பிப்ரவரி 2ஆம் தேதி காலை பங்குச் சந்தை வணிகம் தொடங்கியதும் அதானி குழுமத்துக்குச் சொந்தமான அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவீதம் வீழ்ச்சியடைந்தன.
அதானி குழுமம், கூடுதலாக ரூ.20 ஆயிரம் கோடி மதிப்பிலான கூடுதல் பங்குகளை விற்பனைக்குக் கொண்டு வரும் அறிவிப்பை நேற்று திரும்பப் பெற்றுக்கொண்டு, கூடுதல் பங்குகள் மீது முதலீடு செய்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம் கோடியை திரும்பக் கொடுக்கும் பணியைத் தொடங்கியிருக்கிறது.
தனது கூடுதல் பங்குகள் விற்பனையை ரத்து செய்யும் முடிவு வெளியான அடுத்த நாளே, அதானி குழுமத்தின் அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் கடும் சரிவை சந்தித்துள்ளன. அது மட்டுமல்லாமல், அதானி குழுமத்தின் பிற நிறுவனப் பங்குகளும் இறங்குமுகமாகவே உள்ளன.
மும்பை பங்குச் சந்தையில் வியாழக்கிழமை காலை அதானி என்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்குகள் 15 சதவிகிதம் விலை சரிந்து ரூ.1,809.40க்கு வணிகமாகின
இதுபோல, தொடர்ந்து ஆறாவது நாளாக, அதானி குழுமத்தின் இதர நிறுவனப் பங்குகளும் சரிவை சந்தித்து வருகின்றன. அதன்படி, அதானி துறைமுகம் 14 சதவிகிதமும், அதானி டிரான்ஸ்மிஷன் 10 சதவிகிதமும், அதானி கிரீன் எனர்ஜி 10 சதவிகிதமும், அதானி டோட்டல் காஸ் 10 சதவிகிதமும், அதானி வில்மர் 5 சதவிகிதமும், என்டிடிவி பங்குகள் 4.99 சதவிகிதமும், அதானி பவர் 4.99 சதவிகிதமும் விலை சரிவைக் கண்டன.
அதேவேளையில், அம்புஜா சிமெண்ட் நிறுவனப் பங்குகள் 9.68 சதவிகிதமும், ஏசிசி நிறுவனப் பங்குகள் 7.78 சதவிகிதமும் உயர்ந்துள்ளன.
அமெரிக்காவைச் சோ்ந்த ஹிண்டன்பா்க் நிறுவனம் கடந்த ஜன.24-ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில், பங்குச் சந்தையில் தனது பங்குகளின் மதிப்பை உயா்த்திக் காட்டுவதற்காக அதானி குழுமம் மோசடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் தொடர்ச்சியாக ஆறாவது நாளாக அதானி குழும பங்குகள் சரிந்துவருகிறது.
இந்நிலையில், ஆசியாவின் பணக்காரா்கள் பட்டியில் முதலிடம் வகித்து வந்த கெளதம் அதானி, அந்த இடத்தை இழந்தாா். இரண்டாம் இடம் வகித்து வந்த முகேஷ் அம்பானி முதலிடத்துக்கு முன்னேறியுள்ளாா்.