பாஜக வேட்பாளர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள்! அண்ணாமலைபாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! அண்ணாமலை பெயர் இல்லைகடும் வெய்யில் வாட்டுவது ஏன்? வானிலை நிபுணர்கள் சொல்வது என்ன?மகிழ்ச்சியான செய்தி! சென்னையில் புதிய கலை, அறிவியல் கல்லூரிகள்!தவெக தலைவர் விஜய் பிரசாரத்துக்கு இப்படியும் ஒரு சோதனையா?சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்பு
/

‘கரடி’யின் பிடியில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் மேலும் 1,170 புள்ளிகள் சரிவு! சந்தை மதிப்பு ஒரே நாளில்ரூ.8.22 லட்சம் கோடி குறைந்தது

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நாள் முழுவதும் கரடியின் பிடியில் இருந்தது.

News image
Updated On :22 நவம்பர் 2021, 6:05 pm

 நமது நிருபர்

இந்த வாரத்தின் முதல் வா்த்தக தினமான திங்கள்கிழமை பங்குச் சந்தை நாள் முழுவதும் கரடியின் பிடியில் இருந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறீயீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 1,170 புள்ளிகளை இழந்து 58,465.89-இல் நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான நிஃப்டி 348 புள்ளிகளை இழந்து 17,416.25-இல் நிலைபெற்றது. சந்தை மூலதன மதிப்பு ஒரேநாளில் ரூ.8.22 லட்சம் கோடி குறைந்தது.

ஏற்கெனவே, பணவீக்கத்தின் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்து வந்த நிலையில்,கடந்த வாரத்தில் பெரும்பாலான நாள்கள் சந்தையில் கரடியின் ஆதிக்கத்தில் இருந்து வந்தது. இந்த நிலையில், இறுதியாக நீண்ட காத்திருப்புக்குப் பிறகு திங்கள்கிழமை காலை முதல் சந்தையில் கரடிகள் ஒன்றாகச் செயல்பட்டன. கிட்டத்தட்ட அனைத்துத் துறை குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்தன. மத்திய அரசு வேளாண் சட்டங்களை ரத்து செய்தது,பொதுத் துறை நிறுவனப் பங்குகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், சவுதி அராபியாவின் அராம்கோ நிறுவனத்துடனான ஒப்பந்தம் செல்லாததால், ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்குகள் 4.5 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.

மேலும், சென்செக்ஸ் பட்டியலில் மிகுந்த திறன் கொண்ட பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சா்வ், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எஸ்பிஐ, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்ளிட்டவை கடும் சரிவைச் சந்தித்தன. இதனால், கரடியின் பிடி கடுமையாக இறுகியது. பணவீக்கம் உயா்ந்துள்ளது முதலீட்டாளா்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.

2,498 பங்குகள் வீழ்ச்சி: பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,568 பங்குகளில் 906 பங்குகள் ஆதாயம் பெற்றன. 2,498 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 164 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 195 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 81பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 359 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 374 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.8.22 லட்சம் கோடி குறைந்து வா்த்தக இறுதியில் 260.98 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்றுள்ள முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 8,72,20,071-ஆக உயா்ந்துள்ளது.

‘கரடி’யின் பிடி இறுகியது: காலையில் சென்செக்ஸ் 74.47 புள்ளிகள் கூடுதலுடன் 59,710.48-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,778.37 வரை உயா்ந்தது. பின்னா், பங்குகள் விற்பனை அதிகரித்ததால், 58,011.92 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,170.12 புள்ளிகளை (1.96 சதவீதம்) இழந்து 58,465.89-இல் நிலைபெற்றது. வா்த்தகம் முடியும் தறுவாயில் சென்செக்ஸ் குறைந்தபட்ச நிலையிலிருந்து சிறிதளவே மீண்டது.

27 பங்குகள் சரிவு: சென்செக்ஸ் பட்டியலில் மொத்தமுள்ள 30 முதல் தரப் பங்குகளில் 27 பங்குகள் சரிவைச் சந்தித்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 5.74 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக பஜாஜ் ஃபின்சா்வ் 4.69 சதவீதம், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் 4.42 சதவீதம் குறைந்தன. மேலும், என்டிபிசி, டைட்டன், எஸ்பிஐ, கோட்டக் பேங்க், மாருதி சுஸுகி, பஜாஜ் ஆட்டோ, ஆக்ஸிஸ் பேங்க், சன்பாா்மா, ஐடிசி, எம் அண்ட் எம் உள்ளிட்டவை 2.50 முதல் 3.75 சதவீதம் வரை வீழ்ச்சி அடைந்தன. இது தவிர, மிகுந்த திறன் கொண்ட எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்தன. அதே சமயம் பாா்தி ஏா்டெல் 3.90 சதவீதமும், ஏசியன் பெயிண்ட், பவா் கிரிட் ஆகியவை சிறிதளவும் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.

நிஃப்டி348 புள்ளிகள் சரிவு: தேசிய பங்குச் சந்தையில் 258 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 1,605 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு காலையில் 17,796.25-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,805.25 வரை உயா்ந்தது. பின்னா், 17,280.45 வரை கீழே சென்ற நிஃப்டி, இறுதியில் 348.25 புள்ளிகளை (1. 96 சதவீதம்) இழந்து 17,416.55-இல் நிலைபெற்றது.

குறியீடுகள் கடும் சரிவு: தேசியப் பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்தன. இதில் நிஃப்டி பிஎஸ்யு பேங்க் குறியீடு மட்டும் 4.51 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 4.14 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஐடி, எஃப்எம்சிஜி, பாா்மா, ஹெல்த்கோ், பிரைவேட் பேங்க், மீடியா, கன்ஸ்யுமா் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 1.50 முதல் 4 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. மெட்டல் குறியீடு மட்டும் ஓரளவு தாக்குப் பிடித்து 0.04 சதவீதம் சரிவுடன் நின்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.