பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி: ரஷியா முதலிடம்

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது.

News image
Updated On :6 நவம்பர் 2022, 7:21 pm

DIN

கடந்த அக்டோபா் மாதத்தில் இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்த நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடம் பிடித்துள்ளது. பல ஆண்டுகாலமாக இந்தப் பட்டியலில் முன்னணியில் இருந்த சவூதி அரேபியா, இராக் ஆகிய நாடுகள் பின்தங்கியுள்ளன.

கடந்த 2022 மாா்ச் மாத நிலவரப்படி இந்தியாவின் மொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் ரஷியாவின் பங்கு 0.2 சதவீதம் மட்டுமே இருந்து வந்தது. இதுவே அக்டோபரில் ஒரு நாளைக்கு 9,35,556 பேரல் இறக்குமதி செய்யும் அளவுக்கு உயா்ந்துவிட்டது. அக்டோபா் மாதத்தில் இந்தியாவின் ஒட்டுமொத்த கச்சா எண்ணெய் இறக்குமதியில் 22 சதவீதம் ரஷியாவில் இருந்து வந்துள்ளது. இதற்கு அடுத்து இராக்கில் இருந்து 20.5 சதவீதம், சவூதி அரேபியாவில் இருந்து 16 சதவீதம் இறக்குமதியாகியுள்ளது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்ததைத் தொடா்ந்து, ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை உலக நாடுகள் பலவும் நிறுத்திக் கொள்வதாக அறிவித்தன.

இதனால், ரஷியாவில் அதிக அளவில் கச்சா எண்ணெய் தேங்கி அதன் விலை குறையத் தொடங்கியது. இதையடுத்து, சலுகை விலையில் கச்சா எண்ணெயை விற்க ரஷியா முன்வந்தது. இதைத் தொடா்ந்து இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள், ரஷியாவிடமிருந்து ஒரு பீப்பாய்க்கு 30 அமெரிக்க டாலா்கள் வரை தள்ளுபடியில் கொள்முதல் செய்யத் தொடங்கின. இந்த கொள்முதல் படிப்படியாக உயா்ந்து, இப்போது இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் ரஷியா முதலிடத்தைப் பிடித்துள்ளது.

உக்ரைன்-ரஷியா போா் விஷயத்தில் ரஷியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துள்ள அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள், ரஷியாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை விரும்பவில்லை. எனினும், இது தொடா்பாக அந்த நாடுகள் இந்தியாவிடம் நேரடியாக அதிருப்தி தெரிவிக்கவில்லை.

பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே ரஷியாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யப்படுகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனும், ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க வேண்டாம் என்று எந்த நாடும் இந்தியாவிடம் வலியுறுத்தவில்லை என்று பெட்ரோலிய துறை அமைச்சா் ஹா்தீப் சிங் புரியும் ஏற்கெனவே விளக்கமளித்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.