இரண்டு நாள்கள் கடும் சரிவை சந்தித்த பங்குச் சந்தை செவ்வாய்க்கிழமை திடீர் உற்சாகம் கண்டது. உக்ரைன் எல்லைப் பகுதியில் உள்ள மாவட்டங்களில் இருந்து ரஷியா தனது துருப்புக்கள் சிலவற்றை வாபஸ் பெற்றதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து, பங்குகளை வாங்குவதற்கு போட்டி அதிகரித்தது.
அதையடுத்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.08 சதவீதம் உயர்ந்தது. அதேபோன்று, தேசியப் பங்குச் சந்தையில் 50 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 3.03 சதவீதம் அதிகரித்தது.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி பேங்க், ஆட்டோ, ஃபைனான்சியல் சர்வீஸஸ், எஃப்எம்சிஜி, ஐடி, மீடியா, மெட்டல், பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ரியால்ட்டி, கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2 முதல் 4 சதவீதம் வரை உயர்ந்தன.
இந்த வாரத்தின் தொடக்க வர்த்தக தினமான திங்கள்கிழமை சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் ஒரே நாளில் கடந்த 10 மாதங்களில் இல்லாத வகையில் 3 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வர்த்தககத்தில் பங்குச் சந்தை கிட்டத்தட்ட சரிவிலிருந்து முழுமையாக மீண்டதாக தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சர்வதேச பதற்றம் தணிவு
ரஷியாவிற்கும், உக்ரைனுக்கும் இடையேயான பதற்றம் தணிந்து வருகிறது என்ற நம்பிக்கையாலும், கச்சா எண்ணெய் விலை குறைந்ததாலும் உலக அளவில் பெரும்பாலான சந்தைகள் ஏற்றம் பெற்றன. அவற்றின் தாக்கம் உள்நாட்டுச் சந்தைகளிலும் எதிரொலித்தது என ஜியோஜித் ஃபைனான்சியல் சர்வீசஸின் ஆராய்ச்சிப் பிரிவின் தலைவர் வினோத் நாயர் கூறினார்.
ரஷியா துருப்புகள் சிலவற்றை வாபஸ் பெற்றதாக வெளியான செய்தியால் காலையில் சந்தை உயர்வுடன் தொடங்கியது. இருந்தாலும், தொடக்கத்தில் சில மணி நேரம் நிலையற்றதாக இருந்தது. ஆனால், பிற்பகல் வர்த்தகத்தின் போது முதலீட்டாளர்கள் உற்சாகமடைந்ததால் சென்செக்ஸ், நிஃப்டி ஆகிய இரண்டு குறியீடுகளும் திங்கள்கிழமை இழந்த புள்ளிகளை மீட்டெடுத்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நாள் வர்த்தகத்தில் சந்தை மூலதன மதிப்பு ரூ.12.38 லட்சம் கோடி குறைந்து ரூ.255.43 லட்சம் கோடியாக இருந்தது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததால், ஒரே நாளில் சந்தை மூலதன மதிப்பு ரூ.6.37 லட்சம் கோடி உயர்ந்து ரூ.261.80 கோடியாக முன்னேற்றம் கண்டது.
2,048 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு
மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,464 நிறுவனப் பங்குகளில் 1,330 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,048 பங்குகள் ஆதாயம் பெற்றன. 86 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 109 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 106 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன.
காளை பாய்ச்சல்
சென்செக்ஸ் காலையில் 325.72 புள்ளிகள் கூடுதலுடன் 56,731.56-இல் தொடங்கி 56,438.47 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 58,211.38 வரை உயர்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,736.21 புள்ளிகள் கூடுதலுடன் 58,142.05-இல் நிலைபெற்றது. சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பஜாஜ் ஃபைனான்ஸ் 5.13 சதவீதம் வரை உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. எஸ்பிஐ, பஜாஜ் ஃபின்சர்வ், எல் அண்ட் டி, டைட்டன், விப்ரோ, ஏஷியன் பெயிண்ட், கோட்டக் பேங்க், எம் அண்ட் எம், டெக் மஹிந்திரா, பார்தி ஏர்டெல், ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், இன்டஸ்இண்ட் பேங்க், மாருதி சுஸýகி, எச்டிஎஃப்சி பேங்க், ஆக்ஸிஸ் பேங்க், ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை 3 முதல் 4.50 சதவீதம் வரை உயர்ந்தன.
மேலும், ஹிந்துஸ்தான் யுனிலீவர், டிசிஎஸ், டாக்டர் ரெட்டீஸ், ஹெச்சிஎல் டெக், எச்டிஎஃப்சி, டாடா ஸ்டீல் உள்ளிட்டவையும் கணிசமாக உயர்ந்து ஆதாயப் பட்டியலில் வந்தன.
தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி குறியீட்டெண் 509.65 புள்ளிகள் அதிகரித்து 17,352.45 புள்ளிகளில் நிலைகொண்டது.
நிபுணர்கள் கூறுவது என்ன?
தேசிய பங்குச் சந்தைக் குறியீடான நிஃப்டி 16,800 புள்ளிகளில் நல்ல ஆதரவைக் கொண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் 17,500 புள்ளிகளில் கடும் இடர்ப்பாட்டைக் கொண்டுள்ளதாகவும் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதேபோல, பேங்க் நிஃப்டி 37,300 புள்ளிகளில் ஆதரவும், 39,000 புள்ளிகளில் கடும் இடர்பாட்டையும் கொண்டுள்ளது.
தொழில்நுட்ப ரீதியாகப் பார்க்கும் போது, நிஃப்டி 17,200 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் பட்சத்தில் மேலே செல்ல அதிக வாய்ப்பு உள்ளது. அப்போது, 17,450, 17,550 புள்ளிகளில் கடும் இடர்ப்பாட்டைச் சந்திக்கும். அதேசமயம், 17,200 புள்ளிகளுக்கு கீழே வர்த்தகமாகும் பட்சத்தில் உடனடியாக 17,100-17,050 வரை கீழே செல்ல அதிக வாய்ப்பும் உண்டு என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 75.32
அந்நியச் செலாவணி சந்தையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தில் அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 28 காசுகள் அதிகரித்து 75.32-இல் நிலைத்தது. இதையடுத்து, 5 நாள் தொடர் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
கச்சா எண்ணெய் 93.82 டாலர்
சர்வதேச முன்பேர சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் 93.82 டாலருக்கு வர்த்தகம் ஆனதாக சந்தை வட்டாரத்தினர் தெரிவித்தனர்.