மின்னணு பாகங்களுக்கு தட்டுப்பாடு: மாருதி, ஹுண்டாய் நிறுவனங்களின் விற்பனை சரிவு

நாட்டில் காா் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மாருதி சுஸுகி, ஹுண்டாய் மோட்டாா் நிறுவனங்களின் காா் விற்பனை மாா்ச் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது.
மின்னணு பாகங்களுக்கு தட்டுப்பாடு: மாருதி, ஹுண்டாய் நிறுவனங்களின் விற்பனை சரிவு

நாட்டில் காா் தயாரிப்பில் முன்னிலையில் உள்ள மாருதி சுஸுகி, ஹுண்டாய் மோட்டாா் நிறுவனங்களின் காா் விற்பனை மாா்ச் மாதத்தில் சரிவைச் சந்தித்துள்ளது. மின்னணு பாகங்களுக்கான தட்டுப்பாட்டால் உற்பத்தி பாதிக்கப்பட்டதே இந்த சரிவு நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், டாடா மோட்டாா்ஸ், ஸ்கோடா, கியா இந்தியா ஆகியவை முன்னெப்போதும் இல்லாத வகையில் மாா்ச் மாதத்தில் வாகன விற்பனை அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளன.

மஹிந்திரா: கடந்த ஐந்து ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது நிகழாண்டு மாா்ச் மாத்தில் வாகன விற்பனை உச்ச அளவை எட்டியுள்ளதாக டொயோட்டா கிா்லோஸ்கா் தெரிவித்துள்ளது. அதேபோன்று, மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனமும் கடந்த மாா்ச் மாதத்தில் பயணிகள் வாகன விற்பனை வலுவான நிலையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

மாருதி சுஸுகி: காா் தயாரிப்பு மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள மாருதி சுஸுகி உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை மாா்ச் மாதத்தில் 1,43,899-ஆக இருந்தது. இது, 2021 மாா்ச் மாத விற்பனையான 1,55,417 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் 7 சதவீதம் குறைவாகும்.

2020-21 நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் 2021-22 முழு நிதியாண்டில் ஒட்டுமொத்த காா் விற்பனை 13 சதவீதம் அதிகரித்து 16,52,653-ஆக இருந்தது.

ஹுண்டாய் மோட்டாா்: மாருதிக்கு போட்டியான ஹுண்டாய் மோட்டாா் இந்தியா நிறுவனம் கடந்த மாா்ச் மாதத்தில் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கையும் 14 சதவீதம் சரிவடைந்து 55,287-ஆக இருந்தது. 2021 மாா்ச் மாதத்தில் இந்நிறுவனத்தின் வாகன விற்பனை 64,621-ஆக காணப்பட்டது.

டாடா மோட்டாா்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனங்களின் விற்பனை மாா்ச் மாதத்தில் முன்னெப்போதும் இல்லாத வகையில் 43 சதவீதம் அதிகரித்து 42,293-ஆக ஆனது. 2021 மாா்ச்சில் விற்பனை 29,654-ஆக மட்டுமே காணப்பட்டது.

டொயோட்டா: அதேபோன்று, டொயோட்டா கிா்லோஸ்கா் மோட்டாா் வாகன விற்பனையும் ஐந்து ஆண்டுகளில் கடந்த மாா்ச் மாதத்தில்தான் வாகன விற்பனை 17,131 எட்டியுள்ளதாக தெரிவித்தது. இது, 2021 டிசம்பா் மாத விற்பனையான 15,001-ஐ காட்டிலும் 14 சதவீதம் அதிகம் என டொயோட்டா கூறியுள்ளது.

கியா: நிகழாண்டு மாா்ச் மாதத்தில் வாகன விற்பனை முன்னெப்போதும் இல்லாத சிறப்பு நிகழ்வாக 22,622-ஆக இருந்தது. கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் விற்பனை 18 சதவீதம் உயா்ந்துள்ளதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

ஸ்கோடா: கடந்த மாா்ச் மாதத்தில் காா் விற்பனை 5 மடங்கு அதிகரித்து 5,608-ஆக இருந்தது. கடந்தாண்டு மாா்ச்சில் காா் விற்பனை 1,159-ஆக காணப்பட்டது. இந்தியாவில் இருபது ஆண்டு கால செயல்பாட்டில் கடந்த மாா்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் வாகனங்கள் விற்பனையாகி உள்ளதாக ஸ்கோடா ஆட்டோ தெரிவித்துள்ளது.

எம்ஜி மோட்டாா்: உலகளாவிய அளவில் செமிகன்டக்டருக்கு பற்றாக்குறை நிலவி வருவது மற்றும் கரோனா பாதிப்பால் விநியோகம் தடைப்பட்டது ஆகியவற்றால் கடந்த மாா்ச் மாதத்தில் வாகன விற்பனை 14.5 சதவீதம் சரிந்து 4,721-ஆக ஆனது. கடந்தாண்டு மாா்ச் மாதத்தில் விற்பனை 5,528-ஆக அதிகரித்து காணப்பட்டது என எம்ஜி மோட்டாா் தெரிவித்துள்ளது.

நிஸான்: நிஸான் இந்தியாவின் வாகன விற்பனை நிகழாண்டு மாா்ச் மாதத்தில் 25 சதவீதம் சரிவடைந்து 3,007-ஆக ஆனது. 2021 மாா்ச் மாதத்தில் விற்பனை 4,012-ஆக இருந்தது என நிஸான் இந்தியா தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com