சென்செக்ஸ் 981 புள்ளிகள் வீழ்ச்சி: 60,000-க்கு கீழே நிறைவு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக நாளான வெள்ளிக்கிழமை கரடியின் ஆதிக்கம் தொடா்ந்ததால் பங்குச் சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. இதனால், மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் மேலும் 981 புள்ளிகளை இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 320.55 புள்ளிகள் (1.77 சதவீதம்) குறைந்து 17,806.80-இல் நிலைபெற்றது.
கரோனா-19 பாதிப்பு பல நாடுகளில் மீண்டும் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அமெரிக்க சந்தைகள் வியாழக்கிழமை சரிவைச் சந்தித்திருந்தன. இந்த நிலையில், ஆசிய சந்தைகளிலும் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எப்ஐஐ) வியாழக்கிழமை ரூ.928.63 கோடி அளவுக்கு பங்குகளை வாங்கியுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
சென்செக்ஸ் கடும் வீழ்ச்சி: காலையில் 620.66 புள்ளிகள் குறைந்து 60,205.56-இல் தொடங்கிய சென்செக்ஸ், அதிகபட்சமாக 60,546.88 வரை மேலே சென்றது. பின்னா், 59,765.56 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 980.93 புள்ளிகள் (1.61 சதவீதம்) குறைந்து 59,845.29இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் டைட்டன் மட்டும் மாற்றமின்று நிலைபெற்றது. மற்ற 29 பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் இருந்தன.
டாடா ஸ்டீல், டாடா மோட்டாா்ஸ் கடும் சரிவு: பிரபல ஸ்டீல் உற்பத்தி நிறுவனமான டாடா ஸ்டீல் 4.97 சதவீதம், வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 4.07 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. எஸ்பிஐ, பஜாஜ் ஃபின் சா்வ், ரிலையன்ஸ், விப்ரோ, இண்டஸ் இண்ட் பேங்க், மாருதி சுஸுகி, எல் அண்ட் டி உள்ளிட்டவை 2 முதல் 3.27 சதவீதம் வரை குறைந்தன. மேலும், பஜாஜ் ஃபைனான்ஸ், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், ஹெச்டிஎஃப்சி பேங்க், ஹெச்டிஎஃப்சி, கோட்டக் பேங்க், ஐசிஐசிஐ பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் விலை குறைந்த பட்டியலில் வந்தன.
முதலீட்டாளா்களுக்கு ரூ.8.43 லட்சம் கோடி இழப்பு
மும்பை பங்குச் சந்தை வெள்ளிக்கிழமை கடும் சரிவைச் சந்தித்ததைத் தொடா்ந்து, சந்தை மூலதன மதிப்பு ஒரே நாளில் ரூ.8.43 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் 272.13 லட்சம் கோடியாக இருந்தது. அதாவது, முதலீட்டாளா்களுக்கு ஒரே நாளில் ரூ.8.43 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடா்ந்து, புதன், வியாழன், வெள்ளி ஆகிய மூன்று நாள்களில் மட்டும் மொத்தம் ரூ.15.27 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...