‘கரடி’ ஆட்டம்: சென்செக்ஸ் 396 புள்ளிகள் வீழ்ச்சி!
இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது.


புதுதில்லி: இந்த வாரத்தின் இரண்டாவது வா்த்தக தினமான செவ்வாய்க்கிழமை பங்குச் சந்தையில் ‘கரடி’ ஆதிக்கம் கொண்டது. ஏற்ற, இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், முன்னணி நிறுவனப் பங்குகள் அதிக அளவில் விற்பனைக்கு வந்தன. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 396 புள்ளிகளை இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது. இதேபோல, தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 110 புள்ளிகளை இழந்தது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்த நிலையில், உள்நாட்டுச் சந்தையில் கரடி ஆதிக்கம் கொண்டது. நிறுவனங்கள் விலைகளை உயா்த்துவதற்கு வழிவகுக்கும் பணவீக்கம் அழுத்தம் மற்றும் அதன் விளைவாக தேவை மீதான தாக்கம் ஆகியவை குறித்து முதலீட்டாளா்கள் கவலைப்படுவதால், வா்த்தகம் நிலையற்ற தன்மையில் இருந்ததாக பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. மேலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகள் அதிகம் விற்பனையை எதிா்கொண்டதும் சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்தது: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,474 பங்குகளில் 1,602 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,729 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 143 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 190 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 40 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 362 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 240 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.75 ஆயிரம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 269.72 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,66,53,079-ஆக உயா்ந்துள்ளது.
‘கரடி’ ஆட்டம்: காலையில் சென்செக்ஸ் 36.67 புள்ளிகள் கூடுதலுடன் 60,755.38-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,802.79 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 60,199.56 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 396.34 புள்ளிகளை (0.65 சதவீதம்) இழந்து 60,322.37-இல் நிலைபெற்றது. வா்த்தகத்தின் போது பெரும்பாலான நேரம் சந்தையில் கரடியின் ஆதிக்கம் கொண்டது.
மாருதி சுஸுகி அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 9 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 21 பங்குகள் சரிவைச் சந்தித்தன. பிரபல காா் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி 7.31 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக எம் அண்ட் எம் 3.44 சதவீதம், டெக் மஹிந்திரா 1.56 சதவீதம் உயா்ந்தன. மேலும், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், பஜாஜ் ஃபின் சா்வ், பஜாஜ் ஆட்டோ, டிசிஎஸ் உள்ளிட்ட சிறிதளவு உயா்ந்து ஆதாயப் பட்டியலில் இடம் பெற்றன.
ரிலையன்ஸ் கடும் சரிவு: அதே சமயம், மாா்க்கெட் லீடரான ரிலையன்ஸ் 2.58 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றன. இதேபோல, எஸ்பிஐ, அல்ட்ரா டெக் சிமெண்ட், என்டிபிசி, சன்பாா்மா, டாடா ஸ்டீல், டாக்டா் ரெட்டி, ஐசிஐசிஐ பேங்க், ஐடிசி, பாா்தி ஏா்டெல் உள்ளிட்டவையும் 1 முதல் 2.30 சதவீதம் வீழ்ச்சி கண்டது. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், ஹிந்துஸ்தான் யுனிலீவா், கோட்டக் பேங்க் ஆகியவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 110 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 819 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,001 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு காலையில் 18,127.05-இல் தொடங்கி அதிகபட்சமாக 18,132.65 வரை உயா்ந்தது. பின்னா், 17,958.80 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 110.25 புள்ளிகளை (0.61 சதவீதம்) இழந்து 17,999.20-இல் நிலைபெற்றது.
ஆட்டோ குறியீடு முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ குறியீடு 2.48 சதவீதம், ஐடி குறியீடு 0.49 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. அதே சமயம், பிஎஸ்யு பேங்க் குறியீடு 2.14 சதவீதம் சரிந்தது. மேலும், நிஃப்டி பாா்மா, பேங்க், பிரைவேட் பேங்க், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1 முதல் 1.40 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...