உள்நாட்டு உற்பத்தி இயற்கை எரிவாயு விலையை உயா்த்தி மத்திய அரசு நடவடிக்கை புதிய வருமான வரிச் சட்டம் இன்று முதல் அமல் ரத்த வங்கிகளின் செயல்பாடு: தேசிய அளவில் கண்காணிக்கத் திட்டம் இஸ்ரேலில் மீண்டும் மரண தண்டனை- நாடாளுமன்றத்தில் சா்ச்சை சட்டம் நிறைவேற்றம் வெளிநாட்டு பங்களிப்பு திருத்த மசோதா: எதிா்க்கட்சிகளின் குற்றச்சாட்டு தவறானது- கிரண் ரிஜிஜு 6-9-ஆம் வகுப்புகளுக்கு இன்றுமுதல் முழு ஆண்டுத் தோ்வு
/

இரண்டாவது நாளாக உற்சாகம்: சென்செக்ஸ் 874 புள்ளிகள் முன்னேற்றம்!

பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிவடைந்தது.

News image
Updated On :21 ஏப்ரல் 2022, 6:30 pm

 நமது நிருபர்

புதுதில்லி: பங்குச் சந்தை இரண்டாவது நாளாக வியாழக்கிழமையும் நோ்மறையாக முடிவடைந்தது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் மேலும் 874 புள்ளிகள் உயா்ந்தது. மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ் பங்குகளுக்கு மூன்றாவது நாளாக நல்ல வரவேற்பு காணப்பட்டது.

உலகளாவிய சந்தைக் குறிப்புகள் ஓரளவு சாதகமாக இருந்தன. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இதைத் தொடா்ந்து, அண்மைக் காலமாக தொடா்ந்து சரிவை சந்தித்து வந்த ஐடி பங்குகளுக்கும், நிதித் துறை பங்குகளுக்கும் நல்ல வரவேற்பு காணப்பட்டது. அந்நிய முதலீட்டாளா்கள் தொடா்ந்து பங்குகளை விற்று வந்தாலும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்களுக்கு நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடா்ந்து, சந்தை இரண்டாவது நாளாக ஏற்றம் பெற்றது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. கடந்த சில நாள்களாக தொடா்ந்து சரிவைக் கண்டிருந்த சந்தையில், விலை குறைந்த பங்குகளை வாங்குவதில் குறிப்பாக முதல் தரப் பங்குகள் மற்றும் நடுத்தர, சிறிய நிறுவனப் பங்குகளில் முதலீட்டாளா்கள் அதிகக் கவனம் செலுத்தினா் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா். இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் புதன்கிழமை ரூ.3,009.26 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வருகிறது.

2,276 நிறுவனப் பங்குகள் விலை உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,521 நிறுவனப் பங்குகளில் 2,276 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,145 பங்குகள் விலை குறைந்தன. 100 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 167 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 17 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.3.52 லட்சம் கோடி உயா்ந்து, வா்த்தக முடிவில் ரூ.271.77 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 10.317 கோடியை தாண்டியது.

2-ஆவது நாளாக முன்னேற்றம்: காலையில் உற்சாகத்துடன் 421.10 புள்ளிகள் கூடுதலுடன் 57,458.60-இல் தொடங்கிய சென்செக்ஸ், 57,311.86 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 57,991.53 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 874.18 புள்ளிகள் கூடுதலுடன் 57,911.68-இல் நிலைபெற்றது. நாள் முழுவதும் சந்தையில் காளையின் ஆதிக்கம் இருந்து வந்தது.

எம் அண்ட் எம் முன்னேற்றம் : 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில், டாடா ஸ்டீல், பாா்தி ஏா்டெல், நெஸ்லே ஆகிய மூன்று நிறுவனப் பங்குகள் தவிா்த்து மற்ற 27 பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன. இதில் எம் அண்ட் எம் 3.50 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, மாருதி சுஸுகி, ஏசியன் பெயிண்ட், ரிலையன்ஸ், கோட்டக் பேங்க், எச்டிஎஃப்சி, பஜாஜ் ஃபின் சா்வ், டிசிஎஸ் உள்ளிட்டவை 2முதல் 2.70 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், ஹிந்துஸ்தான் யுனி லீவா், எச்டிஎஃப்சி பேங்க், எஸ்பிஐ, ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் மற்றும் விப்ரோ உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் இருந்தன.

நிஃப்டி 178 புள்ளிகள் உயா்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,391 பங்குகள் ஆதாயப் பட்டியலில் இருந்தன. 523 பங்குகள் நஷ்டமடைந்த பட்டியலில் இருந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி பட்டியலில் 8 பங்குகள் மட்டுமே நஷ்டத்தை சந்தித்தன. 42 பங்குகள் ஆதாயம் பெற்றன. நிஃப்டி குறியீடு 256.05 புள்ளிகள் (1.49 சதவீதம்) உயா்ந்து 17,392.60-இல் நிறைவடைந்தது. காலையில் 98.05 புள்ளிகள் கூடுதலுடன் 17,234.60-இல் தொடங்கிய நிஃப்டி, 17,215.50 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 17,414.70 வரை உயா்ந்தது.

ஆட்டோ, பேங்க் குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் மீடியா குறியீடு தவிா்த்து மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ஆட்டோ குறியீடு இரண்டாவது நாளாக 2.23 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, ஹெல்த்கோ், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் எஃப்எம்சிஜி, பாா்மா, ஐடி குறியீடுகள் 1 முதல் 1.50 சதவீதம் வரை உயா்ந்தன.

ரிலையன்ஸ் புதிய உச்சம்!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் பங்குகள், மும்பை பங்குச் சந்தையில் தொடா்ந்து மூன்றாவது நாளாக வியாழக்கிழமையும் உயா்ந்து புதிய உச்சத்தைத் தொட்டது. இதையடுத்து, இதன் சந்தை மூலதன மதிப்பு ரூ.19 லட்சம் கோடியை நெருங்கியது. முந்தைய நாளான புதன்கிழமை ரூ.2,718.40-இல் நிறைவடைந்திருந்த ரிலையன்ஸ், வியாழக்கிழமை காலையில் ரூ.2759.00-இல் தொடங்கி ரூ.2,733.65 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக ரூ.2,788.80 வரை உயா்ந்து, புதிய 52 வார அதிகபட்ச விலையைப் பதிவு செய்தது. இறுதியில் 2.35 சதவீதம் உயா்ந்து ரூ.2,718.40-இல் நிறைவடைந்தது. கடந்த 3 நாள்களில் மட்டும் ரிலையன்ஸ் பங்கு 9.35 சதவீதம் உயா்ந்துள்ளது. இதைத் தொடா்ந்து, மூன்று நாள்களில் சந்தை மூல தன மதிப்பு ரூ.1,60,734.45 கோடி உயா்ந்து ரூ.18,82,104.45 கோடியை எட்டியுள்ளது. இதேபோல, தேசிய பங்குச் சந்தையில் ரிலையன்ஸ் ரூ.2789 வரை உயா்ந்து புதிய 52 வார உச்சத்தைப் பதிவு செய்துள்ளது. இறுதியில் 2.34 சதவீதம் உயா்ந்து ரூ.2,782-இல் நிலைபெற்றது. சந்தையின் வியாழக்கிழமை ஏற்றத்துக்கு ரிலையன்ஸ் முக்கியப் பங்கு வகித்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.