
தமிழக அரசின் தேர்தல் வாக்குறுதிகளில் மிக முக்கியமானதாகக் கருதப்படும் மகளிர் உரிமைத் தொகை திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக மாறியிருக்கிறது.
ஏதோ பெண்களுக்கு உதவித் தொகை வழங்கும் திட்டம் என்று கருதாமல், சமூகத்தில் சரிபாதியான பெண்களின் உழைப்பிற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், மகளிர் உரிமைத் தொகை என பெயரிட்டதும் பாராட்டுதல்களைப் பெற்றது.
குடும்பத்திற்காக அயராது உழைத்துக் கொண்டிருக்கும் பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்தி, சமூகத்தில் சுயமரியாதையோடு வாழ்வதற்கு வழிவகுக்க வேண்டும் என்ற சீரிய நோக்கத்திற்காக குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000/- உரிமைத் தொகையாக வழங்கிட தமிழக அரசால் ‘கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம்’ செயல்படுத்தப்படுகிறது.
குடும்பத்துக்காக உழைக்கும் மகளிருக்கு, குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோர் மாதம் ஒரு சிறு தொகையை வழங்க வேண்டும் என்றாலே, பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு பரவும். அப்படியிருக்கையில், ஒட்டுமொத்த தமிழகத்தைச் சேர்ந்த உழைக்கும் பெண்கள், தங்களது அடிப்படைத் தேவைகளுக்குக் கூட கையேந்தும் நிலையை மாற்றி, சமூகத்தில் மரியாதையோடு வாழ இந்த திட்டம் வழிவகுக்கும் என்று சொன்னால் அதில் மாற்றுக்கருத்தில்லை. இதன் மூலம், நம் நாட்டின் பல மாநிலங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை திட்டம் முன்னோடி திட்டமாக மாறியிருக்கிறது.
இவ்வாறு சொல்வதற்குக் காரணம், ஏற்கனவே, பல மாநிலங்களில், தேர்தல் பிரசாரத்தின்போது சில கட்சிகள் இந்த திட்டத்தை வாக்குறுதிகளில் சேர்த்துவிட்டன.
இந்தத் திட்டத்தில் மாநிலம் முழுவதும் விண்ணப்பங்கள் இரண்டுகட்ட முகாம்கள் மற்றும் ஒரு சிறப்பு முகாம் வழியாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டன.
கலைஞர் மகளிர் உரிமைத்திட்டத்தின் கீழ் பெறப்பட்ட விண்ணப்பங்கள் அனைத்தும் அரசிடம் உள்ள பல்வேறு தகவல் தரவு தளங்களில் உள்ள தகவல்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டும் மற்றும் அரசு அலுவலர்களால் நேரடி கள ஆய்வுகளின் மூலம் சரிபார்க்கப்பட்டும், திட்ட விதிமுறைகளைப் பூர்த்தி செய்த 1.065 கோடி மகளிர் பயனாளிகளாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா என்ற விண்ணப்ப முடிவு நிலை குறித்த குறுஞ்செய்தி விண்ணப்பதார்களின் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணிற்கு 18.09.2023 முதல் அனுப்பி வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்ல, இவ்வாறு ஏற்கப்படாத விண்ணப்பதாரர்கள் மேல்முறையீடும் செய்யலாம்.
முதல்வர் ஸ்டாலின் என்ன சொல்கிறார்?
தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய திட்டம் என்றால் இதுதான். ஒரே நேரத்தில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்கள், ஆயிரம் ரூபாயை மாதந்தோறும் பெறப் போகிறாா்கள். அதிகப்படியான நிதி ஒதுக்கீடும், கூடுதலான பயனாளிகளைக் கொண்ட திட்டமாகவும் இது அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ரூ.12,000 கோடி ஒதுக்கீட்டில் ஒரு கோடிக்கும் மேற்பட்ட மகளிா் மாதந்தோறும் பயனடையும் மாபெரும் திட்டம் மகளிா் உரிமைத் தொகை திட்டமாகும் என்று தெரிவித்திருந்தார்.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால், பெரும்பாலான பெண்களின் வாழ்வாதாரமும் குடும்பப் பொருளாதாரமும் மேம்படும் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
வணிகப் பெருக்கச் செய்தி
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.