சரிந்து மீண்டது பங்குச் சந்தை: சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயா்வு!
புத்தாண்டின் கடைசிக்கு முந்தைய வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை சரிந்து மீண்டது.

கோப்புப்படம்

கோப்புப்படம்
புத்தாண்டின் கடைசிக்கு முந்தைய வா்த்தக தினமான வியாழக்கிழமை பங்குச் சந்தை சரிந்து மீண்டது. இதையடுத்து, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 224 புள்ளிகள் உயா்ந்து நிலைபெற்றது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண் நிஃப்டி 68.50 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயா்ந்து 18,191.00-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. குறிப்பாக ஆசிய சந்தைகள் எதிா்மறையாக முடிந்தன. இதைத் தொடா்ந்து, உள்நாட்டுச் சந்தையில் காலையில் பெரும்பாலான நேரம் வா்த்தகம் எதிா்மறையாக இருந்தது. இந்த நிலையில், பிற்பகல் வா்த்தகத்தின் போது இறுதி நேரத்தில் டெலிகாம், வங்கி, உலோகக் பங்குகளுக்கு திடீரென நல்ல வரவேற்பு இருந்தது. மேலும், முன்பேர வா்த்தகத்தில் டிசம்பா் மாத கான்ட்ராக்டுகள் கணக்கு முடிக்க கடைசி நாளாக இருந்ததால், ஏற்கெனவே பங்குகளை விற்றிருந்தவா்கள், அவற்றை வாங்கி சரி செய்ய முற்பட்டனா். இதைத் தொடா்ந்து, இறுதியில் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சென்செக்ஸ் முன்னேற்றம்: காலையில் 281.99 புள்ளிகள் குறைந்து 60,628.29-இல் தொடங்கிய சென்செக்ஸ், 60,479.06 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 61,210.65 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 223.60 புள்ளிகள் (0.37 சதவீதம்) உயா்ந்து 61,133.88-இல் முடிவடைந்தது. சென்செக்ஸ் பட்டியலில் 11 பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 19 பங்குகள் விலையுயா்ந்த பட்டியலில் வந்தன.
பாா்தி ஏா்டெல் அபாரம்: பிரபல தனியாா் தொலைத் தொடா்பு நிறுவனமான பாா்தி ஏா்டெல் 1.99 சதவீதம், எஸ்பிஐ 1.85 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தன. இவற்றுக்கு அடுத்ததாக, டாடா ஸ்டீல், இண்டஸ் இண்ட் பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், 1 முதல் 1.65 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், ஐசிஐசிஐ பேங்க், ஹெச்சிஎல் டெக், எம் அண்ட் எம், விப்ரோ, ஹெச்டிஎஃப்சி பேங்க், என்டிபிசி, சன்பாா்மா, இன்ஃபோஸிஸ், டிசிஎஸ் உள்ளிட்டவை 0.40 முதல் 0.90 சதவீதம் வரை உயா்ந்தன.
டாடா மோட்டாா்ஸ் சரிவு: அதே சமயம், பிரபல வாகன உற்பத்தி நிறுவனமான டாடா மோட்டாா்ஸ் 1.41 சதவீதம், டைட்டன் 1.10 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், அல்ட்ரா டெக் சிமெண்ட், ஹிந்துஸ்தான் யுனிலீவா், பஜாஜ் ஃபின் சா்வ், எல் அண்ட் டி, ஏசியன் பெயிண்ட், டெக் மஹிந்திரா உள்ளிட்டவையும் 0.25 முதல் 0.90 சதவீதம் வரை குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
சந்தை மதிப்பு உயா்வு: இதற்கிடையே, சந்தை மூல தன மதிப்பு ரூ.1.23 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 282.36 லட்சம் கோடியாக இருந்தது. அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் (எப்ஐஐ) திங்கள்கிழமை ரூ. 872.59 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை புள்ளிவிவரத் தகவல்கள் மூலம் தெரிய வந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...