பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

தள்ளாட்டத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 109 புள்ளிகள் சரிவு

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான

News image
Updated On :2 நவம்பர் 2021, 10:15 pm

இந்த வாரத்தின் இரண்டாவது வர்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ஏற்றம், இறக்கம் அதிகரித்து காணப்பட்டது. இதைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 109 புள்ளிகளை இழந்து 60,029-இல் நிலைபெற்றது.
 உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. வர்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் ஏற்ற, இறக்கமாகவே இருந்தது. மேலும், பேங்க் ஆஃப் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க மத்திய வங்கியான ஃபெடரல் ஆகியவை கரோனா தொகுப்பு நிதிகளை நிறுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகின்றன. இவற்றின் தாக்கமும் உலகளாவிய சந்தைகளில் காணப்பட்டது என பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மார்க்கெட் லீடர் ரிலையன்ஸ், டாடா ஸ்டீல், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை வெகுவாகக் குறைந்ததும் சந்தையின் சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
 சந்தை மதிப்பு ரூ.56 ஆயிரம் கோடி உயர்வு: பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,401 பங்குகளில் 1,961 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,293 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 147 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 184 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 27 பங்குகள் குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 361 பங்குகள் வெகுவாக உயர்ந்து உயர்ந்தபட்ச உறை நிலையையும், 186 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.56 ஆயிரம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.263.41 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளர்களின் எண்ணிக்கை 8,51,96,409-ஆக உயர்ந்துள்ளது.
 தள்ளாட்டம்: காலையில் உற்சாகத்துடன் 222.15 புள்ளிகள் கூடுதலுடன் 60,360.61-இல் தொடங்கி, 60,421.14 வரை உயர்ந்தது. பின்னர், 59,881.75 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 109.40 புள்ளிகளை (0.18 சதவீதம்) இழந்து 60,029.06-இல் நிலைபெற்றது. வர்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தை தள்ளாட்டத்தில் இருந்தது
 மாருதி சுஸுகி முன்னிலை:
 சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 14 பங்குகள் ஆதாயம் பெற்றன. 16 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 2.36 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டைட்டன், என்டிபிசி, எஸ்பிஐ, எல் அண்ட் டி ஆகியவை 1.20 முதல் 2 சதவீதம் வரை உயர்ந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஆட்டோ, ஹிந்துஸ்தான் யுனிலீவர், ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், டிசிஎஸ் உள்ளிட்டவையும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
 டாடா ஸ்டீல் கடும் சரிவு:
 அதேசமயம், பிரபல எஃகு உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 3.74 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக டெக் மஹிந்திரா, ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ், இன்டஸ்இண்ட் பேங்க், டாக்டர் ரெட்டீஸ் லேப், பவர் கிரிட், நெஸ்லே இந்தியா உள்ளிட்டவையும் 1 முதல் 2 .10 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மேலும், ஐடிசி, இன்ஃபோஸிஸ், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
 நிஃப்டி 41 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 1,158 பங்குகள் ஆதாயம் பெற்றன. 647 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 17,970.90-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,012.25 வரை உயர்ந்தது. பின்னர், 17,847.60 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 40.70 புள்ளிகளை (0.23 சதவீதம்) இழந்து 17,888.95-இல் நிலைபெற்றது.
 மெட்டல் குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி மெட்டல் குறியீடு 1.58 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், ஆயில் அண்ட் காஸ், ஹெல்த்கேர், பார்மா உள்ளிட்ட குறியீடுகளும் 0.50 முதல் 0.80 சதவீதம் சரிவைச் சந்தித்தன. அதேசமயம், நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 3.38 சதவீதம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.37 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, மீடியா, பிரைவேட் பேங்க் குறியீடுகள் 0.40 முதல் 1 சதவீதம் வரை உயர்ந்தன.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.