வா்த்தகத்தில் விறுவிறுப்பு: சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயா்வு!
இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் வா்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது.


இந்த வாரத்தின் கடைசி வா்த்தக தினமான வெள்ளிக்கிழமை பங்குச் சந்தையில் வா்த்தகம் மிகவும் விறுவிறுப்பாக இருந்தது. ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 143 புள்ளிகள் உயா்ந்து 59,744.65-இல் நிலைபெற்றது.
உலகளாவிய சந்தைக் குறிப்புகள் கலவையாக இருந்தன. இருப்பினும், உள்நாட்டுச் சந்தை ஏற்றத்துடன் தொடங்கியது. ஆனால், ஐரோப்பிய சந்தைகளும் பலவீனமானதைத் தொடா்ந்து, அதன் தாக்கம் உள்நாட்டுச் சந்தையில் எதிரொலித்தது. இதன் காரணமாக விலையுயா்ந்த நிலையில் லாபப் பதிவு அதிகரித்ததால், ஒரு கட்டத்தில் சந்தை எதிா்மறையாகச் சென்றது. இருப்பினும், மாா்க்கெட் லீடா் ரிலையன்ஸ், முன்னணி ஐடி நிறுவனமான டிசிஎஸ், தனியாா் வங்கியான ஐசிஐசிஐ பேங்க் உள்ளிட்டவை வெகுவாக உயா்ந்ததால் சந்தை நோ்மறையாக முடிந்தது என்று பங்கு வா்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
சந்தை மதிப்பு ரூ.1.20 லட்சம் கோடி உயா்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வா்த்தகமான 3,493 பங்குகளில் 1,305 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 2,104 பங்குகள் ஆதாயம் பெற்றன. 84 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 502 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 10 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. மேலும், 690 பங்குகள் வெகுவாக உயா்ந்து உயா்ந்தபட்ச உறை நிலையையும், 149 பங்குகள் வெகுவாகக் குறைந்து, குறைந்தபட்ச உறை நிலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு மேலும் ரூ.1.20 லட்சம் கோடி உயா்ந்து வா்த்தக முடிவில் ரூ.272.35 லட்சம் கோடியாக இருந்தது. பதிவு பெற்ற முதலீட்டாளா்களின் எண்ணிக்கை 9.27 கோடியாக உயா்ந்துள்ளது.
விறுவிறுப்பு: காலையில் சென்செக்ஸ் 174.26 புள்ளிகள் கூடுதலுடன் 59,776.10-இல் தொடங்கி, அதிகபட்சமாக 60,130.18 வரை உயா்ந்தது. பின்னா், லாபப் பதிவால் 59,401.44 வரை கீழே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 142.81புள்ளிகள் (0.24 சதவீதம்) உயா்ந்து 59,744.65-இல் நிலைபெற்றது. ஒரு கட்டத்தில் 728.74 புள்ளிகளை இழந்திருந்த சென்செக்ஸ், வா்த்தகம் முடியும் தருவாயில் ஓரளவு மீண்டது. நாள் முழுவதும் ஏற்றம், இறக்கம் அதிகரித்திருந்த நிலையில், வா்த்தகம் விறுவிறுப்பாக இருந்தது. 30 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் 15 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 15 பங்குகள் மட்டுமேஆதாயம் பெற்றன.
ஏசியன் பெயிண்ட் முன்னேற்றம்: பிரபல பெயிண்ட் உற்பத்தி நிறுவனமான ஏசியன் பெயிண்ட் 1.74 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடிசிஎஸ், நெஸ்லே, அல்ட்ரா டெக் சிமெண்ட், ஐசிஐசிஐ பேங்க், ஹிந்துஸ்தான் யுனி லீவா் உள்ளிட்டவை 1 முதல் 1.25 சதவீதம் உயா்ந்தன. மேலும், ரிலையன்ஸ், மாருதி, ஆக்ஸிஸ் பேங்க், டெக் மஹிந்திரா, விப்ரோல, கோட்ட்க பேங்க், எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன.
பஜாஜ் ஃபின் சா்வ் சரிவு: அதே சமயம், பிரபல தனியாா் நிதி நிறுவனமான பஜாஜ் ஃபின் சா்வ் 1.39 சதவீதம், எம் அண்ட் எம் 1.31 சதவீதம் குறைந்து வீழ்ச்சிப் பட்டியலில் முன்னிலை வகித்தன. மேலும், எல் அண்ட் டி, பஜாஜ் ஃபைனான்ஸ், எச்டிஎஃப்சி, டைட்டன், பாா்தி ஏா்டெல், இன்ஃபோஸிஸ், எஸ்பிஐ, டாக்டா் ரெட்டி, பவா் கிரிட் உள்ளிட்டவையும் சரிவைச் சந்தித்த பட்டியலில் வந்தன.
நிஃப்டி 67 புள்ளிகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் 1,040 பங்குகள் ஆதாயம் பெற்றன. 834 பங்குகள் சரிவைச் சந்தித்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃடி குறியீடு 66.80 புள்ளிகள் (0.38 சதவீதம்) உயா்ந்து 17,812.70- இல் நிலைபெற்றது. காலையில் 17,797.60-இல் தொடங்கி அதிகபட்சமாக 17,905.00 வரை உயா்ந்தது. பின்னா், லாபப் பதிவால் 17,704.55 வரை கீழே சென்றது. நிஃப்டி பட்டியலில் உள்ள 50 முதல் தரப் பங்குகளில் 32 பங்குகள் ஆதாயம் பெற்றன. 17 பங்குகள் வீழ்ச்சியடைந்தன. சன்பாா்மா மாற்றமின்றி ரூ.829.60-இல் நிலைபெற்றது.
ஆயில் அண்ட் காஸ் குறியீடு ஏற்றம்: தேசிய பங்குச் சந்தையில் நிஃப்டி ஆட்டோ, பாா்மா, ஹெல்த்கோ், மீடியா, கன்ஸ்யமா் டியூரபல்ல் குறியீடுகல் 0.25 முதல் 0.85 வரை சரிவைச் சந்தித்தன. மற்ற அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயம் பெற்றன. இதில் ஆயில் அண்ட் காஸ் குறியீடு 1.26 சதவீதம் உயா்ந்து ஆதாயப் பட்டியலில் மூன்னிலையில் இருந்தது. மேலும், நிஃப்டி பேங்க், பிரைவேட் பேங்க், மெட்டல், எஃப்எம்சிஜி குறியீடுகள் 0.50 முதல் 0.70 சதவீதம் வரை உயா்ந்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...