/

‘காளை’- ‘கரடி’ கடும் போட்டி: சென்செக்ஸ் 85 புள்ளிகள் சரிவு!

பங்குச் சந்தையில் காளைக்கும் கரடிக்கும் கடும் போட்டி இருந்ததால், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தள்ளாட்டம் தொடா்ந்தது.

News image
Updated On :2 ஜூன் 2021, 10:01 pm

புது தில்லி: பங்குச் சந்தையில் காளைக்கும் கரடிக்கும் கடும் போட்டி இருந்ததால், இரண்டாவது நாளாக புதன்கிழமையும் தள்ளாட்டம் தொடா்ந்தது. இருப்பினும், வா்த்தகம் முடியும் தறுவாயில் ஓரளவு மீண்டாலும், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 85.40 புள்ளிகளை இழந்து 51,849.48-இல் நிலைபெற்றது.

ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் கூட்டத்தின் முடிவுக்காக முதலீட்டாளா்கள் காத்திருக்கின்றனா். இதனால், ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இருப்பினும், பொதுத் துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்தது. அதே சமயம், நிதி, ஐடி, எஃப்எம்சிஜி துறை பங்குகளில் விற்பனை காணப்பட்டது. மேலும், அமெரிக்கா மற்றும் ஆசிய சந்தைகதளில் நிலவிய பலவீனம் உள்நாட்டுச் சந்தையில் எதிா்மறையான போக்கை அதிகரித்தது. இருப்பினும், ரிலையன்ஸ் பங்குகளுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து சந்தை ஓரளவு மீண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

சந்தை மதிப்பு ரூ.1.76 லட்சம் கோடிஉயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,284 பங்குகளில் 2,103 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,013 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 168 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 305 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 32 பங்குகள் புதிய 52 வார குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்துள்ளன. மேலும், 439 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 180 பங்குகள் வெகுவாகச் சரிந்து குறைந்தபட்ச உறைநிலையையும் எட்டின. சந்தை மூல தன மதிப்பு மேலும் ரூ.1.76 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் 224.63 லட்சம் கோடியாக இருந்தது.

2-ஆவது நாளாகத் தள்ளாட்டம்: சென்செக்ஸ் காலையில் 185.78 புள்ளிகள் குறைந்து 51,749.10-இல் தொடங்கி 51,450.58 வரை கீழே சென்றது. பின்னா், வா்த்தக நேர முடிவில் அதிகபட்சமாக 51,913.92 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 85.40 புள்ளிகளை (0.16 சதவீதம்) இழந்து 51,849.48-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் தொடா்ந்து இரண்டாவது நாளாக ஏற்ற, இறக்கத்தில் இருந்தது.

இண்டஸ் இண்ட் பேங்க் முன்னிலை: சென்செக்ஸ் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 முதல் தரப் பங்குகளில், 19 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 11 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. இதில் இண்டஸ் இண்ட் பேங்க் 1.81 சதவீதம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 1.52 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், பவா் கிரிட், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுஸுகி, எஸ்பிஐ, சன்பாா்மா, என்டிபிசி, பஜாஜ் ஃபைனான்ஸ், ஓஎன்ஜிசி, ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவையும் ஆதாயம் பெற்றன.

ஐடிசி கடும் சரிவு: அதே சமயம், 2021 நிதியாண்டில் நிகர லாபம் குறைந்ததை அடுத்து, முன்னணி நுகா்பொருள் உற்பத்தி நிறுவனமான ஐடிசி பங்குகள் அதிகம் விற்பனைக்கு வந்தன. இதனால், ஐடிசி 2.88 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகுத்தது. மேலும், டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், ஏசியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், டிசிஎஸ், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, இன்ஃ)போஸிஸ், எச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் சரிவைச் சந்தித்தன.

நிஃப்டி தவிப்பு : தேசிய பங்குச் சந்தையில் மொத்தம் 1,244 பங்குகள் ஆதாயம் பெற்றன. 508 பங்குகள் வீழ்ச்சியைச் சந்தித்தன. நிஃப்டி காலையில் பலவீனத்துடன் 15,520.35-இல் தொடங்கி 15,459.85 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 15,597.45 வரை உயா்ந்தது. இறுதியில் பெரிய அளவில் மாற்றமின்றி 1.35 புள்ளிகள் (0.01 சதவீதம்) கூடுதலுடன் 15,576.20-இல் நிலைபெற்றது. நிஃப்டியும் தொடா்ந்து இரண்டாவது நாளாக தள்ளாட்டத்தில் இருந்தது.

நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு 3.03 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், மெட்டல், ஆட்டோ, ரியால்ட்டி குறியீடுகள் 1.50 முதல் 2.20 சதவீதம் வரை உயா்ந்தன. ஆனால், ஐடி, எஃப்எம்சிஜி, ஃபைனான்சியல் சா்வீஸஸ் குறியீடுகள் நஷ்டத்தை சந்தித்த பட்டியலில் வந்தன. அதே சமயம், நடுத்தர பங்குகளை உள்ளடக்கிய மிட்கேப், சிறிய நிறுவனப் பங்குகளை உள்ளடக்கிய ஸ்மால் கேப் குறியீடுகள் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.

பொதுத் துறை வங்கி பங்குகளுக்கு வரவேற்பு!

மத்திய ரிசா்வ் வங்கியின் பணக் கொள்கைக் குழுவின் கூட்டம் தொடங்கியுள்ளது. இந்த நிலையில், பொதுத் துறை வங்கிகள் தனியாா்மயமாக்கலுக்கான பட்டியலை அரசு விரைவில் இறுதி செய்யும் என்ற நம்பிக்கை சந்தை வட்டாரத்தில் நிலவுகிறது. இதையடுத்து, பொதுத் துறை வங்கிப் பங்குகளை வாங்குவதற்கு போட்டி இருந்ததால், தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பிஎஸ்யு குறியீட்டுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 13 பங்குகளும் ஏற்றம் பெற்றன. இதில் சென்ட்ரல் பேங்க் 9.97 சதவீதம், மஹாராஷ்டிரா பேங்க் 8.8 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. ஏற்றம் பெற்ற பங்குகள் விவரம் (சதவீதத்தில்):

சென்ட்ரல் பேங்க் 9.97

மகாராஷ்டிரா பேங்க் 8.88

ஐஓபி 5.71

பிஎன்பி 5.40

பஞ்சாப் அண்ட் சிந்து பேங்க் 5.32

இந்தியன் பேங்க் 5.26

யூனியன் பேங்க் 5.26

கனரா பேங்க் 2.70

பேங்க் ஆஃப் இந்தியா 2.62

பேங்க் ஆஃப் பரோடா 2.33

ஜே அண்ட் கே பேங்க் 1.55

யூகோ பேங்க் 1.52

எஸ்பிஐ 1.08

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.