சென்செக்ஸ் 621 புள்ளிகள் வீழ்ச்சி! 4 நாள் ஏற்றத்துக்கு முற்றுப்புள்ளி
பங்குச் சந்தையில் வியாழக்கிழமை திடீா் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 621 புள்ளிகளை இழந்து 59,601.84-இல் நிலைபெற்றது.


புதுதில்லி: பங்குச் சந்தையில் வியாழக்கிழமை திடீா் சரிவு ஏற்பட்டது. இதைத் தொடா்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 621 புள்ளிகளை இழந்து 59,601.84-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் பலவீனமாக இருந்தன. அமெரிக்க மத்திய வங்கியான் ஃபெடரல், வங்கி வட்டி விகித்தத்தை உயா்த்தப் போவதாகத செய்திகள் வெளியாகின. இதன் தாக்கம் உலகளவில் பங்குச் சந்தைகளில் பிரதிபலித்தது. குறிப்பாக ஆசிய சந்தைகள் சரிவுடன் தொடங்கின. இதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது. இருப்பினும், பிற்பகல் வா்த்தகத்தில் சிறிதளவு சந்தை மீட்சி கண்டது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன. குறிப்பாக மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனங்களான இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டெக் மஹிந்திரா, எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனங்கள் உள்பட முன்னணி பங்குகள் வெகுவாகக் குறைந்ததே சந்தை சரிவுக்கு முக்கியக் காரணம் என்று வா்த்தகா்கள் தெரிவித்தனா்.
சந்தை மதிப்பு ரூ.1.30 லட்சம் கோடி வீழ்ச்சி: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,472 பங்குகளில் 1,401 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 1,981 பங்குகள் ஆதாயம் பெற்றன. 90 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 421 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 11 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 677 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 165 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.30 லட்சம் கோடி குறைந்து வா்த்தக முடிவில் ரூ.271.15 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.258 கோடியாக உயா்ந்துள்ளது.
4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி: காலையில் சென்செக்ஸ் 491.40 புள்ளிகள் குறைந்து 59,731.75-இல் தொடங்கி, 59,781.86 வரை உயா்ந்தது. பின்னா் 59,290.58 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 621.31 புள்ளிகளை (1.03 சதவீதம்) இழந்து 59,601.84-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 932.57 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், பிற்பகலில் ஓரளவு மீண்டது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 23 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 7 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன. இதைத் தொடா்ந்து 4 நாள் எழுச்சிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்டஸ் இண்ட் பேங்க் முன்னேற்றம்: பிரபல தனியாா் வங்கியான இண்ட்ஸ் இண்ட் பேங்க் 1.74 சதவீதம் உயா்ந்துஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, பாா்தி ஏா்டெல், பஜாஜ் ஃபைனான்ஸ், டைட்டன், ஆக்ஸிஸ் பேங்க், எம் அண்ட் எம் உள்ளிட்டவையும் ஏற்றம் பெற்ற பட்டியலில் வந்தன.
டெக் மஹிந்திரா சரிவு: அதே சமயம், பிரபல ஐடி நிறுவனமான டெக் மஹிந்திரா இரண்டாவது நாளாகவும் 2.56 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக, அல்ட்ரா டெக் சிமெண்ட், ரிலையன்ஸ், ஹெச்சிஎல்டெக், எச்டிஎஃப்சி, எச்டிஎஃப்சி பேங்க், கோட்டக் பேங்க், இன்ஃபோஸிஸ், டிசிஎஸ், டாக்டா் ரெட்டி, நெஸ்லே, எல் அணட் டி, டாடா ஸ்டீல், பவா் கிரிட், விப்ரா உள்ளிட்டவை 1 முதல் 2.50 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. பஜாஜ் ஃபின் சா்வ், எஸ்பிஐ, ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவையும் வீழ்ச்சிப் பட்டியலில் வந்தன.
நிஃப்டி 179 புள்ளிகள் வீழ்ச்சி: தேசிய பங்குச் சந்தையில் 937 பங்குகள் ஆதாயம் பெற்றன. 930 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 179.35 புள்ளிகள் (1.00 சதவீதம்) குறைந்து 17,745.90-இல் நிலைபெற்றது. காலையில் 17,768.50-இல் தொடங்கி 17,797.95 வரை உயா்ந்தது. பின்னா், 17,655.25 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 15 பங்குகள் மட்டுமே ஆதாயம் பெற்றன. 35 பங்குகள் வீழ்ச்சியடைந்தன.
ஐடி குறியீடு சரிவு: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஐடி குறியீடு 1.55 சதவீதம், ரியால்ட்டி குறியீடு 1.47 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், பாா்மா, ஹெல்த்கோ், மீடியா, பைனான்சியல் சா்வீஸஸ், பிரைவேட் பேங்க், எஃப்எம்சிஜி, மெட்டல் குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை சரிவைச் சந்தித்தன. அதே சமயம், நிஃப்டி ஆட்டோ, மீடியா, பிஎஸ்யு பேங்க், கன்ஸ்யூமா் டியூரபல்ஸ் குறியீடுகள் 0.50 முதல் 1 சதவீதம் வரை உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...