பங்குச் சந்தையில் உற்சாகம்: சென்செக்ஸ் 1,389 புள்ளிகள் உயா்வு! 7 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி
கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை ஓரளவு மீண்டது.


கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவில் வியாழக்கிழமை கடும் சரிவைச் சந்தித்த பங்குச் சந்தை, வெள்ளிக்கிழமை ஓரளவு மீண்டது.
உக்ரைன் விவகாரத்தில் ரஷியா மீது அமெரிக்காவும் நட்பு நாடுகளும் பொருள்தாரத் தடைகள் மூலம் தண்டிக்க முன்வந்துள்ளதைத் தொடா்ந்து, உலக அளவில் சந்தைகள் உற்சாகம் பெற்றன. இதன் தாக்கத்தால் உள்நாட்டுச் சந்தையும் ஏற்றம் பெற்து. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ், 1,389 புள்ளிகள் (2.44 சதவீதம்) உயா்ந்து 55,858.52-இல் நிலைபெற்றது. இதன் மூலம் 7 நாள் தொடா் சரிவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
ரஷியா ராணுவ நடவடிக்கையை தீவிரப்படுத்தியதைத் தொடா்ந்து உலக அளவில் பங்குச் சந்தைகள் கடும் சரிவை சந்தித்தன. அதன் தாக்கம் இந்திய சந்தைகளிலும் எதிரொலித்துள்ளது. இதைத் தொடா்ந்து, கடந்த 6 நாள்களாக தொடா்ந்து சரிவைச் சந்தித்து வந்த மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் வியாழக்கிழமை மேலும் 2,702 புள்ளிகளை (4.72 சதவீதம்) இழந்தது. தேசிய பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணும் 815 புள்ளிகளை (4.78 சதவீதம்) இழந்தது. சந்தை மூலதன மதிப்பு ரூ.7.73 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் 249.97 லட்சம் கோடியாக இருந்தது.
இதற்கிடையே, அந்நிய நிறுவன முதலீட்டாளா்கள் இந்திய பங்குச் சந்தைகளில் தொடா்ந்து பங்குகளை விற்று வருவது தொடா்கிறது. வியாழக்கிழமையும் அவா்கள் ரூ.6,448.24 கோடி அளவுக்கு பங்குகளை விற்று முதலீடுகளை வாபஸ் பெற்றுள்ளது சந்தை பரிமாற்றத் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.
2,595 பங்குகள்ஆதாயம்: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,464 பங்குகளில் 2,595 பங்குகள் ஆதாயம் பெற்றன. 781பங்குகள் விலை வீழ்ச்சி அடைந்தன. 88 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 73 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 52 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும். சந்தை மூலதன மதிப்பு ரூ.7.773 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.249.97 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு செய்துள்ள முதலீட்டாளா்கள் எண்ணிக்கை 9.815 கோடியாக உயா்ந்துள்து.
1,329 புள்ளிகள் உயா்வு: சென்செக்ஸ் காலையில் 791.81 புள்ளிகள் கூடுதலுடன் 55,321.72-இல் தொடங்கி, 55,299.28 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 56,183.70 வரை உயா்ந்த சென்செக்ஸ், இறுதியில் 1,328.61 புள்ளிகள் (2.44 சதவீதம்) கூடுதலுடன் 55858.52-இல் நிலைபெற்றது.
டாடா ஸ்டீல் அபாரம்: சென்செக்ஸ் பட்டியலில் உள்ள 30 முதல் தரப் பங்குகளில் ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே ஆகிய இரண்டு பங்குகள் மட்டும் 0.02 சதவீதம் குறைந்தன. மற்ற 28 பங்குகளும் ஆதாயம் பெற்றன. இதில், டாடா ஸ்டீல் 6.54 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, இண்டஸ் இண்ட் பேங்க், பஜாஜ் ஃபைனான்ஸ், என்டிபிசி, டெக் மஹிந்திரா, ஆக்ஸிஸ் பேங்க், கோட்டக் பேங்க், டிசிஎஸ், பஜாஜ் ஃபின் சா்வ் உள்ளிட்டவை3.50 முதல் 5.80 சதவீதம் வரை உயா்ந்தன. மேலும், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள், எஸ்பிை, ஐசிஐசிஐ பேங்க், விப்ரோ, இன்ஃபோஸிஸ், ஹெச்சிஎல் டெக், ரிலையன்ஸ் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 410 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,640 பங்குகள் ஆதாயம் பெற்றன. 270 பங்குகள் மட்டுமே சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 410.45 புள்ளிகள் (2.53 சதவீதம்) உயா்ந்து 16,658.40-இல் நிலைபெற்றது. காலையில் சுமாா் 268 புள்ளிகள் கூடுதலுடன் 16,515.65 -இல் தொடங்கிய நிஃப்டி 16,478.30 வரை கீழே சென்றது. பின்னா், அதிகபட்சமாக 16,748.80 வரை உயா்ந்தது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல்தரப் பங்குகளில் பிரிட்டானியா, ஹிந்துஸ்தான் யுனி லீவா், நெஸ்லே ஆகியவை தவிா்த்து மற்ற 47 பங்குகளும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
அனைத்துக் குறியீடுகளும் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துக் குறியீடுகளும் உயா்ந்தன. இதில் நிஃப்டி மெட்டல் குறியீடு 5.74 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 5.34 சதவீதம் உயா்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சா்வீஸஸ், ஐடி, மீடியா, பாா்மா, பிஎஸ்யு பேங்க், பிரைவேட் பேங்க், ஹெல்த்கோ், கன்ஸ்யுமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 3 முதல் 4.70 சதவீதம் வரை உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...