ஐடி, வங்கிப் பங்குகளுக்கு வரவேற்பு: சென்செக்ஸ் 1,040 புள்ளிகள் உயர்வு
பங்குச் சந்தையில் புதன்கிழமை ரியால்ட்டி, ஐடி, வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து,


பங்குச் சந்தையில் புதன்கிழமை ரியால்ட்டி, ஐடி, வங்கி மற்றும் நிதி நிறுவனப் பங்குகளை வாங்குவதற்கு நல்ல ஆதரவு கிடைத்ததைத் தொடர்ந்து, மும்பை பங்குச் சந்தைக் குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 1,040 புள்ளிகள் உயர்ந்து மீண்டும் 57,000 புள்ளிகளை நெருங்கியது.
ரஷியா - உக்ரைன் பிரச்னையைத் தொடர்ந்து உலகளாவிய சந்தைகளில் பங்குகள் விற்பனை அதிகரித்து வந்தது. இந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்படும் என்ற நம்பிக்கையின் காரணமாக பங்குச் சந்தைகள் ஏற்றம் பெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, உலக அளவில் பெரும்பாலான சந்தைகளில் புதன்கிழமை வர்த்தகம் நேர்மறையாக இருந்தது. அதன் தாக்கம், உள்நாட்டுச் சந்தையிலும் எதிரொலித்தது என்று பங்கு வர்த்தகத் தரகு நிறுவனங்கள் தெரிவித்தன.
குறிப்பாக, இன்ஃபோசிஸ், டிசிஎஸ், விப்ரோ, ஆக்ஸிஸ் பேங்க், எச்டிஎஃப்சி இரட்டை நிறுவனப் பங்குகள் வெகுவாக உயர்ந்து சந்தையின் ஏற்றத்துக்கு மேலும் வலுச் சேர்த்தன என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
2,306 நிறுவனப் பங்குகள் விலை உயர்வு: மும்பை பங்குச் சந்தையில் மொத்தம் வர்த்தகமான 3,534 நிறுவனப் பங்குகளில் 2,306 பங்குகள் ஆதாயம் பெற்றன. 1,128 பங்குகளின் விலை வீழ்ச்சியடைந்தன. 100 பங்குகள் மாற்றமின்றி நிலைபெற்றன. 112 பங்குகள் புதிய 52 வார அதிகபட்ச விலையையும், 23 பங்குகள் புதிய குறைந்தபட்ச விலையையும் பதிவு செய்தன. சந்தை மூலதன மதிப்பு ரூ.4.57 லட்சம் கோடி உயர்ந்து வர்த்தக முடிவில் ரூ.256.23 லட்சம் கோடியாக இருந்தது.
1,040 புள்ளிகள் ஏற்றம்: 5 நாள்களாக தொடர்ந்து ஏற்றம் பெற்றிருந்த சென்செக்ஸ், செவ்வாய்க்கிழமை சரிவைச் சந்தித்தது. இந்த நிலையில், புதன்கிழமை காலையில் சென்செக்ஸ் 778.48 புள்ளிகள் கூடுதலுடன் 55,555.33-இல் தொடங்கி, 56,389.26 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 56,605.89 வரை மேலே சென்ற சென்செக்ஸ், இறுதியில் 1,039.80 புள்ளிகள் (1.86 சதவீதம்) உயர்ந்து 56,816.65-இல் நிலைபெற்றது. பெரும்பாலான நேரம் சந்தை காளையின் ஆதிக்கத்தில் இருந்தது.
அல்ட்ரா டெக் சிமெண்ட் அபாரம்: 30 முதல்தரப் பங்குகளை உள்ளடக்கிய சென்செக்ஸ் பட்டியலில் சன்பார்மா, பவர் கிரிட் ஆகிய இரண்டு பங்குகள் தவிர, மற்ற 28 பங்குகளும் ஆதாயம் பெற்ற பட்டியலில் வந்தன. இதில் பிரபல சிமெண்ட் உற்பத்தி நிறுவனமான அல்ட்ரா டெக் சிமெண்ட், 4.69 சதவீதம் உயர்ந்து ஆதாயப் பட்டியலில் முன்னிலை வகித்தது. இதற்கு அடுத்ததாக ஆக்ஸிஸ் பேங்க், இன்டஸ்இண்ட் பேங்க் 3.65 சதவீதம் உயர்ந்தன. மேலும், இன்ஃபோசிஸ், பஜாஜ் ஃபைனான்ஸ், பஜாஜ் ஃபின் சர்வ், டாடா ஸ்டீல், எச்டிஎஃப்சி, ஐடிசி உள்ளிட்டவை 2 முதல் 2.70 சதவீதம் வரை உயர்ந்தன. விப்ரோ, டிசிஎஸ், எச்டிஎஃப்சி பேங்க், ரிலையன்ஸ், எஸ் பிஐ, கோட்டக் பேங்க் உள்ளிட்ட முன்னணி நிறுவனப் பங்குகளும் வெகுவாக ஏற்றம் பெற்றன.
நிஃப்டி 312 புள்ளிகள் உயர்வு: தேசிய பங்குச் சந்தையில் 1,387 பங்குகள் ஆதாயம் பெற்றன. 517 பங்குகள் மட்டுமே நஷ்டமடைந்த பட்டியலில் வந்தன. 50 முதல் தரப் பங்குகளை உள்ளடக்கிய நிஃப்டி குறியீடு 312.35 புள்ளிகள் (1.87 சதவீதம்) உயர்ந்து 16,975.35-இல் நிறைவடைந்தது. காலையில் 213.65 புள்ளிகள் கூடுதலுடன் 16,876.65-இல் தொடங்கிய நிஃப்டி, 16,837.85 வரை கீழே சென்றது. பின்னர், அதிகபட்சமாக 16,987.90 வரை உயர்ந்தது.
ரியால்ட்டி, பேங்க், ஐடி குறியீடுகள் முன்னேற்றம்: தேசிய பங்குச் சந்தையில் அனைத்துத் துறை குறியீடுகளும் ஆதாயப் பட்டியலில் வந்தன. இதில் நிஃப்டி ரியால்ட்டி குறியீடு 3.64 சதவீதம் உயர்ந்து பட்டியலில் முன்னிலை வகித்தது. மேலும், நிஃப்டி பேங்க், ஃபைனான்சியல் சர்வீஸஸ், ஆட்டோ, மெட்டல், பிரைவேட் பேங்க், கன்ஸ்யூமர் டியூரபல்ஸ், ஆயில் அண்ட் காஸ் குறியீடுகள் 2 முதல் 2.70 சதவீதம் வரை உயர்ந்தன. ஐடி, எஃப்எம்சிஜி குறியீடுகள் 1.8 சதவீதம் வரை உயர்ந்தன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...