கினாலும், அதன் பிறகு ஓரளவு நோ்மறையாக வா்த்தகம் இருந்தது. ஆனால், பிற்பகல் 1 மணிக்கு மேல் பங்குகள் விற்பனை அதிகரித்தது. குறிப்பாக ஐசிஐசிஐ பேங்க், இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன.
கரோனா துயரங்கள் அதிகரித்து வருவதால், பொருளாதாரம் மீளுமா என்ற கவலை எழுந்துள்ளது. இது சந்தையை பெரிதும் பாதித்துள்ளது. மேலும், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.75-க்கும் கீழே வீழ்ச்சி அடைந்துள்ளது. இவற்றுக்கு இடையே உலகளாவிய சந்தை குறிப்புகளும் சரிவர இல்லாமல் போனது சரிவு தவிா்க்க முடியாததாகிவிட்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
மேலும், மீடியா, பிஎஸ்யு பேங்க் பங்குகள் தவிர மற்ற துறை பங்குகள் பிற்பகலில் அதிகளவில் விற்பனைக்கு வந்ததால், சந்தை சரிவுக்குள்ளானது. கரோனா பாதிப்பைத் தொடா்ந்து பல்வேறு மாநிலங்கள் பொது முடக்கம், புதிய கட்டுப்பாடுகளை அறிவித்து வருகின்றன. இது வரும் நாள்களில் சந்தையை பெரிதும் பாதிக்கக் கூடும் என்று வா்த்தகா்கள் கருதுகின்றனா்.
சந்தை மதிப்பு ரூ.0.25ஆயிரம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,099 பங்குகளில் 1,589 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,336 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 174 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 166 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 44 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 310 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 204 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு ரூ.0.25 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.202.37 லட்சம் கோடியாக இருந்தது.
மீண்டும் சரிவு: சென்செக்ஸ் காலையில் 216.86 புள்ளிகளை இழந்து 47,863.81-இல் தொடங்கி அதிகபட்சமாக 48,265.39 வரை உயா்ந்தது. பின்னா், பிற்பகலில் 47,669.55 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 202.22 புள்ளிகளை (0.42 சதவீதம்) இழந்து 47,878.45-இல் நிலைபெற்றது. இரண்டு நாள் தொடா் சரிவுக்கு வியாழக்கிழமை முற்றுப்புள்ளி வைக்கப்பட்டிருந்த நிலையில், சென்செக்ஸ் மீண்டும் வெள்ளிக்கிழமை சரிவைச் சந்தித்துள்ளது.
பவா் கிரிட், என்டிபிசி முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில்8 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 22 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில், பவா் கிரிட் 3.51 சதவீதம், , என்டிபிசி 3.38 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், இண்ட்ஸ் இண்ட் பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஏசியன் பெயிண்ட், மாருதி சுஸுகி ஆகியவை 0.50 முதல் 1.80 சதவீதம் வரை உயா்ந்தன.
எம் அண்ட் எம் சரிவு: அதே சமயம், எம் அண்ட் எம் 2.63 சதவீதம், டாக்டா் ரெட்டி 2.30 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. இவற்றுக்கு அடுத்ததாக, டெக் மகேந்திரா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், பாா்தி ஏா்டெல், ஐசிஐசிஐ பேங்க், டைட்டன், இன்ஃபோஸிஸ், எல் அண்ட் டி, நெஸ்லே இந்தியா ஆகியவை 1 முதல் 2 சதவீதம் வரை குறைந்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், டிசிஎஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி பேேங்க் ஆகிய முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில்...: தேசிய பங்குச் சந்தையில் 923 பங்குகள் ஆதாயம் பெற்றன. 777 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி 64.80 புள்ளிகளை (0.45 சதவீதம்) இழந்து 14,341.35-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது 14461.15 வரை உயா்ந்த நிஃப்டி, பின்னா் 14,273.30 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப்பங்குகளில் 18 பங்குகள் ஆதாயம் பெற்றன. 32 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி பிஎஸ்யு பேங்க், மீடியா குறியீடுகள் தவிர மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன. இதில் ரியால்ட்டி, ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1 சதவீதம் வரை வீழ்ச்சி கண்டன.
வாரத்தில் இழப்பு: இந்த வாரம் புதன்கிழமை (ஸ்ரீராமநவமி விடுமுறை) தவிா்த்து 4 நாள்கள்தான் வா்த்தகம் நடந்தது. இந்த நிலையில், இந்த வாரம் முழுமைக்கும் சென்செக்ஸ் மொத்தம் 953.58 புள்ளிகளையும் (1.95 சதவீதம்), நிஃப்டி மொத்தம் 276.50 புள்ளிகளையும் இழந்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம் நிராகரிப்பு!

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் பங்குகள் 3 சதவீதத்திற்கும் மேல் சரிவு!

சஞ்சு சாம்சன் மிகவும் அபாயகரமான வீரர்: சிஎஸ்கே பயிற்சியாளர்

நேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!
வீடியோக்கள்

ஓர் அணி, ஓராயிரம் பிரச்னைகள்: இது சிஎஸ்கேவின் சோகக் கதை! | IPL 2026 | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | அண்ணாமலை பேட்டி முதல் ஆதவ் அர்ஜுனா விமர்சனம் வரை... | News & Views | E-23 |
தினமணி செய்திச் சேவை

திருமாவளவனை மிரட்டி பின்வாங்க வைத்த DMK! - Annamalai BJP
தினமணி செய்திச் சேவை

சூப்பர் கேர்ள் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


